Published:Updated:

புதுச்சேரி: `40 பேர் மீது போக்சோ’ - பாலியல் தொழிலில் சிறுமி ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் அதிரடி

புதுச்சேரி மசாஜ் சென்டரில், 17 வயது சிறுமி தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 40 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னிந்தியாவின் முக்கியச் சுற்றுலா மையமான புதுச்சேரியில் `ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து நடக்கும் இந்தத் தொழில் குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக காவல்துறைக்கு புகார் அளித்துவந்தனர். அதன் தொடர்ச்சியாக அனைத்து ஸ்பாக்களிலும் அதிரடியாகச் சோதனை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் இனியன், ரமேஷ், எஸ்.ஐ சந்தோஷ் ஆகியோர் கடந்த 16-ம் தேதி அனைத்து ஸ்பாக்களிலும் அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதன்படி புதிய பேருந்து நிலைய சாலையான மறைமலை அடிகள் சாலையில் செயல்பட்டுவந்த அழகுநிலையத்திலும், மசாஜ் சென்டரிலும் சோதனை செய்தபோது, அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. அதையடுத்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று இளம்பெண்களை மீட்ட அவர்கள், மசாஜ் சென்டரை நடத்திவந்த கணவன், மனைவி, இரண்டு வாடிக்கையாளர்கள் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

அதேபோல அண்ணா நகரில் செயல்பட்டுவந்த ஓர் அழகு நிலையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த நான்கு இளம்பெண்களை மீட்டதுடன், அந்த அழகு நிலையத்தின் பெண் உரிமையாளர், இரண்டு ஆண் வாடிக்கையாளர்களை வளைத்தது போலீஸ். தொடர்ந்து காமராஜ் சாலையில் செயல்பட்டுவந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவரை மீட்ட போலீஸ், அதன் உரிமையாளர்கள் இருவரை வளைத்துப் பிடித்தது.

கைதுசெய்யப்பட்ட பாலியல் கும்பல்
கைதுசெய்யப்பட்ட பாலியல் கும்பல்

அன்று நள்ளிரவு வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 10 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீஸ், மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்களின் உரிமையாளர்கள் ஐந்து பேரையும், வாடிக்கையாளர் நான்கு பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்று மசாஜ் சென்டர்களிலிருந்து மீட்கப்பட்ட பெண்களின் வயது குறித்து உருளையன்பேட்டை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் 17 வயது சிறுமி ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தச் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 40 பேர் தொடர்ச்சியாக மசாஜ் சென்டருக்கு வந்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

புதுச்சேரி: `திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் மீது போக்சோ ஏன்? - எஃப்.ஐ.ஆர் முழு விவரம்!

அதையடுத்து அந்தச் சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தில் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிட்ட அந்த மசாஜ் சென்டருக்குத் தொடர்ச்சியாக சென்று வந்த 40 பேர் மீது இதுவரை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு