Published:Updated:

ஒரு கோடி ரூபாய் கேட்டு சேலம் தொழிலதிபர் கடத்தல்! - மரவள்ளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கைது

தலைவாசல் பைனான்ஸ் அதிபரைக் கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் சேலம் மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஆள் கடத்தல்
ஆள் கடத்தல்

அதேபோல், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வேல்துரைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). இவர், தலைவாசல் பகுதியில் பைனான்ஸ் நடத்தி வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் சென்றவர்கள் மணியின் குடும்பத்தினரிடம் போனில் பேசி, `ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மணியை விடுவோம். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டினார்கள்.

கோபாலகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்

இத்தகவலை மணியின் குடும்பத்தினர் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்கள். அதையடுத்து தலைவாசல் மற்றும் ஆத்தூர் போலீஸார் மணியைக் கடத்தியவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடத்தல்காரர்கள் மணியை மதுரையில் விட்டுவிட்டு சென்று விட்டார்கள். இவ்வழக்கை சேலம் மாவட்ட எஸ்.பி தீபா கானிகர் தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டுத் தேடி வந்தார்கள்.

இந்த கடத்தலில் தொடர்புடைய தன்ராஜ், சக்திவேல், விஜயன், விஜய்கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரதீப்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இந்த கடத்தல் வழக்கை முழுமையாக விசாரிக்க ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

`9 டீம்.. 35 போலீஸ்.. சேஸிங்..!’ - 21 நாள்களுக்குப் பிறகு கடத்தல் கும்பலிடமிருந்து இளைஞர் மீட்பு!

பைனான்ஸியர் மணி கடத்தல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வேல்துரைக்கும், சேலம் மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இருவரும் தலைமறைவாக இருந்தார்கள். அவர்களைக் காவல்துறையினர் பிடித்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.