Published:Updated:

`இரவில் வரும் மிஸ்டுகால்; 4 பெண்களுடன் கல்யாணம்!'- கணவனின் செயலால் `ஷாக்'கான மனைவி

இரா.மோகன்
உ.பாண்டி

கங்காதரன் மீது தான் கொடுத்த புதிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோமளா தேவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்துள்ளனர்.

கோமளா தேவியுடன் கங்காதரன்.
கோமளா தேவியுடன் கங்காதரன்.

வருடத்திற்கு ஒன்று என அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்து கொண்ட கல்யாண மன்னன் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார், அவர் மீது புகார் கொடுத்த பெண்ணை கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

கவிதாவுடன் கங்காதரன்
கவிதாவுடன் கங்காதரன்

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டை ராஜு என்பவரின் மகள் கோமளா தேவி. பட்டதாரியான இவருக்கும், மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த ராமு மகன் கங்காதரன் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கோமளா தேவியின் நகைகளை மூலதனமாக கொண்டு துபாயில், தனியார் கம்பெனி வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார் கங்காதரன். இத்தொழில் மூலம் கங்காதரனுக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளாது. இதையடுத்து கங்காதரன் தனது மனைவி கோமளா தேவியை துபாய்க்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியுள்ளார்.

நல்ல நிலையில் சென்று கொண்டிருந்த கோமளா தேவியின் வாழ்க்கையில் கங்காதரனின் நடத்தைகள் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளன. இரவு நேரங்களில் வேலை இருப்பதாகக் கூறிவிட்டு வெளியே செல்லும் கங்காதரன், வேறு பெண்களுடன் நெருக்கம் காட்டும் விசயம் இதன் மூலம் கோமளா தேவிக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய கோமளா தேவியை இந்தியாவிற்கு அழைத்து வந்த கங்காதரன், மாடக்கொட்டானில் உள்ள தனது வீட்டில் விட்டுவிட்டு துபாய்க்கு திரும்பிச் சென்றுள்ளார். துபாயிலிருந்து அவ்வப்போது வந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் கங்காதரன். இதுபோல் ஒருமுறை ராமு இந்தியா வந்திருந்த போது, இரவு நேரத்தில் கங்காதரனின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்துள்ளது. மிஸ்டு கால் வந்த அந்த எண்ணில் கோமளா தேவி தொடர்பு கொண்டபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிர் முனையில் பேசிய பெண் தன்னை கங்காதரனின் மனைவி என்றும், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதே அந்த அதிர்ச்சிக்கு காரணம். சின்ன சேலத்தைச் சேர்ந்த கவிதா என்ற அந்தப் பெண் குறித்து கோமளா தேவி, கங்காதரனிடம் விசாரித்துள்ளார். கவிதா என்ற பெண் யார் எனத் தெரியாது எனக் கூறி சமாளித்துள்ளார் கங்காதரன்.

யமுனாவுடன் கங்காதரன்.
யமுனாவுடன் கங்காதரன்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த கோமளா தேவி, கங்காதரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து அதில் பதிவாகி இருந்த எண்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை பார்த்துள்ளார். அதில் கவிதாவை தவிர சென்னையைச் சேர்ந்த யமுனா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதும், அது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆகியன பதிவாகி இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கங்காதரன் மீது கோமளா தேவி கடந்த 2015-ம் ஆண்டு புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் கோமளா தேவியிடம் சமரசம் பேசிய கங்காதரன், தான் திருந்தி விட்டதாகவும், இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன் எனவும் திருச்செந்தூர் கோயில் முன் கடலில் இறங்கி சத்தியம் செய்துள்ளார். இதை நம்பிய கோமளா தேவியின் பெயரில் இருந்த கம்பெனியையும் தனது பெயரில் எழுதி வாங்கிக்கொண்டுள்ளார் கங்காதரன்.

இந்நிலையில் தனது கள்ளத் திருமணங்களை நிறுத்திக்கொள்ளாத கங்காதரன், சென்னையைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணையும் திருமணம் செய்து சமீபத்தில் குழந்தையும் பிறந்துள்ளது. இதன் பின் தீபாவின் பெயரில் பாஸ்போர்ட் விண்ணப்பித்த கங்காதரன் அதில் கணவர் எனத் தனது பெயரையும், முகவரியாக தனது சொந்த ஊரான மாடக்கொட்டான் முகவரியையும் கொடுத்துள்ளார். தனது திருமணங்களின் போது சந்தேகம் எழாமல் இருக்க தனது உறவினர்களாக போலியான நபர்களை காட்டி அவர்கள் முன்னிலையிலேயே இந்தத் திருமணங்களை செய்துள்ளார் கங்காதரன்.

கோமளா தேவி வாழ்க்கை நடத்த மாதம் தோறும் பணம் மற்றும் குழந்தைகள் பெயரில் 10 லட்ச ரூபாயுடன், 5 சென்ட் நிலத்தையும் தருவதாக கங்காதரன் எழுதிக் கொடுத்துள்ளார்.
போலீஸார்

சினிமா பாணியில் அடுத்தடுத்து 4 பெண்களை திருமணம் செய்து கொண்ட தனது கணவர் கங்காதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் கோமளா தேவி புகார் அளித்தார். ஆதாரங்களை பெற்றுக்கொண்ட போலீஸார் கங்காதரனைப் பிடித்து விசாரித்ததில் தனது செயல்களை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கங்காதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார், கோமளா தேவியின் குழந்தைகள் பெயரில் ரூ.10 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்வதுடன், குடும்பச் செலவுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் கொடுப்பதாகவும் மேலும் கோமளா தேவி குடியிருந்து வரும் வீட்டினையும், 5 சென்ட் நிலத்தினையும் தனது மகன் பெயரில் எழுதித் தருவதாகவும் எழுதிக் கொடுத்திருப்பதாகக் கூறி, கங்காதரன் மீது தான் கொடுத்த புதிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கோமளா தேவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்துள்ளனர்.

இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய தரப்பில் விசாரித்தபோது, ``கங்காதரன் மீது ஏற்கெனவே வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் புதிதாக அவர் மீது வழக்கு போட முடியாது. மேலும் ஏற்கெனவே உள்ள வழக்கில் தற்போது கிடைத்த ஆவணங்களையும் இணைக்க வாய்ப்பு உள்ளது. இது மட்டுமன்றி கோமளா தேவி வாழ்க்கை நடத்த மாதம் தோறும் பணம் மற்றும் குழந்தைகள் பெயரில் 10 லட்ச ரூபாயுடன், 5 சென்ட் நிலத்தையும் தருவதாக கங்காதரன் எழுதிக் கொடுத்துள்ளார். இது குறித்து கோமளா தேவியிடம் எடுத்துச் சொன்னதின் பேரில் அவர் புதிதாகக் கொடுத்த புகார் மீது நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

தீபாவுடன் கங்காதரன்.
தீபாவுடன் கங்காதரன்.

பணமும், நிலமும் இருந்தால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது போல் உள்ளது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரின் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கை.