Published:Updated:

`கைலாசா சென்றாரா பெரியகுளம் டாக்டர்?' - தந்தையின் போலீஸ் புகாரால் பரபரப்பு

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெரும் முயற்சி செய்து மீட்கப்பட்ட அரசு மருத்துவர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் குமார்
மனோஜ் குமார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரும், நித்யானந்தாவின் சீடருமான மனோஜ்குமாரைக் காணவில்லை என அவரது தந்தை பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் குமார்
மனோஜ் குமார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு மருந்தாளுநர் காந்தி (வயது 61). இவரது ஒரே மகன் மனோஜ்குமார் (வயது 33). மருத்துவரான மனோஜ்குமார், மதுரை மாவட்டம் வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அவரது அக்கா வனிதாவின் மகள், நிவேதாவுடன் திடீரென மாயமானார்.

அவரது குடும்பத்தார் இருவரையும் தேடி வந்தனர். இறுதியில், நித்யானந்தாவால் ஈர்க்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள மடத்தில் இருவரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இருவரையும் மீட்க காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது மடத்தில் ஊழியர்களால் இவர்கள் தாக்கப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Nithyananda
Nithyananda

பின்னர், பெரியகுளம் வந்த காந்தி, தனது மகன் மற்றும் பேத்தியை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி, அப்போதைய மாவட்ட எஸ்.பி பாஸ்கரனிடம் புகார் தெரிவித்தார்.

`பன்றிப்பால்' சர்ச்சை, ஜெயஸ்ரீ கலவரம், கைலாச நித்யானந்தா... போன வார வைரல்கள்! #NewsNotToMiss

தேனியில் தனிப்படை அமைக்கப்பட்டு, இருவரையும் மீட்க பெங்களூரு விரைந்தது போலீஸ். அவர்கள், மனோஜ்குமார் மற்றும் நிவேதாவை மீட்டு தேனி கொண்டுவந்தனர். பின்னர், மனோஜ்குமாருக்குக் குடும்பத்தினர் அனைவரும் அறிவுரை கூறி மீண்டும் பணிக்குச் செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

Manojkumar
Manojkumar

அதைத்தொடர்ந்து மனோஜ்குமாரும், தேனி தேவாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். இதற்கிடையே கடந்த சில நாள்களாக நித்யானந்தா பற்றி தனது உறவினர்களிடம் மனோஜ்குமார் பேசிவந்துள்ளார். இந்நிலையில், மனோஜ்குமாரைக் காணவில்லை என அவரது தந்தை காந்தி, பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் இன்று புகார் கொடுத்தார்.

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெரும் முயற்சி செய்து மீட்கப்பட்ட அரசு மருத்துவர், மீண்டும் காணாமல் போயிருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதியானந்தா புதிதாக உருவாக்க இருக்கும் கைலாசா நாட்டிற்கு மனோஜ்குமார் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

`நித்யானந்தா அழைத்தால் கைலாசா செல்வேன்!' - காஞ்சிபுரம் ஞானப்பிரகாச ஆதீனம்

இது தொடர்பாக மனோஜ்குமாரின் தந்தை காந்தியிடம் பேச முயற்சி செய்தோம். அவர் பேச மறுத்துவிட்டார். மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வியிடம் பேசியபோது, ``வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். தனிப்படை அமைப்பது குறித்து யோசித்து வருகிறோம்” என்றார்.