மும்பை தாராவியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு, பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் 2020-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் சில நாள்கள் ஆன்லைனில் சாட்டிங் செய்தனர். பின்னர் அந்தப் பெண், சிறுவனிடம் அவரை காதலிப்பதாக ஆன்லைனில் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த சிறுவன் அதனை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு அந்தப் பெண்ணின் சமூக வலைதள கணக்கை அவர் பிளாக் செய்துவிட்டார். இதனால் அந்தப் பெண் வேறு ஒரு பெயரில் புரொஃபைல் உருவாக்கி, மீண்டும் அந்த சிறுவனுடன் சமூக வலைதளம் மூலம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், அந்த சிறுவன் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அதை அறிந்துகொண்ட அந்தப் பெண் தனது வீட்டுக்கு வரும்படியும், தன் பெற்றோரை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த சிறுவனும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். ஆனால், அங்கு அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை. அதையடுத்து அந்தப் பெண், சிறுவனை கட்டயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண், ``நான் விரும்புவதை செய்யவேண்டும். தவறினால் உன் மீதும், உனது குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் செய்வேன்" என்றும் மிரட்டியிருக்கிறார். அதனால், சிறுவன் இதுகுறித்து வெளியில் சொல்லவில்லை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண், சிறுவனை மும்பையின் பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், சிறுவன் இதுகுறித்து தன் பெற்றோரிடத்தில் தெரிவித்திருக்கிறான்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனே அவன் பெற்றோர் பீகாரிலிருந்து மும்பை வந்தனர். அவர்கள் அந்தப் பெண்ணைச் சந்தித்து தங்கள் மகனிடமிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில், கடந்த மாதம் அந்தப் பெண், சிறுவன் மீதும் அவர் பெற்றோர் மீதும் போலீஸில் புகார் செய்தார். அதையடுத்து, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் போலீஸார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனால், உடனடியாக முன்ஜாமீன் பெற்ற சிறுவனின் குடும்பத்தினர், தாராவி போலீஸில் அந்தப் பெண் மீது புகார் செய்தனர். அதையடுத்து, தாராவை போலீஸார் அந்தப் பெண் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அந்த சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.