Published:Updated:

சிக்கிய லேப்டாப், மெமரி கார்டுகள்! - காயல்பட்டினம், நாகூரில் என்.ஐ.ஏ நடத்திய `திடீர்' ரெய்டு

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தமிழகத்தில் 6 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

இந்து முன்னணி செய்தித்தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கு, இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் வழக்கு, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு போன்றவை தொடர்பாக தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கோவையில் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

இதன் ஒருபகுதியாக, இன்று உக்கடம் பகுதியில் ஜி.எம் நகரைச் சேர்ந்த சமீர் என்பவரது வீட்டிலும் லாரிபேட்டையில் செளருதீன் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக, கோவையில் ஏற்கெனவே கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களின் வீடுகளிலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

என்.ஐ.ஏ சோதனை
என்.ஐ.ஏ சோதனை

அதன் அடிப்படையில் இன்று சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சோதனை காரணமாக, அந்தப் பகுதியில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, 'ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த அசாருதீன் மற்றும் ஹிதாயதுல்லா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

அவர்களை நேற்று கஸ்டடியில் எடுத்து விசாரித்தோம். அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் இன்று சோதனை நடத்தினோம். இதில், லேப்டாப், சிம்கார்டு மற்றும் மெமரிகார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்' என்றார்.

சமீர் மற்றும் செளருதீன் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

காயல்பட்டினம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

காயல்பட்டினம் கே.டி.எம் தெருவைச் சேர்ந்த ரிபாய்தீன் என்பவரின் மகன் அபுல் ஹசன் சாதூலி (27). இவர், வாடகை கார் டிரைவராகப் பணிபுரிந்துவருகிறார். இன்று காலை 6 மணியளவில், சாதூலியின் வீட்டை தேசியப் புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

NIA
NIA

6 மணி முதல் 10.15 மணி வரை நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஒரு செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். இந்தச் சோதனையின்போது அபுல் ஹசன் சாதூலி வீட்டில் இல்லை. அதனால், சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி வீட்டில் உள்ளவர்களிடம் சம்மன் அளித்துள்ளனர்.

"ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து சமூக வளைதளங்களில் பதிவு மட்டும்தான் போட்டுள்ளார். அது தவிர, வேறெந்த அமைப்புகளுடனும் அபுலுக்குத் தொடர்பில்லை" என அதிகாரிகளிடம் கூறியுள்ளனர் அபுலின் உறவினர்கள்.

பாதுகாப்புப் பணியில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீஸார் ஈடுபட்டிருந்தனர். தொடர் மழை பெய்துகொண்டிருந்த நிலையிலும் அதிகாலை 6 மணி முதலே திடீர் சோதனை நடைபெற்றதால், காயல்பட்டினத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிக்கிய லேப்டாப், மெமரி கார்டுகள்! - காயல்பட்டினம், நாகூரில் என்.ஐ.ஏ நடத்திய `திடீர்' ரெய்டு

இந்து இயக்கத் தலைவர்களைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரை என்.ஐ.ஏ ஏற்கெனவே கைதுசெய்துள்ளது. அதுதொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்ட நிலையில், ரகசியத் தடயங்கள் மற்றும் புதிய தகவலின் அடிப்படையில் கூடுதலாகச் சிலர் வீடுகளில் இன்றைய சோதனை நடைபெற்றுவருகிறது என விளக்கம் அளித்துள்ளது, என்.ஐ.ஏ தரப்பு.

நாகூர்

நாகை மாவட்டம், நாகூர் மியாந்தெரு சாதிக்அலி என்பவரது வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். கொச்சியிலிருந்து விரைந்து வந்த டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான 3 என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் தமிழக போலீஸார் 10-க்கும் மேற்பட்டோர், நாகூரை அடுத்த சன்னமங்கலம் சேவா பாரதி பகுதியில் வசித்துவந்த முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்தனர்.

நாகூர்
நாகூர்

ஆனால், அங்கு முஹம்மது அஜ்மல் வீட்டில் இல்லை. நாகூர் மியாந் தெருவில் உள்ள அவரது உறவினர் சாதிக்அலி வீட்டில் இருந்தது தெரியவந்தது. பின்னர், நாகூர் மியாந் தெரு வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், உறவினர் வீட்டில் தங்கியிருந்த முஹம்மது அஜ்மலிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனையால் நாகூரில் பரபரப்பு நிலவிவருகிறது.