Published:Updated:

`கெவினுக்காகப் போராடினார்; பட்ட கஷ்டங்கள் அதிகம்!'- ஆணவக் கொலையில் சகோதரனைச் சிறைக்குத் தள்ளிய நீனு

மலையரசு

எந்த சப் - இன்ஸ்பெக்டர் முன்பு கெவின் கடத்தப்பட்டபோது, நீனு கண்ணீரும் கம்பலையுமாக புகார் அளித்தாரோ அதே சப் - இன்ஸ்பெக்டரிடம் தைரியமாகப் பேசி, அவரின் பாதுகாப்புடனே கல்லூரிப் படிகளில் ஏறினார்.

kevin - Neenu
kevin - Neenu ( twitter )

கேரள தேசத்துக்கு மோசமான ஆண்டு என்றால் அது 2018 தான். பிரளயம் ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் ஆதிரா... கெவின் ஜோசப் மாநிலம் இதுவரை சந்திக்காத ஆணவப் படுகொலைகளும் இந்த வருடத்தில் அரங்கேறின. கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கெவின் ஜோசப். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர் உயர்சாதி கிறிஸ்தவப் பெண்ணான நீனு சாக்கோவைக் காதலித்துவந்துள்ளார். இரண்டு ஆண்டு காதலை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல நினைத்தவர்கள் 2018ம் ஆண்டு மே மாதம் நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

kevin - Neenu
kevin - Neenu

கெவினுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்க்கையைத் தொடங்கினார் நீனு. ஆனால் அந்த மகிழ்ச்சி மூன்று நாள்கூட நீட்டிக்கவில்லை. தொடங்கிய மூன்றாவது நாளே அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது. நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, சகோதரர் சானு சாக்கோவுக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை. தங்கள் பெண்ணை அழைத்துச்சென்ற கெவின் ஜோசப்பைப் பழிவாங்க முடிவெடுத்தனர். கெவினைக் கடத்திய கும்பல், அவரைத் தென்மலையில் வைத்துக் கொலை செய்தது. கெவினைக் கொல்வதற்கு முன் அவரைக் கடுமையாக சித்ரவதை செய்ததோடு முகத்தையும் சிதைத்துள்ளனர். இந்தக் கும்பலை சானு சாக்கோ தான் வழிநடத்தி இந்தப் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்தக் கொலை நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் முடியவுள்ள நிலையில் கோட்டயம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், கொலைக்கு சானு சாக்கோ முக்கிய காரணம் எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர் உட்பட 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். அதேநேரம் நீனுவின் தந்தை ஜான் சாக்கோ உட்பட நால்வரை விடுதலை செய்துள்ளனர்.

kevin's body
kevin's body

ஜான் சாக்கோ குற்றத்துக்கு உதவியதை விசாரணையில் தெளிவுபடுத்த முடியவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்துள்ளனர். எனினும் ``கொலையில் தந்தை ஜான் சாக்கோவுக்கும் தொடர்பு இருக்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. ஜான் சாக்கோ விடுதலையை எதிர்த்தும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வலியுறுத்தியும் உயர் நீதிமன்றம் செல்வோம்" எனக் கூறியுள்ளனர் நீனுவும், கெவினின் தந்தை ஜோசப்பும்.

கெவினுக்காகப் போராடிய நீனு!

இப்படிக்கூறினாலும் இந்தத் தண்டனையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீனு பட்ட கஷ்டம் அதிகம். திருமணம் முடிந்த மறுநாளே ஜான் சாக்கோ கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்குக் கெவின் மற்றும் நீனுவை வரவழைத்துள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சிபு. போலீஸ் நிலையத்தில் புதுமணத் தம்பதி திருமணம் முடித்ததற்கான ஆவணங்களைக் காட்டியுள்ளனர். அதையெல்லாம் சட்டை செய்யாத சிபு, ஜான் சாக்கோவிடம் `உங்கள் மகளை அடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு போங்கள்' என்று கூற நீனு `வாழ்ந்தால் கெவினுடன்தான் வாழ்வேன்' என்று உறுதியாகக் கூறிவிட சப்-இன்ஸ்பெக்டரின் உத்தரவு எடுபடவில்லை. 

Neenu with kevin's father
Neenu with kevin's father

இந்நிலையில்தான் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நண்பர் அனீஷ் உடன் இருந்தபோதுதான் 13 பேர் கொண்ட கும்பலால் கெவின் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். கோட்டயம் காந்திநகர் போலீஸ் நிலையத்துக்கு ஓடிய நீனு புகார் அளித்திருக்கிறார். போலீஸ் நிலையத்தில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சிபு, நீனுவின் புகாரைக் கண்டுகொள்ளவே இல்லை.. நீனு புகார் கொடுத்த போது, `நான் சி.எம். டியூட்டியில் பிசி. இப்போது இதையெல்லாம் பார்க்க முடியாது' என்று சிபு அலட்சியமாக பதில் கூறியிருக்கிறார். சப் - இன்ஸ்பெக்டர் காட்டிய அலட்சியத்தின் விளைவு... கெவின் உயிரைவிட நேர்ந்தது. இந்தமாதிரியான செயல்பாடுகளால் நீனு முடங்கிவிடவில்லை.

வருத்தத்தை மறைத்து கெவின் இறந்த துக்கத்தில் இருந்தவர் மீண்டெழுந்தார். கெவின் கொலை நடந்து 17 நாள்களுக்குப் பிறகு, நீனு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே வந்தார். எந்த சப் - இன்ஸ்பெக்டர் முன்பு கெவின் கடத்தப்பட்டபோது, நீனு கண்ணீரும் கம்பலையுமாக புகார் அளித்தாரோ அதே சப் - இன்ஸ்பெக்டரிடம் தைரியமாகப் பேசி, அவரின் பாதுகாப்புடனே கல்லூரிப்படிகளில் ஏறினார். கெவினின் பெற்றோர் அளித்து ஆறுதலில் தேறியவர் மீண்டும் கல்லூரிப் படிப்பைத் தொடங்கினார்.

neenu
neenu

கெவினின் வீட்டிலேயே தங்கிய நீனு.. கெவினின் குடும்பத்தைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக அங்குள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து தனது செலவைத் தானே பார்த்துக்கொள்கிறார். கெவின் மரணத்தால் முடங்கிவிடாமல் கல்லூரிக்குச் சென்றார். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நன்றாகப் படித்து கல்லூரி ஸ்காலர்ஷிப்பில் இறுதியாண்டை முடித்துள்ளார். ஒருபுறம் படிப்பில் கவனம் செலுத்திவந்த அதேவேளையில் மறுபுறம் கொலைக்குக் காரணமான தனது தந்தை, சகோதரருக்கு எதிராக நீதிமன்ற படிக்கட்டுகளிலும் தவறாமல் ஏறிவந்தார்.

21 வயதான நீனு கடந்த 6 மாதங்களில் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம், அவதூறு அதைவிட அவரின் குடும்பம் கொடுத்த குடைச்சல்கள் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு தனியொரு பெண்ணாக கெவினுக்கு நீதி கிடைக்க அனைத்துப் பின்னடைவுகளையும் எதிர்த்துப் போராடினார். இதற்கு ஒரு உதாரணம்.. கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு நடைபெற்றுவரும்போதே நீனுவின் தந்தை ஜான் சாக்கோ, நீதிமன்றத்தை நாடி ஒரு மனு அளித்தார். ``நீனுவுக்கு மனநிலை சரியில்லை. இதற்காகச் சிகிச்சை எடுத்துவருகிறார். எனவே தன் மகள் தன் வீட்டில்தான் இருக்க வேண்டும்'' எனக் கூறினார். இதையே அடிக்கடி மீடியாக்களிடம் பேசும்போதும் சொன்னார்.

neenu's father and brother
neenu's father and brother

ஆனால் இதையெல்லாம் ஆதாரபூர்வமாக உண்மையில்லை என்பதை நிரூபித்த நீனு, ``என் தந்தை, சகோதரரால் கெவினின் உடலைத்தான் என்னிடம் இருந்து பிரிக்க முடிந்தது. உயிரை அல்ல. இன்னும் என்னுடன்தான் கெவின் இருக்கிறார். எனது தந்தையும் தாயும் கலப்பு திருமணம்தான் செய்துள்ளனர். ஆனாலும் எங்கள் காதலுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கெவின் பட்டியலினம் என்பதாலே அவரை எதிர்த்தனர். அவர்கள் கொலைக்கு எனது குடும்பத்தினர்தான் முழுக் காரணம். கெவினின் பெற்றோர் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை. இருப்பினும் அவர்கள் என் மீது மிகுந்த அன்பு காட்டிவருகின்றனர்.

வாழ்க்கையில் என்னைக் கவர்ந்த ஒரே விஷயம் அவர்களின் அன்பே. அவர்கள் என்னை நிராகரித்திருந்தால், நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். கெவின் ஜோசப்பின் பெற்றோர் அனுமதிக்கும் வரை அவர்களுடன்தான் தங்குவேன்'' என்று நீதிபதிகள் முன்பே உறுதிப்பட கூறினார். இடையில் கொலை மிரட்டல்... பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தவர் அத்தனையும் தனது தைரியத்தால் கடந்த நீனு கெவினின் பெற்றோர்கள் உதவியுடன் இந்தத் தீர்ப்பை பெற்றுள்ளார்.

kevin's family
kevin's family

``எனக்கு ஏற்பட்ட நிலைமை இன்னொரு பெண்ணுக்கு வந்துவிடக் கூடாது எனத் தினமும் கடவுளை வேண்டி வருகிறேன். வாழ்க்கையில் நான் தோல்வி அடைய வேண்டும் எனச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், நான் தோல்வியடைந்தால், அது கெவின் ஆத்மாவைக் காயப்படுத்தும். நான் என் கெவினுக்காக வாழ வேண்டும். கெவினின் மனைவியாகவே வாழ வேண்டும்" எனக் கூறும் நீனு சிவில் சர்வீஸ் தேர்வெழுத வேண்டுமென்ற தனது லட்சியத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்.