ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டியலின புதுமணத் தம்பதியை, பூசாரியொருவர் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து வாக்குவாதம் செய்த வீடியோ, கடந்த சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, கோயில் பூசாரிமீது பட்டியலினத் தம்பதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், அவரை ராஜஸ்தான் போலீஸ் நேற்று கைதுசெய்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்திலுள்ள நீலகந்த் கிராமக் கோயிலில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக போலீஸில் புகாரளித்த பட்டியலினத் தம்பதியின் உறவினரான தாரா ராம், ``திருமணத்துக்குப் பிறகு கோயிலில் தேங்காய் சமர்ப்பிக்க நாங்கள் விரும்பினோம். அப்போது நாங்கள் கோயிலுக்குச் சென்றபோது, கோயில் பூசாரி எங்களைக் கோயிலுக்கு வெளியிலேயே நிறுத்தி தேங்காய் கொடுக்கச் சொன்னார்.

நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களைக் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று பூசாரி கூறினார். நாங்கள் எவ்வளவோ முறையிட்டும், பூசாரி பிடிவாதமாகவே இருந்தார். மேலும், கிராமத்தைச் சேர்ந்த சிலரும் பூசாரிக்கு ஆதரவாகவே பேசினர்" என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ஜாலோர் மாவட்ட காவல் ஆய்வாளர் ஹர்ஷ் வர்தன் அகர்வாலா, குற்றம்சாட்டப்பட்ட பூசாரியை, பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்திருப்பதாக விளக்கமளித்திருக்கிறார்.
