Published:Updated:

இன்ஸ்டாகிராம் பழக்கம்; நம்பிய பள்ளி மாணவி! - 32 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம் பறித்த இளைஞர்

12-ம் வகுப்பு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 19 வயது இளைஞர் ஒருவர் 32 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கலை அடுத்த விஷ்ணுவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) (16). அதே பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்துவருகிறார். கொரோனா காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருவதால், பாடங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக ரேகாவின் தந்தை அவருக்குக் கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்திருக்கிறார்.

தந்தை வாங்கிக் கொடுத்த போனை ஆன்லைன் வகுப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், சரேகா ஆன்லைன் சேட்டிங்குக்கும் பயன்படுத்திவந்திருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவந்த சிறுமிக்கும், திருவள்ளூரை அடுத்த மணவாள நகர்ப் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்ற 19 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டாவில் அறிமுகமான ரேவந்த், கொஞ்சம் கொஞ்சமாக ரேகாவுடன் போனில் அரட்டை அடிக்கும் அளவுக்குப் பழகியிருக்கிறார்.

பள்ளி மாணவியிடம் பணம் பறித்த இளைஞர்
பள்ளி மாணவியிடம் பணம் பறித்த இளைஞர்
Representational image

தன்னுடன் இணக்கமாகப் பழகிய சமூக வலைதள நண்பன் ரேவந்த்தை முழுமையாக நம்பிய பள்ளி மாணவி ரேகா, அந்த இளைஞரைத் தனது பெஸ்ட் ஃபிரெண்டாக நினைத்துப் பழகிவந்திருக்கிறார். ஆனால், ரேகாவின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற அந்த இளைஞரோ, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவரிடம் விளையாடத் தொடங்கியிருக்கிறார். வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, ஆரம்பத்தில் 500 ரூபாய், 1,000 ரூபாய் எனக் கடனாகக் கேட்டு வாங்கியிருக்கிறார். 1,000 ரூபாய் பணம் கேட்ட அடுத்த சில மணி நேரங்களில் ரேகா நேரில் எடுத்துவந்து கொடுத்ததும், ரேகா வசதி படைத்த பெண் என்பதைப் புரிந்துகொண்டு, ஆசைவார்த்தை கூறிப் பழகிய ரேவந்த், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்.

`திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் அமர ஆசைப்பட்ட வி.ஐ.பி-க்கள்!’ -மோன்சன் மாவுங்கல்லின் மோசடி லீலைகள்

வீட்டில் கடன் தொல்லை, செலவுக்குப் பணமில்லை என அடுக்கடுக்காக பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு ரேகாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக நகை, பணம் என வாங்கி வந்திருக்கிறார். ரேகாவின் பெற்றோர் அவர் மீதான நம்பிக்கையில், பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தைக் கண்காணிக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனால், பெற்றோர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்ட ரேகா, சிறுகச் சிறுக பீரோ லாக்கரை காலி செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில், பீரோவிலிருந்து நகைகள், பணம் காணாமல்போன விஷயம் ரேகாவின் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால், அவர்கள் ரேகாவை மிரட்டி விசாரித்ததில் அவர் மணவாள நகர் ரேவந்த்துக்கு பீரோவிலிருந்து பணம், நகையை எடுத்துக் கொடுத்துவந்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

லாக்கரில் வைத்திருந்த 32 சவரன் தங்கநகை,1 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை இளைஞர் ஒருவர் தங்கள் மகளிடமிருந்து ஏமாற்றிப் பறித்திருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனவர்கள், இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வெங்கல் காவல் நிலையம்
வெங்கல் காவல் நிலையம்

புகாரைப் பெற்றுக் கொண்டவெங்கல் போலீஸார், பள்ளி மாணவியிடம் நூதன முறையில் நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்த மணவாள நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரேவந்த் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு