Published:Updated:

`சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே; மிளகாய்ப் பொடி!' - தஞ்சை கோயிலை அதிரவைத்த கொள்ளை

தஞ்சை கோயில்
தஞ்சை கோயில்

தஞ்சையில் 600 ஆண்டுகள் பழைமையான கோயிலில் ஸ்பிரேயர் மூலம் நுரை அடித்து மூடியும், மிளகாய்ப் பொடி தூவியும் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் நகர்ப் பகுதியான கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழைமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று அதிகாலை பின்புறம் உள்ள கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள், கோயிலில் இருந்த 3 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரம் கொண்ட ஜினவாணி என அழைக்கப்படுகிற சரஸ்வதி, ஜோலமணி, அரை அடி உயரம் உடைய நதீஸ்வரர், ஒரு அடி உயரத்தில் இருந்த பஞ்சநதீஸ்வரர், முக்கால் அடி உயர நவக்கிரக தீர்த்தங்கரர், நவ தேவதா, தாமிரத்தில் செய்யப்பட்ட ஒரு அடி உயர 24வது தீர்த்தங்கரர் உட்பட பல சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

தஞ்சை கோயில்
தஞ்சை கோயில்

திருட்டுப்போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் கோயிலில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், போலீஸிடம் சிக்கிவிடாமல் இருப்பதற்காக கோயிலைச் சுற்றிலும் மிளகாய்ப் பொடி தூவியிருந்தனர். அத்துடன், கோயில் வளாகத்திற்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பிறந்தநாள் விழாவில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேயின் நுரையை அடித்து நூதன முறையில் கேமராவை மறைத்துள்ளனர். அதன் பிறகே சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று வழக்கம் போல் கோயிலுக்கு வந்த குருக்கள் ஜலேந்திரன் சிலைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அதன்பிறகு கோயிலுக்கு வந்த போலீஸார், கோயிலில் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளையர்கள் சிசிடிவி கேமராவை ஸ்பிரே அடித்து மூடியுள்ளதையும், மிளகாய்ப் பொடி தூவியுள்ளதையும் கண்ட போலீஸார், கேமராவில் அடிக்கப்பட்ட நுரை கரையாமல் அப்படியே இருந்ததால் அதிகாலையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்க வாய்புள்ளது எனத் தெரிவித்தனர்.

ஸ்பிரே அடிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா
ஸ்பிரே அடிக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா

பின்னர் மோப்ப நாய் டபி சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. டபி, கோயிலுக்குப் பின்புறத்தில் ரவுண்ட் அடித்து நின்றுவிட்டது. இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்,

``கோயிலில் மொத்தம் 3 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இவற்றில் இரு கேமராக்களில் காட்சிகள் பதியக்கூடாது என்பதற்காக மர்ம நபர்கள் ஸ்பிரேயர் கொண்டு அடித்து லென்ஸை மூடிவிட்டனர். இதனால், மற்றொரு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்து வருகிறோம்'' என்றனர்.

கொள்ளைச் சம்பவம் நடந்த பகுதியினரிடம் பேசினோம். ``கோயிலைச் சுற்றி நிறைய வீடுகள் உள்ளன. ஆனால், கொள்ளையர்கள் எந்தப் பயமும் இல்லாமல் சுவர் ஏறிக் குதித்து பின்பக்கக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அத்துடன் இரண்டு நாள்களாக கோயில் குருக்கள் கோயிலுக்கு வராததை நோட்டமிட்டும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மாட்டிவிடக் கூடாது என்பதற்காக மிளகாய்ப் பொடியையும் தூவியுள்ளனர். இதேபோல் இரண்டு மாதத்திற்கு முன்னர் அம்மன் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் மிளகாய்ப் பொடியைத் தூவி மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால், லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டனர். அதில் ஈடுபட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

விசாரணை நடத்தும் காவல் துறையினர்
விசாரணை நடத்தும் காவல் துறையினர்

இந்தநிலையில் அதே ஸ்டைலில் மிளகாய்ப் பொடி தூவி கோயிலில் இருந்த பழைமையான சிலைகள் திருடப்பட்டுள்ளன'' என்றனர் கவலையுடன். இந்தச் சம்பவம் கோயில் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு