Election bannerElection banner
Published:Updated:

குமரி: நெருங்கிப் பழகிய மாணவியின் தோழியுடன் ஓட்டம்! - போக்சோ வழக்கு... இளைஞரைத் தேடும் காவல்துறை

 சிறார் வதை
சிறார் வதை

சிறார் வதை செய்த மாணவியின் மொபைலிலிருந்து அவரது தோழி ஒருவரின் போன் நம்பரை எடுத்திருக்கிறான் மதன். பின்னர் அந்தப் பெண்ணிடம் போனில் பேசிப் பழகியிருக்கிறான்.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தைப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், `திங்கள் சந்தையை அடுத்த பாதிரிகோடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் மதன் (27) என்பவர் 2015-ம் ஆண்டு முதல் தன்னைக் காதலித்ததாகவும், அப்போது ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்த தன்னை 3.4.2015 அன்று மதன் நெருங்கிப் பழகியதுடன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறார் வதை செய்ததாகவும்’ அந்தப் புகாரில் கூறியிருக்கிறார். மேலும், திருமண ஆசைகாட்டி 11.08.2016 மற்றும் 20.02.2021 ஆகிய தேதிகளிலும் மதன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மதனைத் தேடிவருகின்றனர்.

போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள மதன்
போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ள மதன்

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் பேசினோம், ``திருமணம் செய்துகொள்வதாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மாணவியிடம் பழகியிருக்கிறான் மதன். மாணவியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்ற பிறகு மதன் அவர்களின் வீட்டுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான். மாணவியைத் திருமணம் செய்யவிருப்பதாக உறவினர்களிடம் கூறிவந்திருக்கிறான். இந்தநிலையில், மாணவியின் மொபைலிலிருந்து அவரின் தோழி ஒருவரின் போன் நம்பரை எடுத்திருக்கிறான் மதன். பின்னர் அந்தப் பெண்ணிடம் போனில் பேசி பழகியிருக்கிறான்.

திங்கள் சந்தைப் பகுதியைச் சேர்ந்த அந்தத் தோழிப் பெண்ணை காதலிக்கத் தொடங்கிய மதன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அந்தப் பெண்ணின் பெற்றோர் மகளைத் தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகு பாதிக்கப்பட்ட மாணவி தன்னைக் காதலித்தது குறித்தும், திருமணம் செய்துகொள்ளுமாறும் கேட்டிருக்கிறார். ஆனால் மதன் மாணவியைத் திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மதனின் பெற்றோரிடம் பேசிப் பார்த்தும் நியாயம் கிடைக்கவில்லை.

குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம்
குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திங்கள் சந்தையைச் சேர்ந்த பெண்ணுடன் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறான் மதன். அவனது போனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவனுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக இப்போது எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இந்தப் பெண்ணுக்கு நியாயம் கேட்டு போலீஸில் புகார் அளித்தோம்" என்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். "மதனின் தந்தை கிருஷ்ணன் ஒரு அரசியல் கட்சியில் கன்னியாகுமரி கோட்ட அமைப்புச் செயலாளராக இருக்கிறார். மதன் மீது வழக்கு பதிவு செய்து அவனைத் தேடிவருகிறோம். அவனைக் கைதுசெய்த பிறகுதான் வேறு பெண்களுடன் அவனுக்குத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு