Published:Updated:

`போலீஸார் நல்ல செயலைச் செய்துள்ளனர்!' - வரவேற்கும் நிர்பயா தந்தை

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது போன்ற உணர்வை அடைகிறேன். தெலங்கானா போலீஸாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு குற்றவாளிகளை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். தெலங்கானா போலீஸாரின் இந்த நடவடிக்கையை நிர்பயாவின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு பெண்கள் அமைப்புகள் உட்பட பலரும் குரல் கொடுத்தனர்.

கால்நடை பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இடம்
கால்நடை பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இடம்

இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்த நிலையில், இதில் தொடர்புடைய லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நான்கு பேரும் திட்டமிட்டு நாடகமாடி பெண் மருத்துவரின் வண்டியை பஞ்சராக்கியதாகக் கூறினர். பின்னர், அவரைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைசெய்து எரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டனர். உயிரோடு பெண் மருத்துவர் எரிக்கப்பட்ட இந்தச் சம்பவம் நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய அந்த நான்கு பேரைத் தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கைள் எழுந்தன. இந்த நிலையில்தான் தெலங்கானா போலீஸார் இன்று அதிகாலையில், நான்கு பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டும்படி போலீஸார் விசாரணையின்போது கூறியுள்ளனர். அப்போது கடைசியாக மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு வந்தபோது, அங்கு ஆரிப் என்ற குற்றவாளி தப்பிக்க முயன்று போலீஸாரின் துப்பாக்கியைப் பிடுங்கி மிரட்டியுள்ளான். இந்த நிலையில்தான் பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த நான்கு பேர் மீதும் போலீஸார் என்கவுன்டர் நடத்தியதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

என் கவுன்டர் நடந்த இடம்
என் கவுன்டர் நடந்த இடம்

"போலீஸாரின் இந்த என்கவுன்டர் நடவடிக்கையைப் பலரும் வரவேற்றுள்ளனர். இதில் நிர்பயாவின் பெற்றோர் தெலங்கானா போலீஸாரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். நிர்பயாவின் தாய் ஆஷா தேவி பேசுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்துக்கொண்டிருக்கிறோம். என் மகளுக்கு கொடுமை இழைத்தவர்களைத் தூக்கில் போடுங்க என்று நீதிமன்றம் நீதிமன்றமாக அலைகிறோம். ஆனால், நீதிமன்றமோ இது மனித உரிமை விவகாரம் தூக்குத்தண்டனை கொடுக்க முடியாது என்று கூறுகிறது. ஆனால், இன்று தெலங்கானா பேலீஸாரின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது போன்ற உணர்வை அடைகிறேன். தெலங்கானா போலீஸாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று" கூறியுள்ளார்.

நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் பேசுகையில், ``என் மகளைச் சீரழித்த குற்றவாளிகள் உயிரோடு இன்றும் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், இன்னும் உயிரோடு இருப்பது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அந்த வகையில் தெலங்கானா மருத்துவர் கொலையில் குற்றவாளிகள் மீது என்கவுன்டர் நடத்தியிருப்பது வரவவேற்கத் தக்கது. போலீஸார் ஒரு நல்ல செயலைச் செய்துள்ளனர்" என்று பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு