Published:Updated:

ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட திருவாரூர் சிறுமிகள்! - கோவை அருகே மீட்பு

ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட சிறுமிகள் இருவரும் ஈரோடு அருகே மீட்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

விசாரணை
விசாரணை

பள்ளிக்கூடம் படிக்கும் மகள்கள் இருவரை, குடும்பத்தின் வறுமைக்காகக் கோவையிலுள்ள பனியன் கம்பெனிக்கு ரூ.20,000 - க்கு விற்ற தாயின் அவலநிலை கண்டு திருவாரூர் மாவட்டம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

விசாரணை
விசாரணை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் - தனலட்சுமி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். இந்த மூன்று குழந்தைகளும் குடவாசலில் உள்ள மகாலட்சுமி மாணிக்கம் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் 5, 6 மற்றும் 3 ம் வகுப்புகளில் படித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான காளியப்பனின் மனைவி தனலட்சுமிக்கும் கேட்கும் திறன் குறைவு என்கிறார்கள். தென்னங்கீற்று முடையும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற நகரங்களில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்குக் குழந்தைத் தொழிலாளர்களை அனுப்பும் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் என்ற பெண்கள் காளியப்பன் குடும்பத்தினரை அணுகியிருக்கிறார்கள்.``பொம்பளப் புள்ளைங்களைப் படிக்க வைச்சி என்னத்த சாதிக்கப் போற? முடியாத புருஷனை வச்சிக்கிட்டு எப்படி இவர்களை வளர்ப்ப? இப்பவே பனியன் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினா, ஒரு தொழிலைக் கத்துக்கும். மூணு வேளை நல்ல சாப்பாடும், தங்கும் இடமும் கொடுத்து, பெத்த பொண்ணுபோல பார்த்துப்பாங்க.

விசாரணை
விசாரணை

உரிய காலத்துல அவுங்களே கல்யாணமும் பண்ணிக் கொடுத்துடுவாங்க. ரெண்டு பொண்ணுங்களை அனுப்பி வை. ஒரு பொண்ணுக்கு ரூ.10,000 வீதம் ரூ.20,000 வாங்கித் தாறோம்" என்று ஆசை வார்த்தைகள் பேசியிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத காது சரியா கேளாத தாய்க்கு சம்மதம் இல்லை. இருப்பினும், பாட்டி விஜயலட்சுமிதான் பணத்தை வாங்கிக் கொண்டு சிறுமிகள் கதறக்கதற கோவைக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்.

சிறுமிகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் நாம்கோ ( NAMCO) சேவை நிறுவத்தைச் சேர்ந்த புலவேந்திரனிடம் பேசினோம். ``குழந்தைத் தொழிலாளர்களாக 11 வயதுச் சிறுமிகள் அனுப்பப்பட்ட செய்தி கிடைத்ததுமே எங்கள் களப்பணியாளர்கள் விசாரணை செய்தார்கள். ரூ.20,000 பெற்றுக்கொண்டு, படிப்பைக் கெடுத்து கோவை பனியன் நிறுவனத்திற்கு சிறுமிகள் அனுப்பப்பட்ட விஷயம் உறுதி செய்யப்பட்டது.

அதன்பின் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். குடவாசல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் புகார் அளிக்கப்பட்டு, கோவையிலிருந்து சிறுமிகளை மீட்க போலீஸ் படை சென்றுள்ளது. குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய கம்பெனியினர், புரோக்கர்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் மீது காவல்துறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும் " என்றார்.

சிறுத்தையுடன் தனி ஆளாகப் போராடிய 11 வயது சிறுமி! - தம்பியைக் காப்பாற்றிய துணிகர சம்பவம்

குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில்,ரூ.20,000-த்துக்கு விற்கப்பட்ட சிறுமிகள் இருவரும் கோவை அன்னூரை அடுத்த திப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றிலிருந்து போலீஸார் அவர்களை மீட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.