Published:Updated:

`வாடகையே வரல; வீட்டுக்குள் அரசு முத்திரை நாப்கின்கள்!'- ஹவுஸ்ஓனரால் சிக்கிய சிவகங்கை திருடன்

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி அரசுப்பள்ளியில் திருடியவரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்.

நாப்கின் குப்பைகள்
நாப்கின் குப்பைகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த இலுப்பக்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 6-ம் தேதி இரவு சுமார் 10:30 மணிக்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது திருட்டு நடந்தது. பள்ளியில் வைக்கப்பட்டிருந்த விலையில்லா மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன் மற்றும் இலவச நாப்கின்கள் ஆகியவை திருடுபோயின.

இல்லுப்பக்குடி
இல்லுப்பக்குடி

பள்ளியில் சிசிடிவி கேமரா இல்லாததால் வேறு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதனால் திருடியது யார் எனக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறிவந்தனர்.

திருட்டில் ஈடுபட்ட நபர், பள்ளியின் சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடியை சம்பவ இடத்தில் தூவிச்சென்றிருக்கிறார். இதனால், மோப்ப நாய் மூலம் விசாரிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பள்ளி அறை
பள்ளி அறை

இந்த நிலையில், திருடுபோன பள்ளி அருகே உள்ள இலுப்பக்குடி கண்மாய்க் கரையில் அரசு முத்திரையுடன் கூடிய நாப்கின்கள் கிடப்பதாக பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், அரசு முத்திரையுடன் கூடிய லேப்டாப்புகளும் அங்கு கிடந்ததாகச் சொல்கிறார்கள். இந்தத் தகவல் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் மூலம் போலீஸாருக்குத் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. அவை பள்ளியிலிருந்து திருடப்பட்டவையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கின்றனர். விசாரணையில், அந்த நாப்கின்களை அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் சாத்தையா என்பவர் குப்பையில் வீசிவிட்டுச் சென்றதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அவரிடம் விசாரித்திருக்கிறார்கள் போலீஸார். விசாரணையில்,``எனது வீட்டில் குடியிருந்துவரும் பாண்டியன் என்பவர் பல மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை. அதனால், என்னிடமிருந்த மாற்றுச்சாவி மூலம் அந்த வீட்டைத் திறந்து அவர் பொருள்களை எடுத்து வெளியில் வீச எண்ணினேன். வீட்டைத் திறந்து பார்த்ததில், லேப்டாப்புகள், நாப்கின்கள் போன்றவை இருப்பதைக் கண்டேன். இதனால், அந்தப் பொருள்களை எடுத்து குப்பையில் வீசினேன்'' என்று சாத்தையா கூறியிருக்கிறார்.

நாப்க்கின்
நாப்க்கின்

மேலும், தனது வீட்டைச் சுற்றி பல இடங்களில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருப்பதையும் அவர் போலீஸாரிடம் காட்டியிருக்கிறார். சாத்தையா வீட்டில் குடியிருந்த பாண்டியனே, அரசுப் பள்ளியில் திருடியிருக்கிறார் என்பதை அழகப்பபுரம் போலீஸார் உறுதி செய்திருக்கிறார்கள். பாண்டியன் தலைமறைவானதைத் தொடர்ந்து, அவரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். இலுப்பூர் அரசுப் பள்ளியில் கைவரிசை காட்டிய பாண்டியன் மதுரையைச் சேர்ந்தவர் என்கிறார்கள் போலீஸார்.