Published:Updated:

ஆஸ்திரேலிய இணையதளத்தில் ஆயுதங்கள் ஆர்டர்! - என்.ஐ.ஏ ரேடாரில் சிக்கிய ஒடிசா இளைஞரின் `பிராங்க்’

என்.ஐ.ஏ.
என்.ஐ.ஏ.

ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விளையாட்டாக ஆர்டர் செய்த ஒடிசா இளைஞரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினர்.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்த 20 வயது இளைஞர், கொரோனா பொதுமுடக்க காலத்தில் பொழுதுபோகாமல் சிரமப்பட்டிருக்கிறார். இதனால், ஆன்லைனில் அதிக நேரம் செலவிட்ட அவர், ஆயுதங்களைச் சர்வதேச அளவில் விற்கும் ஆஸ்திரேலிய இணையதளம் ஒன்றைப் பார்த்திருக்கிறார். விளையாட்டாக அந்த இணையதள உரிமையாளர்களுடன் இ-மெயிலில் பேசிய அவர், துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் எனப் பெருமளவில் ஆயுதங்களை ஆர்டர் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், தனது விளையாட்டு வினையாவதாக உணர்ந்த அந்த இளைஞர், ஆர்டரை கேன்சல் செய்திருக்கிறார்.

இணையதளம்
இணையதளம்
Representational Image

அதற்குள், இந்த விவகாரத்தை மோப்பம் பிடித்த ஆஸ்திரேலிய உளவுத்துறை, அந்த இளைஞர் குறித்த விவரங்களைச் சேகரித்திருக்கிறது. பின்னர், அந்த விவரங்களை இந்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஆஸ்திரேலிய உளவுத்துறை பகிர்ந்திருக்கிறது. இதையடுத்து, ஐ.பி அட்ரஸ் மூலம் இளைஞரின் விலாசத்தைக் கண்டுபிடித்த என்.ஐ.ஏ., ஒடிசா போலீஸார் உதவியோடு இளைஞரைப் பிடித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய ஒடிசா போலீஸ் அதிகாரி ஒருவர், ``இளைஞரின் ஐ.பி அட்ரஸைப் பகிர்ந்த என்.ஐ.ஏ., அவரைத் தொடர் கண்காணிப்பில்வைத்திருக்குமாறு பணித்தது. அதையடுத்து, இளைஞரைத் தொடர்ந்து கண்காணித்துவந்தோம். அவரது பின்னணி, செயல்பாடுகள் குறித்து விசாரித்ததில், சந்தேகம் வரும்படியான தீவிரவாத கனெக்‌ஷன்கள் எதுவும் அவருக்கு இல்லை என்பது தெரியவந்தது.

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

இருந்தும், அவரிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞரிடம் காந்தாகிரி காவல் நிலையத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர்’’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசிய புவனேஷ்வர் கமிஷனர் சுதான்ஷு சாரங்கி, ``இளைஞரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் விளையாட்டாக இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருக்கு சந்தேகப்படும்படியான தீவிரவாதக் குழுக்கள் எதனுடனும் தொடர்புகள் இல்லை என்பதும் தெரியவந்தது.

கேரளா, மேற்குவங்கத்தில் அதிகாலை ரெய்டு; சிக்கிய 9 அல்-கொய்தா தீவிரவாதிகள்! - என்.ஐ.ஏ அதிரடி

ஆன்லைனில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்கும் இணையதளம் ஒன்றில், அவர் அது குறித்த விவரங்களைத் தேடிப் பார்த்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்’’ என்று கூறியிருக்கிறார். அவரது லேப்டாப்பையும் என்.ஐ.ஏ, உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சந்தேகப்படும்படியான எந்த ஆவணமும் இல்லை. அவர் விளையாட்டாகவே இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு