Published:Updated:

`இதுவரை எந்தத் தகவலும் இல்லை' -சேலம் பெண் கடத்தப்பட்ட வழக்கில் என்ன நடக்கிறது?

காதல் ஜோடி
காதல் ஜோடி ( க. தனசேகரன் )

பெண்ணை கடத்திச்சென்று 3 நாள்கள் கடந்த நிலையில்... பெண் எங்கு, எப்படி இருக்கிறார் என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9-ம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் சாதிச் சங்க கும்பல் கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணை கடத்திச்சென்றனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்
க. தனசேகரன்

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், 3 நாள்கள் கடந்தும் இன்னும் அந்தப் பெண்ணை மீட்காமல் இருப்பது தமிழக காவல்துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர், செல்வன். பவானி குருப்பநாயக்கம்பாளையம் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண், இளமதி. இருவரும் ஒரே கம்பெனியில் வேலைபார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டு, காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட பின்னர், இந்த விபரீதம் நடந்தது.

விசிக
விசிக
க. தனசேகரன்

இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ''கடந்த 9-ம் தேதி, செல்வனும் இளமதியும் ஒருவரை ஒருவர் விரும்பி சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டார்கள். அன்று இரவு, 60 பேர் கொண்ட சாதியக் கும்பல் காதல் தம்பதியினரையும், திருமணத்தை நடத்திவைத்த எங்கள் தோழர் ஈஸ்வரனையும் அடித்துப்போட்டுவிட்டு, பெண்ணைக் கடத்திச்சென்றுவிட்டார்கள்.

பெண்ணைக் கடத்திச்சென்று 3 நாள்கள் கடந்த நிலையில்... பெண் எங்கு, எப்படி இருக்கிறார் என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கியமானவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதால், பெண்ணை மீட்க முடியவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. காவல்துறை இன்னும் வேகமாக பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்'' என்றார்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி
க. தனசேகரன்

விடுதலைச் சிறுத்தைகளின் இளஞ்சிறுத்தைகள் பாசறையின் மாவட்ட அமைப்பாளர் சாம்ராய்குரு, ''எங்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி, பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறிவிட்டு வந்தோம். பிறகு, காவல்துறையினரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறிய பதில் திருப்திகரமாக இல்லை. சம்பவம் நடந்தது கொளத்தூரில். ஆனால், ஈரோடு போலீஸார் பெண்ணைத் தேடிவருவதாகச் சொல்லுகிறார்கள்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணைக் கடத்திய கும்பலுக்குப் பின்னால் சாதியவாதிகளும், அரசியல்வாதிகளும் இருப்பதால், காவல்துறையினர் மெத்தனப் போக்கோடு நடந்து கொள்கிறார்கள். சாதிய கும்பலையும், காவல்துயையும் கண்டித்து, கட்சித் தலைமையின் அனுமதிபெற்று போராட்ட நடத்தப்போகிறோம்'' என்றார்.

சாம்ராய்குரு
சாம்ராய்குரு
க. தனசேகரன்

இதுபற்றி டிஎஸ்பி செளந்தரராஜன், ``கடத்தப்பட்ட பெண் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. முக்கியமானவர்கள் கைது செய்யப்படவில்லை என்று யாரைச் சொல்லுகிறார்களென்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்த புகாரில், வீரப்பன் என்ற ஒருவர் பெயரை மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் அந்தப் பெண்ணை கூட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருடைய செல் சுவிட்ஸ் ஆஃப்பில் இருப்பதால், பெண்ணை தற்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு