Published:Updated:

``கருணை என்ற ஒற்றை வார்த்தை காப்பாற்றுகிறது!'' நிர்பயா வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் கருத்து

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

திகார் சிறையில் சக கைதிகள் தங்களை அடித்து துன்புறுத்தியதாக நிர்பயா வழக்கு குற்றவாளி அளித்துள்ள கருணை மனுவில் கூறியுள்ளார்.

திகார் சிறையில் 10,000-க்கும் மேற்பட்டுள்ள கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, கடும் குற்றம் செய்துவிட்டு வரும் கைதிகளை மற்ற கைதிகள் கடுமையாகத் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. அந்த வகையில், நிர்பயா குற்றவாளிகளையும் மற்ற சிறைக்கைதிகள் அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளை பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிட முடிவு செய்யப்பட்டிருந்தது.

திகார் சிறை
திகார் சிறை

தூக்கிலிடுவதை தள்ளிப்போடும் வகையில், நிர்பயா குற்றவாளிகள் மாறி மாறி கருணை மனு அளித்துக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்றம் கருணை மனுவைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா குடியரசுத் தலைவரிடத்தில் கருணை மனு அளித்துள்ளார். மனுவில் பல்வேறு தகவல்களையும் அவர் கூறியுள்ளார். அதில், திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் முதலே தன்னை போலீஸார், சக கைதிகள் டார்ச்சர் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கருணை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ``திகார் சிறையில் என்னை அடைத்த முதல் நாளே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸார் என்னைக் கடுமையாகத் தாக்கினர். இந்தச் சமயத்தில் தலைமை வார்டன்தான் என்னைக் காப்பாற்றினார். இல்லையென்றால், நான் அன்றே இறந்திருப்பேன். ஆனால், வார்டனால் அடிக்கடி எனக்குப் பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. திடீரென்று, 15-20 பேர் கொண்ட கும்பல் என்னைச் சுற்றி நின்று அடித்து துன்புறுத்துவார்கள். நான் வலியில் கத்தினாலும் அடிப்பதை நிறுத்த மாட்டார்கள். ஒரு முறை அடித்த அடியில் நான் மயங்கி விட்டேன். கண் விழித்தபோது, மருத்துவமனையில் நான் இருந்தேன்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சக கைதிகள் எங்களைப் பார்க்கும் இடங்களில் அடிப்பதால், சிறை அதிகாரிகள் எங்களைத் தனித்தனி சிறிய அறைகளுக்கு மாற்றினார்கள். அறையில் கழிவறை கிடையாது. இதனால், அறையின் மூலையில் இயற்கை உபாதைகளைக் கழிப்பேன். அங்கேயே, எனக்கு சாப்பாடு தருவார்கள். என் கண் முன்னரே உணவில் எச்சில் துப்பித் தருவார்கள். விலங்குபோலத்தான் நான் சிறையில் இருந்தேன். நான் உறங்கும்போது என் போர்வையின் மீது வெளியிலிருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். இதனால், என்னால் உறங்க முடியாது. இரவு முழுவதும் குளிரில் நடுங்கிக்கொண்டே இருப்பேன்.

`தூக்கிட்டுக் கொள் அல்லது விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்... இல்லையென்றால் உன் பெற்றோரைத் தாக்குவோம் ' என்றும் மிரட்டுவார்கள். தற்கொலை செய்ய பல வழிகளில் யோசிப்பேன். மின்சார பல்ப் வயரை கடித்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசிப்பேன். ஆனால், என் அறைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு எப்போதும் உண்டு. அதனால், என்னால் தற்கொலை செய்துகொள்ள முடியவில்லை. சிறையில் இருந்த ராம் சிங்கையும் பல வழிகளில் சித்ரவதை செய்தனர். பாலியல்ரீதியாக அவரை துன்புறுத்தினர். இதனால், அவர் தற்கொலை செய்துகொண்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம் சிங், முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா, வினய் சிங், சிறார் குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, சிறையில் ராம் சிங் தற்கொலை செய்துகொண்டார். சிறார் குற்றவாளி 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியுள்ள நான்கு பேரும் தூக்கு மேடையை எதிர்நோக்கியுள்ளனர்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட ஜனவரி 17-ம் தேதி இரண்டாவது முறையாக `கறுப்பு வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. வினயின் கருணை மனு குடியரசுத் தலைவரிடத்தில் இருப்பதால், மற்ற குற்றவாளிகள் 3 பேரை நேற்று காலை தூக்கிலிட திகார் சிறை நிர்வாகம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. ஆனால், எதிர்தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் `கூட்டு குற்றவாளிகளாக இருப்பதால், ஒருவரை விடுத்து மற்றவர்களைத் தூக்கிலிட சட்டத்தில் இடமில்லை ' என்று வாதிட்டார். வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி தர்மேந்தர் ராணா நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத்தண்டனையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வினய் சர்மா ஏற்கெனவே பல முறை இறந்துவிட்டார்.
வழக்கறிஞர் ஏ.பி.சிங்

நீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஒத்திவைத்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று வினய் சர்மாவின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார். இதனால், குற்றவாளிகள் 4 பேரையும் ஒன்றாக தூக்கிலிடும் பணிக்கு மீண்டும் ஆயத்தமாகி வருகிறது சிறை நிர்வாகம். நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை தள்ளிப் போவதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலே காரணம் என்றும் தன் மகளின் இறப்பு அரசியலாக்கப்படுவதாகவும் நிர்பயாவின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் கூறுகையில், ``வினய் சர்மாவின் வேதனைக் கதையைக் கேட்க யாரும் தயாராக இல்லை. ஏற்கெனவே அவர் பல முறை இறந்துவிட்டதாகவே கருதுகிறார்'' என்று கூறியுள்ளார்.

வழக்கறிஞர் வில்சன்
வழக்கறிஞர் வில்சன்

நிர்பயா குற்றவாளிகள் தூக்குத்தண்டனை தள்ளிப்போவதற்கான காரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வில்சனிடத்தில் கேட்டபோது, ``குற்றவாளிகள் மூர்க்கத்தனமான காரியத்தை செய்திருந்தாலும், தூக்குத்தண்டனைக் கைதிகள் என்பதால் சட்டத்திலுள்ள எல்லா வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்குவார்கள். ஏனென்றால், உயிர் பறிப்பு சம்பந்தமான விஷயம் இது. சிம்பிளா சொல்லணும்னா `கருணை' என்ற ஒற்றை வார்த்தையால்தான் அவர்களைத் தூக்கிலிடும் பணி தள்ளிப் போகிறது'' என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு