Published:Updated:

`கையில் வரைபடம்; மன்னர் கால கோயில் மட்டுமே டார்க்கெட்!'- `கலசக் கும்பல்'களால் பதறும் நீலகிரி

oldest temple
oldest temple

அவர்களிடம் அனைத்துக் கோயில்களின் வரலாறு, கட்டப்பட்ட ஆண்டு, வழித்தடம் போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன. இவர்களைப் பிடிக்காவிட்டால் மேலும் பல கோயில்களில் கலசங்களைத் திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர்ப் பகுதிகளில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த கோயில்கள் அதிகளவில் உள்ளன. மேலும் மலை அடிவாரங்கள், வனத்தையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் கோயில்களில் இன்றளவும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. மிகப்பழைமை வாய்ந்த இந்தக் கோயில்களில் கலசங்கள் அவ்வப்போது காணாமல் போகின்றன.

oldest temple
oldest temple

இந்த நிலையில் கடந்த மாதம் பந்தலுார் பொன்னானி மகா விஷ்ணு கோயிலில் பழைமையான கோயில் கலசத்தை திருட கையில் வரைபடத்துடன் வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இது குறித்து நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது அய்யன்கொல்லி கோட்டைப்பாடியில் உள்ள சாமியார் மலை அடிவாரத்தில் உள்ள பழைமையான சிவன் கோயிலில் உள்ள கோபுரக் கலசம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனது. கலசத் திருட்டில் ஈடுபட்டுவரும் கும்பல்தான் இந்தத் திருட்டிலும் ஈடுபட்டிருக்கும் எனக் கோயில் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

oldest temple
oldest temple

கலசத் திருட்டு குறித்து இந்தப் பகுதி மக்கள் கூறுகையில் ``பந்தலூர்ப் பகுதிகளில் உள்ள பழைமையான கோயில்களில் புதிய ஆட்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகலில் நோட்டமிட்டுச் செல்லும் கும்பல் இரவில் கலசத்தைத் தூக்கிச் செல்கின்றனர். இந்தக் கலசங்களைத் திருடவே ஒரு பெரிய நெட்வார்ட் இயங்கிவருகிறது. அவர்களிடம் அனைத்துக் கோயில்களின் வரலாறு, கட்டப்பட்ட ஆண்டு, வழித்தடம் போன்ற அனைத்துத் தகவல்களும் உள்ளன. இவர்களைப் பிடிக்காவிட்டால் மேலும் பல கோயில்களில் கலசங்களைத் திருடிச் செல்ல வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் சிக்கிய கலசத் திருட்டுக் கும்பலை அலட்சியமாகக் காவல்துறையினர் விட்டுவிட்டனர்" எனத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் ``கலசத் திருட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு