Published:Updated:

மதுரை: `கொரோனா காலத்திலும் குறையாத கொலைகள்' - அதிர வைக்கும் பழிக்குப்பழி சம்பவங்கள்

காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் விசாரணை ( என்.ஜி.மணிகண்டன் )

மதுரையில் சிறிது காலம் அமைதியாக இருந்த இரண்டு தரப்பும் மீண்டும் பழிக்குப் பழி வாங்க கிளம்பிவிட்டனர். இரண்டு தரப்பினரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்கின்றனர் காவல்துறையினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அமைதியாக இருந்து வந்த மதுரையில், சமீபகாலமாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை
என்.ஜி.மணிகண்டன்

அரசியல், சாதி மத பகைக்காக மட்டுமல்லாமல், அற்ப விஷயங்களுக்காகக் கொலைகள் நடந்து வந்த மதுரையில் கொரோனா ஊரடங்கால் இச்சம்பவங்கள் கொஞ்சம் குறைந்திருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாள்களாகக் கொலை சம்பவங்கள் வரிசையாக நடந்து வருகின்றன.

கடந்த 15-ம் தேதி செல்லூரில் ராஜ்கிரண் என்ற கட்டடத் தொழிலாளர் முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். 16-ல் நகை, பணத்துக்காக 65 வயதான பஞ்சவர்ணம் என்ற பெண்மணி கொலை செய்யப்பட்டார். 17-ல் சிக்கந்தர் சாவடியில் விக்னேஷ் என்ற இளைஞர் டூ வீலரில் வந்தபோது பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 21-ல் அனுப்பானடியில் தன் சகோதரரின் நினைவு தின போஸ்டரை ஒட்டிய முத்துக்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

தொடரும் கொலைகள்
தொடரும் கொலைகள்

கடந்த 26-ல் எல்லீஸ் நகரில் முன் விரோதத்தால் குற்றப்பின்னணி உள்ள சகோதரர்கள் முருகன், வெள்ளைக்கண்ணு செந்தில் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். அதே நாளில் சிலைமான் புளியங்குளத்தில் குற்ற வழக்குகள் உள்ள தவமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்களை விசாரித்து காவல்துறையினர் சிலரை கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை தேடிக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி தரப்புக்கும், அ.தி.மு.க முன்னாள் மண்டலத் தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பகை இருந்து வரும் நிலையில் இரண்டு தரப்பிலும் 20-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. பல வழக்குகள் இருந்து வந்தாலும் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார்கள்.

உறவினரின் மரணத்துக்கு வி.கே.குருசாமி பரோலில் வந்ததாக கருதி, கும்பல் ஒன்று நேற்று கீழ்மதுரைப் பகுதியிலுள்ள அவர் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை
காவல்துறையினர் விசாரணை
என்.ஜி.மணிகண்டன்

வீட்டில் நின்ற கார், ஆட்டோ உட்பட எட்டு வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால், வி.கே. குருசாமி பரோலில் வரவில்லை. வீட்டில் அவர் மனைவியும் மகளும் இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியே பரபரப்படைந்தது.

இதுபற்றி காவல்துறையினரிடம் பேசியபோது, ''சிறிது காலம் அமைதியாக இருந்த இரண்டு தரப்பும் மீண்டும் பழிக்குப் பழி வாங்க கிளம்பிவிட்டனர். இரண்டு தரப்பினரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அதையும் மீறி சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. அதுபோல் சமீபகாலத்தில் நடந்த கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றங்கள் நடக்காதபடி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு