Published:Updated:

`தாவரவியல் மாணவி தற்கொலை; 3 பக்கக் கடிதம்!' - பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி தற்கொலை.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஊழல், முறைகேடு என எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். இந்த முறை பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

நிவேதா
நிவேதா

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகள் நிவேதா வயது 23. இவர் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி எம்.எஸ்ஸி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிவேதா விடுதியில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாகக் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீஸார் வழக்கு பகுதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுபற்றி மாணவி நிவேதாவின் தந்தை திருமலையிடம் பேசிய போது, ``என்ன காரணத்துக்காக என் மகள் இறந்தார் என்று தெரியவில்லை. என் மகள் ரொம்ப தங்கமானவள். என் மகள் இறந்த துயரத்திலிருந்து எங்களால் இன்னும் மீள முடியவில்லை. என் மகள் இறப்பில் பல சந்தேகங்கள் இருக்கும்போது சில ஊடகங்கள் என் மகள் ஒருதலைக் காதலால் இறந்ததாக எழுதி எங்களை உயிரோடு சாகடிக்கிறார்கள். என் மகள் அப்படிப்பட்டவள் அல்ல. அவளை நான் ஒழுக்கமாக வளர்த்து இருக்கிறேன்.

எது எழுதுவதாக இருந்தாலும் எங்களுடைய தரப்பு நியாயத்தைக் கேட்டு எழுத வேண்டும். ஆனால், எங்களிடம் யாரும் கேட்காமல் எழுதுகிறார்கள். ஒருதலைக்காதல் என்றால் எதற்காகத் கடிதம் எழுத வேண்டும். கடிதத்தில் அந்தப் பையன் பெயரை ஏன் எழுதவில்லை. இப்படிப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. என் மகள் தங்கி இருந்த அறை இன்னும் திறக்கப்படவில்லை. அவள் பயன்படுத்திய உடைமைகளை இன்னும் நாங்கள் பெறவில்லை. அதற்குள் இப்படி பொய்யான தகவல்களை எழுதுகிறார்கள்'' என்று கண்ணீர் வடித்தார்.

இதுபற்றி பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போது, ``பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அவருடைய மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. மாணவி நிவேதா படித்த தாவரவியல் துறைப் பேராசிரியர் செல்வத்தின் மீது ஒரு வாரத்துக்கு முன்புதான் விலங்கியல் துறை மாணவிக்கு லிப்ட்டில் செல்லும்போது பாலியல் தொந்தரவு செய்ததாகப் புகார் வந்தது. இந்தநிலையில் தாவரவியல் துறையைச் சேர்ந்த ஒரு மாணவி இறந்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தாவரவியல் துறையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தினால் பல உண்மைகள் வெளியே வரும்'' என்றார்கள்.

குழந்தைவேலு
குழந்தைவேலு

மாணவி நிவேதாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் எஸ்.ஐ.அங்கப்பன், ``தற்கொலை செய்துகொண்ட மாணவி 3 பக்கக் கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் ஒருவரை மிகவும் உருக்கமாக நேசிப்பதாக எழுதியுள்ளார். ஒருதலைக் காதலாக இருக்க வாய்ப்புள்ளதாக எங்களுடைய முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. ஆனால், யார் அந்தப் பையன் என்பதெல்லாம் எழுதவில்லை. விசாரணை செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் தெரிய வரும்'' என்றார்.

இதுபற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டோம். ``மாணவி நிவேதா என்ன காரணத்துக்காக இறந்தார் என்று தெரியவில்லை. காவல்துறை விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். துறை ரீதியாகக் காவல்துறைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அவர்கள் விசாரணையை முடித்த பிறகுதான் மாணவி எதற்காக இறந்தார் என்ற தகவல் தெரியவரும்.

கல்லூரி லிப்ட்டில் தாவரவியல் துறைத் தலைவர் செல்வம் செல்லும்போது சில மாணவிகள் லிப்ட்டில் ஏறி இருக்கிறார்கள். `நீங்களெல்லாம் சின்ன பொண்ணுங்கதானே படியில் நடத்து போகலாமே எதற்கு லிப்ட்டில் வயதானவர்களைப் போல ஏறி வருகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மாணவி,`எனக்கு உடல் நிலைச் சரியில்லாததால் லிப்ட்டில் செல்வதற்கு கல்லூரியில் அனுமதி பெற்றிருக்கிறேன்' என்று கூறி இருக்கிறார். லிப்ட்டில் நான்கைந்து பேர் இருக்கும் போது எப்படி பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' என்றார்.