Published:Updated:

`15 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு!’ - வளர்த்த பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

``பிஸ்கட், மிக்ஸர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கித் தருவதாகக் கூறியே சிறுமியை தினமும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது என தாத்தா மிரட்டியதால் சிறுமியும் அமைதியாக இருந்திருக்கிறார்.”

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவருக்கு வயது 70. இவரின் மகள் ராணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். பெண் குழந்தை பிறந்தபோது ராணி உயிரிழந்துவிட, ரமேஷ் பெங்களுருவில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

சிறார் வதை
சிறார் வதை

அதனால் இரண்டு குழந்தைகளையும் முதியவர்களான ராணியின் பெற்றோர்களே வளர்த்துவந்தனர். (தற்போது அந்தச் சிறுவனின் வயது 16, சிறுமியின் வயது 15) சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியும் இறந்துவிட, முதியவர் பராமரிப்பிலேயே இருவரும் வளர்ந்திருக்கின்றனர். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிரட்டி, தனது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார் தாத்தா. அதனால் அந்தச் சிறுமி ஏழு மாதம் கர்ப்பமாகியிருக்கிறார். அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியை மாதக்கணக்கில் வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்திருக்கிறார் முதியவர்.

சிறுமியின் வயிறு பெரிதாகிவிட்டதால், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான இந்திராணி என்பவரின் உதவியுடன், திருக்கோவிலூர் அருகேயுள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற செவிலியரான ராஜாமணி என்பவரிடம் கருக்கலைப்பு செய்வதற்காகச் சென்றிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட  70 வயது முதியவர்
கைது செய்யப்பட்ட 70 வயது முதியவர்

ஏழு மாதத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாது என்பதால் ஊசி மூலம் கட்டாயப் பிரசவம் செய்து குழந்தையைக் கொலை செய்யும் முடிவை எடுத்திருக்கின்றனர். ஆனால் பிரசவத்தின்போது பிறந்த பெண் குழந்தை சிறிது நேரம் அழுது இறந்துவிட்டது என்றும், அதனால் குழந்தையின் சடலத்தை ஆற்றோரம் வீசிவிட்டதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் மூதாட்டியான இந்திராணி. இந்தச் சட்டவிரோத கருக்கலைப்புக்காக 15,000 ரூபாய் கொடுத்திருக்கிறார் அந்த முதியவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தகவல் செல்லங்குப்பம் கிராமத்தில் கசியத் தொடங்கியதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் விமல் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாகக் களமிறங்கிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி, அந்த முதியவர், அவருக்குத் துணையாக இருந்த இந்திராணி, சிறுமிக்கு சட்டவிரோத கருக்கலைப்பை செய்த ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதுசெய்திருக்கின்றனர்.

நாமக்கல்: 2 சிறுமிகள்... 6 மாதமாக பாலியல் வன்கொடுமை! 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது

இது குறித்து நம்மிடம் பேசிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி, ``அந்தச் சிறுமியின் பெற்றோரும், ஆயாவும் இல்லாதது அந்த முதியவருக்கு வசதியாகப் போய்விட்டது. பிஸ்கட், மிக்ஸர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக கூறியே சிறுமியை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அந்த முதியவர், சிறுமியின் 16 வயது சகோதரனை வெளியில் படுக்கும்படி தகராறு செய்திருக்கிறார். அதனால் ஒருகட்டத்தில் அந்தச் சிறுவனும் இரவு சாப்பிட்டுவிட்டு வெளியில் படுக்கச் சென்றுவிடுவான். இது முதியவருக்கு வசதியாகப் போய்விட்டது. இதை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என தாத்தா மிரட்டியதால் எதுவுமறியாத சிறுமியும் அமைதியாக இருந்திருக்கிறார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு