Published:Updated:

பட்டாசு மருந்தில் நாட்டு வெடிகுண்டு; சிதறிய வீடு!- 6 பேருக்கு நேர்ந்த விபரீதம்

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி மயில்வாகனன் 
சம்பவ இடத்தைப் பார்வையிட்ட எஸ்.பி மயில்வாகனன் 

வாலாஜாபேட்டையில், நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வன்னிவேட்டில் உள்ள காலனியில் வசித்துவரும் சிலர் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்து காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதாகக் கூறப்படுகிறது.

மாங்கொட்டையில் வெடி மருந்துகளை நிரப்பி வன விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசுகிறார்கள். அதை விலங்குகள் கடிக்கும்போது, மாங்கொட்டை வெடிக்கிறது. இதில், தாடைப் பகுதி முற்றிலுமாக கிழிந்து விலங்குகள் காயமடைந்து சுருண்டு விழுகின்றன.

உயிரிழந்த உழைப்பாளி என்ற நபர்
உயிரிழந்த உழைப்பாளி என்ற நபர்

இந்த விலங்குகளைத் தூக்கிச்சென்று தோலை நீக்கிவிட்டு இறைச்சியைப் பங்கிட்டு விற்பனை செய்கிறார்கள். தேவையான இறைச்சியை வீட்டுக்கும் எடுத்துச் சென்று சமைத்துச் சாப்பிடுகிறார்கள். சில சமயம், வனப்பகுதியின் ஓரமாக மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடு, மாடுகளும் நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்து உயிரிழக்கின்றன. இந்த நிலையில், நரிக்குறவர் காலனியில் உள்ள தமிழன் என்பவரது வீட்டிலிருந்து இன்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

`நாட்டு வெடிகுண்டு.. தலைக்கு மட்டுமே குறி' -புதுவை அமைச்சரின் ஆதரவாளருக்கு நேர்ந்த கொடூரம்

அப்பகுதிவாசிகள் சம்பவம் குறித்து சுதாரிப்பதற்குள், அந்த வீடு முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது வீட்டின் உரிமையாளரான தமிழன், விஜய், உழைப்பாளி, எஜமான், வேதவள்ளி உட்பட நாடோடி இனத்தைச் சேர்ந்த 6 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபரீதம் நடந்திருப்பது, தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் உடனடியாக மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்

அவர்களில் சிகிச்சைப் பலனின்றி உழைப்பாளி என்பவர் மரணமடைந்தார். ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, தரைமட்டமான வீட்டின் ஒரு பகுதியிலிருந்து 15 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக, ராணிப்பேட்டை எஸ்.பி மயில்வாகனனிடம் கேட்டபோது, ``சாதாரண பட்டாசு மருந்துகளை வைத்தே நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிகிச்சை பெற்று வரும் நபர்கள் மீது வழக்கு பதியப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு