Published:Updated:

நடிகை வனிதா திருமண சர்ச்சை: `4-ஐ 7 ஆக மாற்றிய இன்ஸ்பெக்டர்!' -மீண்டும் எலிசபெத் புகார்

நடிகை வனிதா, பீட்டர்பால்
நடிகை வனிதா, பீட்டர்பால்

நடிகை வனிதாவை திருமணம் செய்த எனது கணவர் பீட்டர்பால் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய வடபழனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மீண்டும் எலிசபெத் புகாரளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமம், நேருநகர், சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் பீட்டர் பால் என்பவரின் மனைவி எலிசபெத் ஹெலன். இவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் புகாரளித்தார். அதில் கூறியிருப்பதாவது, `மேற்கண்ட முகவரியில் எனது தாயாரின் பராமரிப்பில் நானும் எனது இரண்டு குழந்தைகளும் உள்ளோம். எனக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 3.7.2000 அன்று கிறிஸ்தவ முறைப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் திருமணம் நடைபெற்றது.

எலிசபெத் ஹெலன்
எலிசபெத் ஹெலன்

அதன்பிறகு, சாலிகிராமம் திருவேங்கடசாமி சாலை, கண்ணபிரான் காலனி ரோஸ் கார்டன் அபார்ட்மென்ட்டில், நானும் என் கணவர் பீட்டர் பாலும் குடும்பம் நடத்திவந்தோம். எங்களுக்கு ஜான் எட்வர்ட் பிறந்தான். அவனுக்கு, தற்போது 19 வயதாகிறது. மகளுக்கு 8 வயதாகிறது. என் கணவர் பீட்டர் பால், பிரசாத் ஸ்டுடியோவில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். அவர், சரியாக வேலைக்குச் செல்ல மாட்டார்.

எனக்கும் என் கணவர் பீட்டர்பாலுக்கும் குடிப்பழக்கத்தால் அடிக்கடி சண்டை வரும். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், அவர் குடிப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு முகலிவாக்கத்தில் உள்ள சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தப்பித்து வரும்போது, அவருக்கு அடிபட்டு காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு, அவரது தாயார் வீட்டில் இருந்து சிகிச்சைபெற்று வந்தார். இருந்தாலும் அவர் குடிப்பழக்கத்திலிருந்து மீளவில்லை.

நடிகை வனிதா, பீட்டர்பால்
நடிகை வனிதா, பீட்டர்பால்

வேலைக்கு சரிவர போகாததால், குடும்பத்தை வைத்து காப்பாற்றுவதற்கு சிரமப்பட்ட நான், என் அம்மா வீட்டிற்கு 2016 ஏப்ரல் மாதம் சென்றுவிட்டேன். இருப்பினும், பீட்டர் பால் என்னுடனும் எனது குழந்தைகளுடன் தொடர்பில் இருந்தார். கடைசியாக 20.2.2020 அன்று, பீட்டர் பாலின் சகோதரர் மகளுக்கு நடந்த நிச்சயதார்த்த விழாவிற்கு என்னை வீட்டிற்கு வந்து அழைத்துச்சென்றார். நாங்கள் அந்தத் திருமண நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

இதற்கிடையே நடிகை வனிதா விஜயகுமார், தான் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பதாகக் கூறி, சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டார். அதைப்பார்த்தபோது, அது என் கணவர் பீட்டர் பால் என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நான் அவரை அணுகியபோது, பீட்டர்பால் சரியாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எனவே, பீட்டர்பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர்மீது நடவடிக்கை எடுத்து, என் கணவரை மீட்டுத் தரக்கோரி, கடந்த 19.6.2020-ல் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுப்பதற்காக, காலையில் என் தாயாரை அழைத்துக்கொண்டு சென்றேன்.

புகார் மனு
புகார் மனு

அப்போது, இன்ஸ்பெக்டர் இல்லை எனக்கூறி மாலையில் வரச் சொன்னார்கள். மாலையில் நான், எனது தாயார் மற்றும் எனது சகோதரன் ஆகிய மூவரும் சென்றோம். நான் விஷயத்தைச் சொன்னேன். அதை கேட்டுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரேணுகா, புகாரை எழுதித்தரும்படி கேட்டார். எனக்கு விவரமாக எழுதத் தெரியாது எனக்கூறினேன். அதற்கு இன்ஸ்பெக்டர், நான் சொல்லச் சொல்ல நீயே உன் கைப்பட எழுது என்று சொன்னார்கள். நானும் அவர்கள் சொன்னபடி எழுதினேன்.

அப்படி எழுதும்போது, நானும் எனது கணவரும் 7 வருடங்களாகப் பிரிந்து இருப்பதாகக் கூறினார். உடனே நான் இன்ஸ்பெக்டரிடம், `ஏழு ஆண்டுகள் இல்லை... நான்கு ஆண்டுகள்தான் பிரிந்து வாழ்கிறோம்' என்று கூறினேன். அதற்கு இன்ஸ்பெக்டர், `ஏழு ஆண்டுகள் என்றால் என்ன 4 ஆண்டுகள் என்றால் என்ன எல்லாவற்றுக்கும் ஒரே பிரிவுதான்' என்று கூறினார். அதனால் நான் எதுவும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அந்தப் புகாரை இன்ஸ்பெக்டர் சொல்லச் சொல்ல எழுதியதைத் தவிர நான் சுயமாக எழுதவில்லை. அந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், எனக்கு சிஎஸ்ஆரைக் கொடுத்தார்.

நடிகை வனிதா பீட்டர்பால்
நடிகை வனிதா பீட்டர்பால்

பீட்டர்பால் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து, அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வந்தும்கூட, அந்தத் திருமணத்தை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் இன்ஸ்பெக்டர் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால், என் கணவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்திருக்காது. வேண்டுமென்றே சட்டவிரோதமாக அந்தத் திருமணம் நடப்பதற்கு இன்ஸ்பெக்டர் உதவி செய்துள்ளார்.

நான், எனது புகாரினை 19.6.2020 வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசம் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வெறுமனே புகார் நிலையிலேயே வைத்துள்ளார். இதிலிருந்து வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேணுகா, எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. நான் கொடுத்த புகார் மீது வழக்குகள் பதிய முகாந்திரம் இருந்தும் வடபழனி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

வனிதா
வனிதா
``அவங்க பிரிஞ்சி 8 வருஷமாச்சு... இப்ப 1 கோடி கேட்டு மிரட்டுறாங்க!'' - வனிதா விஜயகுமார்

நான், என் கணவர் பீட்டர் பால் அவர்களுடன் வாழ்ந்த காலகட்டத்தில், என்னிடம் இருந்த 25 சவரன் நகையைப் பெற்றுக் கொண்டு, தற்போது வரை அதைத் தர மறுக்கிறார். நான், எனது கணவருடன் ஒன்றாக வாழ்ந்த காலகட்டத்தில் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

வடபழனி அனைத்து மகளிர் நிலைய காவல் இன்ஸ்பெக்டர் ரேணுகா, எனது புகாரினை விசாரித்தால், எனக்கு நீதி கிடைக்காது. அவர் ஒரு தலைபட்சமாக இருந்ததால்தான் என் கணவர் 2-வது திருமணம் செய்துள்ளார். எனது வாழ்க்கை வீணாகப் போனது. எனது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கல்லூரி படிக்கக்கூடிய வயதில் மகனை வைத்துக்கொண்டு, என் கணவர் 2-ம் திருமணம் செய்துள்ளார். வனிதா விஜயகுமாருக்கு இது 3-வது திருமணம். அவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது, என் கணவர் தொடர்ச்சியாக மிரட்டல்விடுத்துவருகிறார். இதுபோன்ற சம்பவங்கள் சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.

`` `வனிதா பீட்டர்'னு என் பேரை மாத்துறளவுக்கு காதலிக்கப் போறாராம்!'' - உற்சாகத்தில் வனிதா விஜயகுமார்

எனவே, நான் 19.6.2020-ல் கொடுத்த புகாரை விசாரிப்பதற்கு, திறமையான மற்றும் உண்மையான இன்ஸ்பெக்டரை நியமனம் செய்து, 27.6.2020ல் எனது கணவரின் 2-வது திருமணத்தை நடத்தி வைக்க உறுதுணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதிவழங்கும்படி வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரையடுத்து, நடிகை வனிதா-பீட்டர் பாலிடம் உடனடியாக விசாரணை நடத்தும்படி போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாவை தோடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அவர் விளக்கம் அளித்தால், உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு