Published:Updated:

`உன் மகளை உயிரோடு பார்க்கவேண்டுமென்றால்...’ - பஞ்சாபிலிருந்து உ.பி-க்கு வந்த மர்ம போன்கால்!

கலிலுல்லா.ச

காசிஷ் மாயமாகி 3 வருடங்கள் கழித்து அவரின் தந்தை சஞ்சய்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

காசிஷ்
காசிஷ்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் வசிப்பவர் சஞ்சய் ராவத். இவரின் மகள் காசிஷ். கடந்த 2016-ம் ஆண்டு மே 12-ம் தேதி காஷிஷ் வெளியே விளையாடிக்கொண்டிருக்கும்போது காணாமல் போனார். அக்கம் பக்கம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்த ராவத், காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறை தரப்பில், நொய்டா, காசியாபாத், டெல்லி, புலந்ஷர், மீரட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், காசிஷ் கிடைக்கவில்லை.

போராட்டம்
போராட்டம்

அப்போது, காவல்துறைக்கு எதிராக அவரின் பெற்றோர் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில், காசிஷ் மாயமாகி 3 வருடங்கள் கழித்து அவரின் தந்தை சஞ்சய்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், `உங்கள் பெண் குழந்தையை உங்களிடமே ஒப்படைக்கிறோம்’ என்று மறுமுனையில் பேசியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அவரும் மற்ற பெற்றோர்களைப்போல காவல்துறையை நாடினார். இருந்தபோதிலும், அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து மர்ம நபர்கள் தொலைபேசியில் பணம் கொடுக்குமாறு மிரட்டி வந்தனர். ஜூலை 8 முதல் 10-ம் தேதி, அதாவது 2 நாள்களில் மட்டும் 10 முறை மர்ம நபர்களின் மூலம் போன்கால்கள் வந்துள்ளன.

மாயம்
மாயம்

இதுதொடர்பாக சஞ்சய், ``அந்த போன் கால்கள் யாவும் ஒரே எண்ணிலிருந்து வரவில்லை. வெவ்வேறு எண்களிலிருந்து வந்தன. அவர்கள் என்னிடம், `உன் மகள் எங்களிடம்தான் பஞ்சாபில் இருக்கிறாள். உயிரோடு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் 10 லட்சம் பணத்தோடு வா” என்றனர். `நான் என் மகளின் புகைப்படத்தைக் கேட்டேன். ஆனால், அவர்கள் கொடுக்கமாட்டேன்’ என்று கூறிவிட்டனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இந்த போன்கால்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள டிரேஸ் செய்துள்ளனர். அந்த மர்ம நபர் பஞ்சாப் என்று கூறியுள்ளார். ஆனால், போன்கால்கள் தெலங்கானா மற்றும் மேற்கு வங்கத்தைக் காட்டுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை
குழந்தை

மேலும், மகள் தொலைந்துபோனதைப் பயன்படுத்தி யாரோ சிலர் பெற்றோரிடம் பணத்தைப் பறிக்க முயல்வதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.