சேலம், கொண்டலாம்பட்டி அருகே சித்தன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன் (58). இவர் சேலம் லீ பஜார் அருகேயுள்ள மணிபுரம் பகுதியில் மாரி என்பவருக்குச் சொந்தமான பருப்பு மில்லில் இரவு நேர காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் வேலைக்கு வந்த தங்கையன், மில்லில் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை மில்லின் உரிமையாளர் மாரி, கடைக்குச் சென்றிருந்தபோது அங்கு தங்கையன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த தங்கையனின் குடும்பத்தினர், வலிப்பு ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று கருதி, தங்கையனின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது, தங்கையன் தலையில் காயம் இருந்திருக்கிறது. அதோடு கழுத்தில் துண்டால் இறுக்கிய தழும்பும் இருந்திருக்கிறது. அவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பள்ளப்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்கையனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது சைக்கிளில் ஒரு வாலிபர் அந்தப் பகுதிக்கு வந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் வட மாநில வாலிபர் என்பதை உறுதிசெய்தனர்.

பின்னர் அந்த நபர் கடந்த செவ்வாய்க்கிழமை பருப்பு மில்லுக்கு வேலைக்கு வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அவரின் செல்போன் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அமர்ஜித் குமார் என்கிற சுவனுக்குமார் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், பீகார் தப்பிச்செல்ல சேலம் ரயில் நிலையம் வந்தவரை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த ரூ.1.47 லட்சத்தைப் பறிமுதல் செய்திருக்கின்றனர். இதனிடையே கொலை நடந்த பருப்பு மில்லில் 25,000 ரூபாய் திருட்டு போனதாக பருப்பு மில் உரிமையாளர் மாரி புகாரளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் மீதமுள்ள பணத்தை அவர், எங்கு கொள்ளையடித்தார் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், `கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுவனுக்குமார் குடும்பத்துடன் சேலத்துக்கு வந்திருக்கிறார். சேலத்தில் தங்கியிருந்து பைப் கம்பெனி, பருப்பு மில் ஆகியவற்றில் கூலி வேலை செய்துவந்திருக்கிறார். அதன்படி கொலை நடந்த பருப்பு மில்லுக்கு ஒரு நாள் வேலைக்கு வந்திருக்கிறார். அங்கிருந்த அனைத்தையும் நோட்டமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஒரு நாள் அங்கு வேலைக்கு 600 ரூபாய் சம்பளம் கொடுத்ததால், பருப்பு மில்லில் அதிக அளவு பணம் இருக்கும் என்பதை அறிந்த சுவனுக்குமார், இரவில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக அந்தப் பகுதிக்கு சைக்கிளில் வந்திருக்கிறார். அதோடு பருப்பு மில்லுக்குள் புகுந்திருக்கிறார்.
அப்போது சுவனுக்குமாரைப் பார்த்த காவலாளி தங்கையன், தன் செல்போன் மூலம் முதலாளிக்குத் தகவல் கொடுக்க முயன்றிக்கிறார். அப்போது அவர் அந்தப் பகுதியிலிருந்த சாக்குப் பையை எடுத்து தங்கையனின் முகத்தை மூடி, அங்கிருந்த கட்டையால் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதோடு கழுத்தை நெரித்தும் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார். மேலும், சுவனுக்குமார் காவலாளியைக் கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்தது குறித்து, தன்னுடைய குடும்பத்திடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் பீகார் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், தானும் பீகார் தப்பிச் செல்வதற்காக சேலம் ரயில் நிலையம் சென்ற நிலையில், காவல்துறையினர் சுவனுக்குமாரை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். மேலும் அதிகளவில் அவர் பணம் வைத்திருந்ததால் வேறு எங்கும் கொள்ளையடித்திருக்கிறாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.