Published:Updated:

திருவாரூர்: `பள்ளி ஆன்லைனின் வகுப்பில் ஆபாசப் படங்கள்! - இளைஞன் சிக்கியது எப்படி?'

ஆன்லைன் - சைபர் க்ரைம் போலீஸ் பிடியில் அந்த இளைஞர்
ஆன்லைன் - சைபர் க்ரைம் போலீஸ் பிடியில் அந்த இளைஞர்

வாட்ஸ்அப் குரூப்களின் அட்மின்கள் எச்சரிக்கையுடன் செயல்படவில்லையென்றால், இது போன்ற ஒரு வீபரீதம் நிகழ வாய்ப்புகள் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான உண்மை இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்பட்டுவரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆன்லைன் வகுப்புக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் உள்ளவர்களின் செல்போனுக்கு ஆபாசச் செய்திகளும் படங்களும் பகிரப்பட்டுள்ளன. இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் போலீஸார், குற்றவாளியைக் கைதுசெய்தனர்.

மோகன்குமார்
மோகன்குமார்

இந்தப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்று உருவாக்கப்பட்டு, செயல்பட்டுவந்துள்ளது. இந்த வாட்ஸ்அப் குரூப்பிலுள்ள ஒரு மாணவியின் பெயரிலுள்ள செல்போன் எண்ணிலிருந்து, ஆசிரியைகள், மாணவிகளுக்கு ஆபாசச் செய்திகள் மற்றும் வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த குரூப்பின் அட்மின் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியதில், அது தன்னுடைய வாட்ஸ்அப் எண் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர், காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள். சைபர் க்ரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டது, கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியை அடுத்த வீராச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான மோகன்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் தனிப்படையினர் கிருஷ்ணகிரி மாவட்டத்ததுக்கு சென்று மோகன்குமாரைக் கைதுசெய்தனர். பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புக்காக, தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்புக்குள் எப்படி நுழைந்தார் இந்த மோகன்குமார்?

சைபர் க்ரைம் பிரிவு உதவி ஆய்வாளர் கணபதி, இது குறித்து நம்மிடம் விரிவாக விளக்கினார். ``இந்தப் பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒருத்தர், சமூக வலைதளத்துல யதார்த்தமாக ஆன்லைன் வகுப்பு பற்றிய தகவலைப் பதிவு செஞ்சிருக்காங்க. அது மோகன்குமார் கண்ணுல எப்படியோ பட்டிருருக்கு. ஆன்லைன் வாட்ஸ்அப் குரூப்போட அட்மினாக உள்ள ஆசிரியையின் செல்போன் நம்பரையும், ஒரு மாணவியின் பெயரையும் அதுல இருந்து எடுத்திருக்கிறார். தன்னோட செல்போன் நம்பர்ல இருந்து மோகன்குமார், அந்த ஆசிரியைக்கு மெசேஜ் அனுப்பி, `நான் உங்க கிளாஸ்ல படிக்குற மாணவிதான்’ எனப் பெயரைக் குறிப்பிட்டு, `என்னையும் வாட்ஸ்அப் குரூப்புல இணைங்க’னு சொல்லியிருக்கார். இதனால்தான் அந்த அட்மினுக்கு எந்தச் சந்தேகமும் வரலை. இது யாரோ ஒருத்தரோட செல்போன் நம்பர்னு தெரியாமல், மோகன்குமார் நம்பரை ஆன்லைன் வாட்ஸ்அப் குரூப்ல இணைச்சுட்டாங்க. இந்த குரூப்ல இருந்த சில ஆசிரியைகளுக்கும், மாணவிகளுக்கும் மோகன்குமார் எண்ணிலிருந்து தனியாக ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், ``ஆன்லைன் வகுப்புகளின்போது பள்ளி நிர்வாகம் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இதற்கான வாட்ஸ்அப் குரூப்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன்களைத் தொடர்ந்து கண்காணித்து, முறையாக தணிக்கை செய்ய வேண்டும். செல்போன் எண்களைப் பதிவு செய்யும்போதும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் இது போன்ற குற்றங்களில் யாராவது ஈடுபட்டால், சைபர் க்ரைம் பிரிவு மூலம் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவோம். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு