Published:Updated:

`வாயும் வயிறுமா இருந்த பொண்ணு இப்படிப் பண்ணிட்டியே!’ - தூக்கில் தொங்கிய கர்ப்பிணி

ராணிப்பேட்டை அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில், கர்ப்பிணிப் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தனலட்சுமி
தனலட்சுமி

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியைச் சேர்ந்தவர் செல்வம். கட்டடத் தொழிலாளியாகக் கூலி வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி தனலட்சுமி. மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.

தனலட்சுமி
தனலட்சுமி

ஒரு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், தனலட்சுமி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் சொல்கிறார்கள்.

நேற்றிரவும் சண்டை போட்டுள்ளனர். கணவன் திட்டியதால் தனலட்சுமி விடிய விடிய அழுதுள்ளார். இன்று காலை செல்வம் வழக்கம்போல் தூங்கி எழுந்து வேலைக்குச் சென்றுவிட்டார். மனைவியை அவர் சமாதானம் செய்யவில்லை என்று சொல்கிறார்கள்.

உறவினர்கள்
உறவினர்கள்

மன உளைச்சலில் இருந்த தனலட்சுமி வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கம் பக்கம் வசிப்பவர்கள் தனலட்சுமி தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ராணிப்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தூக்கில் தொங்கிய தனலட்சுமியின் சடலத்தை உறவினர்கள் கீழே இறக்கினர். ``வாயும் வயிறுமா இருந்த பொண்ணு இப்படிப் பண்ணிட்டியே; கைக்குழந்தையை விட்டுட்டுப் போக எப்படிடி மனசு வந்துச்சு; எங்களையெல்லாம் தவிக்கவிட்டுட்டு போய்ட்டியே’’ என்று கூறி அவர்கள் கதறி அழுதனர்.

விசாரணை நடத்திய காவல் துறையினர்
விசாரணை நடத்திய காவல் துறையினர்

சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து உயிரிழந்த தனலட்சுமியின் கணவன் செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.