Published:Updated:

`தற்கொலைக்கு என்ன காரணம்?' - திருவாரூர் பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் வேகமெடுக்கும் விசாரணை

திருவாரூர் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

மாணவி மைதிலி
மாணவி மைதிலி

திருவாரூர் அருகே நிலக்குடியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி மைதிலி தற்கொலை விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Representational Image
Representational Image

ஓசூரைச் சேர்ந்த மைதிலி என்ற மாணவி இப்பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி., பி.எட் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். அவர் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்திருக்கிறார். சக மாணவிகளுடன் உணவருந்துவது அவரது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு நீண்டநேரமாகியும் மைதிலி உணவருந்த வரவில்லை.

இதனால், மற்ற மாணவிகள், மைதிலியை அழைத்துவர அவரது அறைக்குச் சென்றிருக்கிறார்கள். அங்கு மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்தநிலையில் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, உடனடியாக பல்கலைக்கழக அலுவலர்களுக்கும் நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

திருவாரூர்
திருவாரூர்

பல்கலைக்கழக விடுதிக்கு வந்த போலீஸார், மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தோம். ``மைதிலியும் இதே பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி படிக்கும் மாணவர் ஒருவரும் நண்பர்களாகப் பழகி வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ மன வருத்தம் ஏற்பட்டதால, அந்த மாணவர் மைதிலியோடு பேசுவதை நிறுத்திட்டார். இதனால் கடந்த இரண்டு வாரங்களாகவே மைதிலி மனஉளைச்சலோடு இருந்தார்.

அவர் முகம் சோகமாக இருந்தது. சனிக்கிழமை மதியம் அந்த மாணவர் சினிமாவுக்குப் போனதைக் கேள்விப்பட்டு, தங்களுக்குள் ஏற்பட்ட பிரிவைப் பற்றி, அவர் கவலைப்படாமல் சினிமாவுக்குப் போனதை எண்ணி மைதிலி மேலும் மன உளைச்சல் அடைந்திருக்கிறார். இந்தநிலையில் மைதிலி இந்தத் துயர முடிவுக்குப் போயிருக்கக்கூடும்” என்கிறார்கள்.

`நீங்க சந்தோஷமாக இருக்கணும்; நான் உயிரிழக்கிறேன்'- திருச்சியிலும் மாணவிகள் தற்கொலை?

மத்திய பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் கேட்டபோது, ``மைதிலியின் மரணத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இங்குள்ள பேராசிரியர்களோடோ, விடுதி பொறுப்பாளர்களோடோ, மைதிலிக்கு எந்த ஒரு சிறு பிரச்னையும் இல்லை” எனத் தெரிவித்தார்கள்.