Published:Updated:

`22 பேரிடம் ரூ.60 லட்சம் சுருட்டல்!' - தி.மலை ஆசிரியர் தம்பதி மீது அரசு வேலை மோசடிப் புகார்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 60 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஆசிரியர் தம்பதி மீது, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பணத்தை இழந்தவர்கள்.
பணத்தை இழந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், சின்னஏழச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயியப்பன். இவர் செய்யாறு கல்வி மாவட்டம், சோழவரம் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரமணிபாய் மண்ணூர் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து, பலபேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாகத் திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்.

 `பணத்தை ரெடி பண்ணுங்க, 10 நாளில் அரசு வேலை'‍-மோசடி கும்பலிடம் 10 லட்சத்தை இழந்த தேனி இளைஞர் கண்ணீர்

ஆசிரியர் பணிக்குப் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த பொன்ஜெகன்னாதனிடம் பேசினோம். ``நான் M.A, B.Ed பட்டதாரி. எனக்கு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, என்னிடமும் என்னுடைய அப்பாவிடமும் பணம் கட்டச்சொல்லி தொடர்ந்து வற்புறுத்தினார் ஆயியப்பன். அவரை நம்பி முன்பணமாக 5 லட்சம் ரூபாயை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரிடம் கொடுத்தோம். அவர், காஞ்சிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம் கொடுத்ததாகச் சொன்னார். பணம் கட்டியதற்கு ஆதாரமாகப் பார்த்திபன் கையொப்பமிட்ட பாண்டு பத்திரத்தை என்னிடம் கொடுத்தார் ஆயியப்பன். ஆனால், இதுநாள் வரையில் எந்த வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை.

இவர்கள் வேலை வாங்கித்தரமாட்டார்கள் என்று தெரிந்து, பாண்டு பத்திரங்களை வைத்து பணத்தை வாங்கிவிடலாம் என்று பார்த்தபோது, அந்த பாண்டு பத்திரங்களைவைத்து வழக்கு தொடர முடியாத அளவுக்கு அதில் உள்ள தேதிகளை அடித்தம்திருத்தம் செய்துள்ளனர். என்னை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆயியப்பனே பாண்டு பத்திரத்தை எழுதி அவரே சாட்சிக் கையொப்பம் போட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக ஆயியப்பன் வீட்டுக்கு நேரில் சென்று பணத்தைக் கேட்டதற்கு என்னை மிரட்டுகின்றார்கள் ஆயியப்பனும் அவரின் மனைவி ரமணிபாயும். என்னை ஏமாற்றியதுபோலவே, 22 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏமாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும், 2 லட்சம் முதல் 6.5 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் கணவன் மனைவியும் சேர்ந்து” என்றார் கலங்கியபடி.

வேலை தேடுபவர்கள்தான் குறி; போலி ரயில்வே பணி ஆணை; 60 லட்சம் மோசடி! - யார் இந்த சத்திய மூர்த்தி?
எஸ்.பி ஆபிஸ்
எஸ்.பி ஆபிஸ்

இதேபோன்று 2 லட்ச ரூபாய் இழந்த கங்காதரன் கூறுகையில்,``மின்சாரத்துறையில் எனக்குத் தெரிந்த உயர் அதிகாரி இருக்கிறார். அவரிடம் சொல்லி உனக்கு ஜே.இ. வேலை வாங்கித்தருகிறேன் நம்பிக்கையோடு 2 லட்சம் கொடு என்று ஆயியப்பன் கேட்டுக்கொண்டே இருந்தார். நானும், நம்பிக்கையோடு கொடுத்தேன்; ஏமாற்றிவிட்டார்" என்றார்.

இதுகுறித்து ஆயியப்பனின் மனைவி ரமணிபாயிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். தயக்கத்தோடு பேசிய ரமணிபாய், ``பணத்தை வாங்கி நாங்கள் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை. காஞ்சிபுரம் காந்திநகர் 1-வது தெருவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரிடம், என் கணவர் பணத்தைக் கொடுத்தார். அவர்தான் வேலை வாங்கித் தருவதாக என் கணவரிடம் கூறி பணத்தை வாங்கிக்கொண்டார். இந்த நிலையில் அவர் கொஞ்ச நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

`22 பேரிடம் ரூ.60 லட்சம் சுருட்டல்!' - தி.மலை ஆசிரியர் தம்பதி மீது அரசு வேலை மோசடிப் புகார்

அவருடைய மனைவி பத்மாவதியிடம் கேட்டதற்கு, `அதெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது’ என்று கூறுகிறார். நாங்கள் என்ன செய்வது. பார்த்திபன் உயிரோடு இருக்கும்போது யாரும் பணம் எங்களிடம் கேட்கவில்லை. அவர் இறந்தபிறகு எங்களிடம் வந்து கேட்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் ரமணிபாய்.