Published:Updated:

`காட்மேன்' இயக்குநருக்கு எதிராக தொடர் அவதூறு! - போலீஸ் வலையில் சிக்கிய நெல்லை `வண்ணத்துப் பூச்சி'

 ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

சமூக வலைதளம் ஒன்றில் காட்மேன் தொடர் இயக்குநரின் மனைவி குறித்து ஆபாசமாக கருத்துகள் மற்றும் படங்களைப் பதிவிட்டிருந்தார்.

சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இணையதள தொடரின் தயாரிப்பாளர் மனைவி மற்றும் மத கடவுள்களை மோசமாக சித்திரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த நெல்லை இளைஞரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலிக் கணக்கில் அவதூறு
போலிக் கணக்கில் அவதூறு

`காட்மேன்' என்ற இணையதள தொடரின் டிரைலரில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை நிலவி வருகிறது. இதுதொடர்பாக, அந்தத் தொடரின் இயக்குநர் உள்ளிட்டோர் மீது புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமூக வலைதளம் ஒன்றில் காட்மேன் தொடர் இயக்குநரின் மனைவி குறித்து தவறான கருத்துகள் மற்றும் படங்கள் பதிவிடப்பட்டிருந்தன. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நடவடிக்கை எடுக்குமாறு சிலர் புகார்களைப் பதிவிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் காவல்துறை சமூக ஊடகப் பிரிவு போலீஸார், புகாருக்குள்ளான சமூக வலைதளப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, அது போலியான பெயரில் இயங்கிய சமூக வலைதள கணக்கு என்பதும், அதில் மதக் கடவுள்களுக்கு எதிரானவர்களை தவறாகச் சித்திரித்து பதிவிட்டிருப்பதும் தெரியவந்தது.

சண்முகசுந்தரம்
சண்முகசுந்தரம்

இதையடுத்து, மாவட்ட காவல்துறையின் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான சிறப்புக் குழுவினர், போலியான பெயரில் இயங்கிய வண்ணத்துப்பூச்சி என்ற இணையதள கணக்கை கண்காணிக்கத் தொடங்கினர்.

அது போலியான கணக்கு என்பதால் அதை இயக்கும் நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின் இணையதள இணைப்புக்குப் பயன்படுத்திய மொபைல் எண்ணைக் கண்டறிந்து விசாரணை நடத்தியதில் அது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (32) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

உடனடியாக நெல்லை சென்ற சிறப்புக் குழு சண்முகசுந்தரத்தை கைது செய்து அவருடைய மொபைலையும் பறிமுதல் செய்தனர். பின் மொபைலை ஆய்வு செய்தபோது யூடியூப், ட்விட்டர், ஹலோ, இன்ஸ்டாகிராம் போன்ற அப்ளிகேஷன்களை சில போலியான கணக்குகளில் கிரியேட் செய்து பதிவிறக்கம் செய்ததும் அதில் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் பதிவுகளை பதிவிட்டிருப்பதும் தெரியவந்தது.

வருண்குமார் எஸ்.பி
வருண்குமார் எஸ்.பி

இதையடுத்து சண்முகசுந்தரத்தைப் பிடித்து விசாரித்தபோது, அவர் உள்நோக்கத்துடனும் சமுதாய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் நோக்கத்திலும் ஆபாசக் காட்சிகளை சித்திரிப்பு செய்து பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீஸார் சண்முகசுந்தரத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு