Published:Updated:

`மனைவியோடு ஊர் மக்களையும் கொல்ல நினைத்தேன்!' -பழங்குடி மக்களின் குடிநீர் குழாயில் விஷம்வைத்த கொடூரம்

குழாயில் விநியோகிக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் திம்மட் என்ற வி‌‌ஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

கைதான ராஜன்
கைதான ராஜன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை அருகில் உள்ளது கர்க்கப்பாலி பழங்குடியின கிராமம். இந்தக் கிராமத்தில் 18 குடும்பங்கள் உள்ளன. நேற்று முன்தினம் பேரூராட்சி குழாயில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. பெண்கள் பலர் குடங்களில் நீரைப் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது வழக்கத்துக்கு மாறாக தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த கிராம மக்கள் தேவர்சோலை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். `நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்யும்வரை குடிநீரை யாரும் பயன்படுத்த வேண்டாம்' எனப் போலீஸார் எச்சரித்தனர். மேலும், தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

கூடலூர் காவல் நிலையம்.
கூடலூர் காவல் நிலையம்.

இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் விஜயசண்முகநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, தலைமைக் காவலர் குமரன், காவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பேரூராட்சி நிர்வாக அலுவலர்களும் இந்தப் பகுதிக்கு வந்தனர். குழாயில் விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் பரிசோதித்தனர். அதில் திம்மட் என்ற வி‌‌ஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

போலீஸார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் குடிநீர் குழாய்களை பரிசோதித்தனர். குழாயைக் கழட்டிப் பார்த்தபோது உள்ளே திம்மட் என்ற வி‌‌ஷத்தை அடைத்துவிட்டு குழாயை மீண்டும் பொருத்தியிருப்பது தெரியவந்தது. ஊர்மக்கள் அனைவரையும் கொலை செய்யும் நோக்கில் இப்படிப்பட்ட செயல், நடைபெற்றிருப்பதைப் போலீஸார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, நடந்த போலீஸ் விசாரணையில் இதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான ராஜன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து விசாரணையை நெருக்கினர். இதில், `குடும்பத் தகராறில் மனைவியையும் ஊர் மக்களையும் கொல்லவே குடிநீரில் விஷம் கலந்தேன்' என அவர் ஒப்புக்கொண்டார்.

கைதான ராஜன்
கைதான ராஜன்

இதுகுறித்து ஊர் மக்கள் கூறுகையில், ``ராஜனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்படும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதை ஊர்மக்களில் சிலர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த ராஜன் எங்களைக் கொல்வதற்காக குடிநீர் குழாயில் விஷத்தைக் கலந்து வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். தேவர்சோலை அருகே 3 டிவி‌‌ஷன் பகுதியில் பதுங்கிருந்த ராஜனை போலீஸார் நேற்று பிடித்து கைது செய்தனர். இந்தக் கிராமத்துக்கு வரும் குடிநீர் குழாய்களையும் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றிவிட்டனர்" என்கின்றனர்.