Published:Updated:

நிர்வாண வீடியோக்கள்; திருமணம் தாண்டிய உறவு, பாத்ரூம் லைவ், ஸ்ட்ரெஸ் பஸ்டர்; பெண்கள் உலகிலும் பகீர்!

Woman (Representational Image) ( Photo by Stefano Pollio on Unsplash )

இங்கே பிரச்னையை வெளியில் பேசியிருப்பது ஒரு பெண் மட்டுமே. அதைப் படித்தாலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பரஸ்பரம் புகார்கள் தெறிக்கின்றன. இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று போலீஸே அதிரும் அளவுக்குத்தான் இருக்கின்றன குற்றச்சாட்டுகள் பலவும்.

நிர்வாண வீடியோக்கள்; திருமணம் தாண்டிய உறவு, பாத்ரூம் லைவ், ஸ்ட்ரெஸ் பஸ்டர்; பெண்கள் உலகிலும் பகீர்!

இங்கே பிரச்னையை வெளியில் பேசியிருப்பது ஒரு பெண் மட்டுமே. அதைப் படித்தாலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பரஸ்பரம் புகார்கள் தெறிக்கின்றன. இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று போலீஸே அதிரும் அளவுக்குத்தான் இருக்கின்றன குற்றச்சாட்டுகள் பலவும்.

Published:Updated:
Woman (Representational Image) ( Photo by Stefano Pollio on Unsplash )

மிரளவைக்கும் பாலியல் புகார்கள் வெளிவருவது தமிழகத்தில் தற்போது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. பொள்ளாச்சி சம்பவம் தொடங்கி, சமீபத்திய விருதுநகர் சம்பவம் வரை பாலியல் குற்றச்சாட்டுகள் என்றாலே ஆண்களை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஆனால், சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் கொடுத்துள்ள பகீர் பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்படுபவர்கள் 99 சதவிகிதம் பேர் பெண்கள் என்பதுதான் அதிர்ச்சித் தரக்கூடிய செய்தி. புகாருக்கு இலக்காகியிருக்கும் பெண்கள் அனைவரும் சமூகஊடகங்களில் பெண் உரிமை, பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து தொடர்ந்து பேசி வருபவர்கள் என்பது மேலும் பதைபதைக்க வைக்கிறது!

`பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்று பேசி, குடும்ப அமைப்பில் கசப்பான அனுபவம் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து அவர்களை பாலியல் சுரண்டல் செய்கின்றனர். நாளடைவில் இது ஃப்ரீ செக்ஸ் கலாசாரமாக மாறுகிறது. பல பெண்களை பாலியல் தொழில் வரைக்கும் கொண்டுபோய் நிறுத்துகிறது' என்பதுதான் அந்தப் புகார்.

தேசிய மகளிர் ஆணையம் வரை சென்ற அந்தப் புகார், தற்போது தமிழக காவல்துறையால் தீவிரமாக விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ஆண் ஒருவர் கைதும் செய்யப்பட்டுள்ளார். திருமணமான பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னணியில் அரசியல் செல்வாக்குள்ள பெண்கள் பலரும் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விஷயத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைக் காவல்துறை தொடர்ந்து துருவிக்கொண்டே இருக்கிறது. நீண்டுகொண்டே இருக்கும் இந்த விசாரணை எங்குபோய் முடியும் என்று தெரியவில்லை. இங்கே பிரச்னையை வெளியில் பேசியிருப்பது ஒரு பெண் மட்டுமே. அதைப் படித்தாலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. பரஸ்பரம் புகார்கள் தெறிக்கின்றன. இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று போலீஸே அதிரும் அளவுக்குத்தான் இருக்கின்றன குற்றச்சாட்டுகள் பலவும். மொத்தத்தில் பெண்களே.... உஷார், மேலும் உஷார் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. கட்டுரையை முழுமையாகப் படித்தால், இதைத்தான் நீங்களும் சொல்வீர்கள்!

Woman (Representational Image)
Woman (Representational Image)
Photo by Nicolas Postiglioni from Pexels

அப்படி என்னதான் புகார்?

ஐம்பது வயதைக் கடந்த அந்தப் பெண் கொடுத்திருக்கும் புகாரில், ``கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு லுலு தேவ ஜம்லா என்பவர் முகநூலில் எனக்கு அறிமுகமானார். கன்னியாகுமரி மாவட்டம், உடையார்விளையை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதையும், சாதி, மத பேதமின்றி Radical feminism பேசி வந்ததையும் நான் தெரிந்துகொண்டேன். புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்காகச் சென்னை வந்திருந்தார் லுலு. நான் மதிக்கத் தகுந்த மத்திய அரசு உயர் பதவில் இருக்கும் அதிகாரிகள் சிலரும், பெண்ணிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதில் கலந்துகொண்டதை முகநூல் வாயிலாகத் தெரிந்துகொண்டேன்.

லுலுவை நேரில் சந்திக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வம் வந்து, அவரிடம் கேட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்தோம். அவருடன் பவானி என்பவரும் வேறுசில பெண்களும் சில ஆண்களும் இருந்தனர். அவர்களுடனான உரையாடலின்போது, முகநூலில் `WSB rebel s 2.0’ என்ற ரகசியக்குழு வைத்திருப்பதும், அதில் பல்வேறு விஷயங்களை விவாதித்து வருவதும் தெரியவந்தது. அவர், மீண்டும் ஆஸ்திரேலியா சென்றதும், அக்குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டேன்... இணைத்துக்கொண்டார். லுலு அட்மினாகவும் பவானி உள்ளிட்ட சிலர் மாடரேட்டராகவும் இருந்தனர்.

ஆடையின்றி போட்டோ வீடியோ பகிர டாஸ்க்!

அந்தக் குழுவில் சில Task-க்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதுகுறித்த விவாதங்களும் நடந்தன. பெண்கள் உள்ளாடைகளுடனும் அல்லது ஆடைகள் இல்லாமலும் புகைப்படங்களைக் குழுவில் பகிரவேண்டும் என்பதுதான் டாஸ்க். பலரும் ஷேர் செய்திருந்தனர். திருமணம் தாண்டிய உறவுகள், தற்காலிக காதலர்களுடன் உறவு, மற்ற பெண்களுடைய கணவர்களோடு உறவில் இருக்கலாமா? குழுவில் உள்ளவர்கள், தங்களின் கணவர்களுக்கு பிற பெண்களுடைய படுக்கையில் இடம் அளிக்கலாமே! என்பது போன்ற விவாதங்கள் தொடர்ந்தன. இவை எல்லாம் தவறில்லை என்று பலரும் வலியுறுத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`கணவர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், துணிச்சலோடு எதிர்கொண்டு அதைத் தொடர வேண்டும். எதிர்ப்பு தொடர்ந்தால், குடும்பக் கட்டமைப்பைவிட்டே வெளியேறிவிட வேண்டும்’ என்றும் குழுவில் உள்ள பெண்களிடம் பேசி பவானி மூளைச்சலவை செய்து வந்தார். பெண்களைக் குடிப்பழக்கத்துக்கு உட்படுத்துவதும் தவறில்லை; திருமணம் தாண்டிய உறவுகள்தான் பெண்களுக்கான சுந்ததிரம்; பெண்கள் தங்கள் செக்ஸ் தேவைக்காக எந்த ஆணையும் பயன்படுத்திக்கொள்ளலாம்; பணத்துக்காக உறவு வைத்துக்கொள்ளலாம் எனத் தொடர்ந்து போதித்து வந்தனர்.

இந்தச்சூழலில், பவானி தினமும் இரவில் எனக்கு வீடியோ கால் செய்து என்னையும் மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தார். பலமுறை இரவில் பேசுவதால், என் கணவர் கண்டித்தார். இதுகுறித்து பவானியிடம் சொன்னபோது, குடும்பத்தைவிட்டு வெளியே வந்துவிடு என்று கூறியதுடன், என்னையும் அந்தக் குழுவில் இவ்வாறான விஷயங்களைப் பதிவதற்கு ஊக்கப்படுத்தினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லைவில் உதட்டு முத்தம்!

என் திருமண வாழ்க்கைக் குறித்து குழுவில் பலமுறை பேசியிருக்கிறேன். `எனக்குச் சரியான திருமண வாழ்க்கை வாய்க்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாகத் தனியாகத்தான் தூங்குகிறேன். நான் ஒரு bisexual. ஓரினச் சேர்க்கையாளர்கள் குழுக்களோடு இணைந்து பணியாற்றுகிறேன். ஆண் அல்லது பெண் பலரையும் காதலிக்கக்கூடிய identity உள்ளவள் என்பதையெல்லாம் பலமுறை குழுவில் எழுதியும் பேசியும் இருக்கிறேன். என் திருமண வாழ்க்கையினால் Depression வரும்போதெல்லாம் மாத்திரை சாப்பிடுகிறேன்' என குழுவில் அழுது லைவ் போட்டுள்ளேன்.

கோவையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க ஒரு தடவை செல்ல வேண்டியிருந்தது. அதில் ஓடுவதற்கு WSB T-Shirt தருவதாகக்கூறி தன்னுடைய மகள் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார் பவானி. அங்கே யாருமே இல்லை. வீட்டைச் சுற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லி, என்னை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கட்டிலில் அமரச் செய்து, உதட்டு முத்தம் கொடுத்தார். அதை அப்படியே குழுவில் லைவ் செய்தார். இதனையடுத்து குழுவில் உள்ள அம்பிகா சஜு என்ற பெண் என்னுடன் அதிகம் பேசத் தொடங்கினார். எனக்குத் தினமும் வீடியோ கால் செய்தார். தொடர்ந்து அக்கறையுடன் பேசினார். என்மீது இவ்வளவு அக்கறை செலுத்த ஒரு நபர் இருக்கிறார் என்று மனம் நெகிழ்ந்தேன். `தண்ணி அடிக்கலாம்... செக்ஸ் செய்யலாம். எங்கள் ஊருக்கு வா' என்றெல்லாம் என்னை வற்புறுத்த ஆரம்பித்தார் அம்பிகா சஜு. ஆனால், நான் செல்லவில்லை. குழுவிலே உள்ள இரு பெண்கள் காதலிப்பது தவறல்ல என்று கருத்து கூறினர். அப்படி குழுவில் உள்ள பல பெண்கள் ஒருவரை ஒருவர் காதலித்தது சகஜமாக நடந்தது.

கட்டிலில் இருக்கும்போது வீடியோ கால்!

அம்பிகா பேசியதையெல்லாம் பவானியிடமும் ஷேர் செய்தேன். அவரும் அதை ஊக்கப்படுத்திர். இந்தச் சூழலில்தான், தன் முன்னாள் காதலன் என்று ஜகன் என்பவரையும், ஜகனுடைய அண்ணன் லோகன் என்பவரையும் அறிமுகப்படுத்தினார் அம்பிகா. மூன்றுபேரும் இணைந்து `மனிதம் தேடி’ என்ற பெயரில் டிரஸ்ட் வைத்திருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து ஜகனிடம் என்னை அறிமுகப்படுத்திப் பேச வைத்தார். சில நாள்களுக்குப் பிறகு ஜகன், சென்னைக்கு ஒரு AWARD Function-க்கு வருவதாகவும் அவரை நான் சந்திக்க வேண்டும் என்றும் அம்பிகா கட்டாயப்படுத்தினார். ஜகனும் அதனை வலியுறுத்தினார். நான் பலமுறை மறுத்தபோதும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ஜகன் என்னை சந்திக்க என் அலுவலகத்துக்கே வந்தார். அங்கேயே சந்தித்து அவரை அனுப்பிவிட நினைத்தேன். ஆனால், இரவு உன்னுடன் தங்கி இருக்கவே bag எல்லாம் எடுத்துவந்ததாகச் சொன்னார்.

Representational Image
Representational Image
Photo by Mohammad Hoseini Rad on Unsplash

அந்த வார்த்தை என்னைப் பதற்றமாக்கியது. அலுவலகத்துக்குள் சென்றுவிட்டேன். அம்பிகா சஜு எனக்கு போன் செய்து ஜகன் சந்திப்பு குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்தார். நான் பணி முடிந்து வரும்வரை ஜகன் காத்திருந்தார். அவருடன் போகும்படி அம்பிகா தொடர்ந்து என்னைக் கட்டாயப்படுத்தியதுடன், `அவன் ஆல்கஹால் விரும்புவான். நீயும் அவனோடு ஆல்கஹால் எடுத்துக்கொள். இருவரும் ரிலாக்ஸ் செய்யுங்கள்' என்று நிர்பந்தித்தார். மூளைச்சளைவை செய்யப்பட்டவளாக என்ன நடக்கிறது என்பதைச் சிந்திக்க முடியாத நெருக்கடியில் தள்ளப்பட்ட நான், ஜெகனுடன் திருவான்மியூரில் அறை எடுத்துத் தங்க நேர்ந்தது. நாங்கள் இருவரும் கட்டிலில் இருந்தபோது, வீடியோ கால் செய்தார் அம்பிகா. நான் பயந்து அழுது வீட்டுக்குப் போகிறேன் என்றேன். இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்று இருவரும் சமாதானப்படுத்தினார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு, மனஉளைச்சல் அதிகமாகியது.

மாதம் 15,000 ரூபாய்க் கேட்டு மிரட்டல்!

நான், ஜகன், அம்பிகா மூவரும் இருக்கும்படியாக ஒரு வாட்ஸ்அப் குழு. நான், லோகன், அம்பிகா ஆகிய மூவர் இருக்கும்படி மற்றொரு வாட்ஸ்அப் குழு என இரண்டு புதிய குழுக்களை உருவாக்கினார் அம்பிகா. அந்தக் குழுக்களிலும் வீடியோ கால் பேசச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். சில தினங்களில் லோகன் இருந்த குழுவில் `WSB rebels 2.0’ என்ற குழுவில் இருந்த ஷெர்லின் கீதா என்பவரையும் இணைத்தார். அந்தக் குழுவில் என்னை மனம்விட்டு பேசவைத்து, என் அந்தரங்கத் தகவல்களை அனைத்தையும் அறிந்துகொண்டனர்.

ஜகன் இருந்த வாட்ஸ் அப் குழுவில் வேறு மாதிரி நடந்தது. ஜகன் குளித்துக்கொண்டேயெல்லாம் வீடியோ கால் பேசுவார். ஜகனின் நிர்பந்தம் காரணமாக நானும் பாத்ரூமில் போனை வைத்து நிர்வாணமாக ஜகன் முன் குளித்துவிட்டேன். இதனையடுத்து, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நான், அம்பிகாவிடம் கூறி அழுதேன். தேவையற்ற அச்சம்கொள்வதாகக் கூறி அலட்சியப்படுத்திய அம்பிகா, ஒருகட்டத்தில், ஜகனுக்கு மாதம் 15,000 ரூபாய் கொடுக்கும்படி என்னை வற்புறுத்த ஆரம்பித்தார். தொடர்ந்து பணம் கொடுக்க வைத்தார்கள்.

ஒருகட்டத்தில், மிரட்டலிலிருந்து விடுபட நினைத்து அவர்கள் தொடர்பிலிருந்து விலகினேன். அப்போதுதான் அவர்களுடைய இன்னொரு முகம் தெரியவந்தது. நான் ஜகனுடன் ஹோட்டலில் தங்கி இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் பவானி வசம் இருப்பதாகக் கூறி என்னை மிரட்டினார் அம்பிகா. அப்போதுதான் திட்டமிட்டுச் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதையே நான் உணர்ந்தேன்.

பிரச்னை செய்தால் வீடியோ லீக்!

தொடர்ந்து விசாரித்தபோதுதான், நான் குழுவில் இணைவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே இதுபோன்ற விஷயங்கள் நடந்துவருவதையும், குழுவிலிருந்து வெளியேறிய பெண்கள், இந்த விஷயங்களை விமர்சனம் செய்து வருவதை அறிந்தேன். பயந்துபோன நான், அந்தக் குழுவிலிருந்து வெளியேறுவதாகக் கூறினேன். லுலுவும் அம்பிகாவும் என்னை மிரட்டினார்கள். `WSB rebels 2.0’ குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், EMA அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட உறவுகள் தொடர்பான அந்தரங்கத் தகவல்கள், திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் EMA தொடர்புகள் லைவ் செக்ஸ் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து இப்படிப் பல பெண்களை மிரட்டுகிறார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது.

இந்த நிலையில்தான் 2020-ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, லுலு குழுவின் பாலியல் சர்ச்சைகள் குறித்து, பிரான்ஸ் நாட்டில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் தமிழச்சி என்பவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். `குழுவுக்குள் பெண்களை, ஆண்கள் நேரடியாகப் பார்ப்பதாகவும், குழுவால் பெண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. சமூக சீர்கேடு நடக்கிறது. பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்ததுபோல மிக ஆபத்தான பாலியல் சுரண்டல்கள் நடக்கின்றன' என்றெல்லாம் தமிழச்சி குறிப்பிட்டிருந்தார். குழுவில் உள்ள சிலருக்கு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பதாகவும் பெண்கள் ஏமாற்றப்பட்டு அவர்களே அறியாமல் நிர்வாணப் படங்கள், வீடியோக்கள் எடுக்க வைத்து, பகிர வைத்து மிரட்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

Women (Representational Image)
Women (Representational Image)
Photo by Mattia Ascenzo on Unsplash

இதைத் தொடர்ந்து குழுவில் சில கேள்விகளை நான் எழுப்பினேன். உடனே, `குழுமீது குற்றச்சாட்டுகளை சொல்லிவரும் பிரான்ஸ் தமிழச்சி மீது நீ புகார் கொடுக்கவேண்டும். இல்லையெனில் உன்னுடைய வீடியோக்களை வெளியிடுவோம்' என்று என்னை மிரட்டினார்கள். வேறு வழியில்லாமல் பிரான்ஸ் தமிழச்சி மீது புகார் கொடுத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தேன். தோழி ஒருத்திதான் என்னைக் காப்பாற்றினாள்.

இத்தோடு என்னை ஒதுக்கிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. குழுவில் நடக்கும் அக்கிரமங்கள் குறித்து பேசிய பிரான்ஸ் தமிழச்சியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் குழுவை விட்டு வெளியேறிய பெண்கள், குழுவைப் பற்றிய தகவல்களை வெளியே சொன்னால் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவிடுவேன் என்று லுலு அடிக்கடி முகநூல் லைவில் வந்து மிரட்டினார். இதனையடுத்து பிரான்ஸ் தமிழச்சியின் நிர்வாணப் படங்களை ரோசி மதி என்ற பெண் குழுவில் பகிர்ந்தார். அதுமட்டுமல்ல, குழுவில் sex grooming நடப்பதாகவும். இது ஒரு செக்ஸ் நெட்வொர்க்காக மாறி இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து குழுவிலிருந்து வெளியேறிய மாடரேட்டர் ஒருவர், தன் கணவரோடு இருக்கும் அந்தரங்க வீடியோக்களையும் புகைப்படங்களையும் fake id மூலம் வெளியிட்டனர். நான் மிரண்டு அமைதியாகிவிட்டேன்.

மீண்டும் டார்ச்சர்!

இந்தப் பிரச்னைகளெல்லம் ஓய்ந்தபோது, மீண்டும் தன்னிடம் பேசச் சொல்லி ஜகன் வற்புறுத்தினார். எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவித்தபோதும் மீண்டும் மீண்டும் கால் செய்து மிரட்டுகிறார். அம்பிகாவும் மிரட்டுகிறார். லுலுவும் அவரின் ஆதரவாளர்களும் fake id-களில் என்னைப் பகிரங்கமாக அசிங்கமாகப் பேசுவதுடன். `உன் வேலை போய்விடும், உன்னை அசிங்கப்படுத்துவேன். நீ எவனோடு ஹோட்டலில் தங்கினாய் என்பதையெல்லாம் வெளிப்படுத்துவேன்' என்று மிரட்டுகின்றனர். என் அந்தரங்க புகைப்படங்களும் வீடியோக்களும் எந்த நேரத்திலும் அவர்களால் வெளியிடப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளேன். என்னை யாரவாது கொன்றுவிடுவார்கள் என்றுகூட அச்சமாக இருக்கிறது. என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே இருக்கிறது. காவல்துறை, என்னைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்!

இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம், ``கேட்டதும் இப்படியெல்லாம்கூட நடக்கிறதா என அதிர்ச்சிகரமாக இருந்தது. `WSB’ என்ற பெயரின் அர்த்தம் வுமன்ஸ் ஸ்ட்ரெஸ் பஸ்டர் (women's stressbuster). பெண்கள் தங்கள் உரிமைகள் குறித்தும் பாலியல் சுதந்திரம் குறித்தும் பேசுவது, எழுதுவது தவறு கிடையாது. அது அவர்களது உரிமை. ஆனால், அதன் மூலம் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களை பாலியல் நெருக்கடிக்குள் சிக்கவைத்து, பணம் கேட்டு மிரட்டுவதெல்லாம் மிகப்பெரிய குற்றம்.

2020-ம் ஆண்டே இதுகுறித்து அடையாறு துணை கமிஷனரிடம் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண். ஆனால், இது பெண்களுக்குள் வாட்ஸ் அப் குழுவில் நடந்த பிரச்னை என அப்போது சாதாரணமாக விட்டுவிட்டனர். இந்நிலையில், அந்தப் பெண் நீதிமன்றத்துக்குச் செல்லவே, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது ஐடி ஆக்ட்டில் வருவதால், அதுதொடர்பான பிரிவு விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று மகளிர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறையிட, வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்து டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்பிய பிறகே இது எவ்வளவு சீரியஸான விஷயம் என்று தெரியவந்தது.

ஆட்சி மாறியதும் காவல்துறை அதிகாரிகளும் புதிதாக மாறியதால் இந்த வழக்கில் தனிக்கவனம் எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளார்கள். கடந்த 18-ம் தேதி அடையாறு காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, ஜகன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சொன்னவர்கள்,

``ஆண்களிடம்தான் உஷாராக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தைத் தூக்கிப்போட்டு, பெண்களிடமும் பெண்கள் உஷாராகவே இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு, வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது” என்றும் எச்சரித்தனர்.

என்மீது எந்தத் தவறும் இல்லை!

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, லுலு தேவ ஜம்லா தனது முகநூல் பக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துப் பதிவும் வீடியோவும் வெளியிட்டுள்ளார். `சில பெண்களை நான் மிரட்டி பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கினேன் என்று குற்றச்சாட்டு சொல்கிறார்கள். அதற்கு எதிரான ஆதாரங்களை நான் சமர்ப்பிக்க வேண்டும். எனக்குப் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்தக் குழுவில் 2020 மார்ச் 7-ம் தேதி நான் போட்ட ஒரு லைவ் வீடியோவே என்மீதும் என் குழுவினர் மீதும் எந்தத் தவறும் இல்லை என்பதற்கான ஆதாரம். நீங்களே பார்க்கலாம். அந்தக் குழுவில் நான் எப்படி உரையாடியுள்ளேன், எந்த மாதிரியான மொழியைப் பயன்படுத்தியிருக்கிறேன், என்னுடைய நிலைப்பாடுகளை நான் எப்படி வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த வீடியோவை தமிழக காவல்துறையும் பார்க்கவேண்டும்' என்று சொல்லி, குழுவில் அவர் ஒன்றரை மணி நேர லைவ் வீடியோவை பகிர்ந்துள்ளார். குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பெண்கள் மீதுதான் தவறு என்கிற அடிப்படையில் இருக்கிறது, அந்த வீடியோ.

Representational Image
Representational Image
Photo by Molly Blackbird on Unsplash

தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், `நம்மள மாதிரி சுந்தந்திரமா வாழ முயற்சி பண்ணி தோத்துப் போனவர்கள் உருவாக்கின கட்டுக்கதைகளையெல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொண்டு போடப்பட்டிருக்கிற பொய் வழக்குக்கு நான் எதற்குப் பயப்பட வேண்டும். நான் இந்தியா வர்றப்போ அரெஸ்ட் பண்ணாங்கன்னா நியூஸ் மீடியா கவரேஜ்லாம் இருக்கும். ஜாலியா சிரிச்சு, கையை அசைச்சுகிட்டே கேமராக்களை பார்த்து லவ்யூக்கள், உம்மாக்கள் கொடுத்துக்கிட்டே... முடிஞ்சா ஃபேஸ்புக், யூடியூபில் லைவ் போட்டுகிட்டே போலீஸ் ஜீப்ல ஏறிப் போவேன். நான் ஃபேஸ்புக்ல பேஜ் வச்சிருக்கிறதே பொழுதுபோக்கு மற்றும் பப்ளிசிட்டிக்காகத்தான். அது இலவசமா தாறோம்னு தமிழக அரசும் காவல்துறையும் சொல்லும்போது கசக்கவா போகுது.

ஆனா, நான் இப்போ இந்தியா வர்ற ஐடியாவே இல்லை. வந்தாலும் என்னை அவ்வளவு ஈஸியா ஜெயில்ல தூக்கி போட்ற முடியாது. ஏன்னா நான் வெறும் லுலு தேவ ஜம்லா, கன்னியாகுமரி, உடையார்விளை கிடையாது. ஆஸ்திரேலியன் சிட்டிசன். ஒரு மதிப்பு வாய்ந்த ஆஸ்திரேலிய அரசாங்க அதிகாரி. என்னைக் கைது செய்ய நிறைய ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. முக்கியமாக ஆதாரங்கள் வேண்டும். என்மீது இப்படி பொய்யான குற்றச்சாட்டு பரப்புபவர்களிடம் அப்படி எந்த ஆதாரமும் இல்லை” என்று நீள்கிறது அவர் பதிவு.

நேரில் பார்த்ததுகூட இல்லை!

அம்பிகா சஜுவைத் தொடர்புகொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ``புகார் கொடுத்த பெண்ணை இதுவரை நான் நேரில் பார்த்ததுகூட கிடையாது. முகநூல் வழியாக மட்டுமே பழக்கம். அப்படி இருக்கையில் நான் போன் மூலம் பேசி கட்டாயப்படுத்தி இன்னொருவருடன் உறவுகொள்ள வைத்தேன் என்பது அபத்தமாகத் தெரியவில்லையா? நான் நண்பர் என்ற முறையில் ஜகனை அறிமுகப்படுத்தினேன். அவ்வளவுதான். அவர் ஆண், பெண் இருபாலருடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடியவர். எப்போதும் அவருக்கு ஒருவர் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். ஜகன் அழகாக இருப்பதால் அவராகத்தான் அவருடன் உறவில் இருந்தார். எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது போல யாருடைய அந்தரங்க புகைப்படங்களும், வீடியோக்களும் என்னிடம் கிடையாது. நான் யாரையும் மிரட்டி பணம் வாங்கவும் இல்லை. வேண்டுமானால் எனது வங்கிக் கணக்கு, மொபைல், லேப்டாப்களை சோதனை செய்துகொள்ளலாம். இது முழுக்க முழுக்க பொய் வழக்கு” என்றவரிடம்,

``பிறகு ஏன் உங்களது பெயரை குறிப்பிட வேண்டும்?’' என்று கேள்வி எழுப்பினோம்.

``அந்தப் பெண்ணுக்கு பிரபலமான நபர்களுடன் உறவில் இருக்க வேண்டும். அதனால்தான் அவராகவே லுலுவைத் தேடி வந்தார். இப்போது அவரைவிட பிரபலமான பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். அவருடன் பிரான்ஸ் போய் செட்டில் ஆவதற்கான முனைப்பில் இருக்கிறார். ஆகையால்தான் இப்படியெல்லாம் பொய்ப்புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு ஆபாசமாக குழுவில் பேசியிருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஒருமுறை `நீங்கள் என்னை வயதானவளாகச் சொல்லலாம். ஆனால், என்னுடைய 24 வயது காதலன் அப்படிச் சொல்லவில்லை. நான் ஃபிட்டாக இருக்கிறேன். நீங்கள்தான் அன் ஃபிட்' என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் எங்கள்மீது எந்தத் தவறும் இல்லை என்பதையும் நாங்கள் சட்டப்படி நிரூபிப்போம். இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாம என்னை பலிகடா ஆக்கப்பார்க்கின்றனர்” என்றார் கலங்கியவாறு.

பவானி எண்ணுக்குப் பல முறை தொடர்புகொண்டோம், அவருடைய எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அவர், தன் தரப்பு விளக்கத்தை அளித்தால், வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.