Published:Updated:

வேலூர்: `இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!’ - ஜூ.வி ஆக்‌ஷனால் சிறைக்காவலர் சஸ்பெண்ட்

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்கவைத்து, இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து வன்கொடுமை செய்த புகாரில், தலைமறைவாக உள்ள சிறைக்காவலர் கணேஷ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 28-ம் தேதி.. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், வேலூரிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து கதறி அழுதார். ஆசுவாசப்படுத்திய போலீஸாரிடம், வேலூர் மத்திய சிறைக்காவலராக இருந்த கணேஷ்குமாரால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விவரித்தார். அத்துடன், அவரிடமிருந்த வீடியோ ஆதாரங்களையும் காண்பித்தார். திகைத்துப்போன போலீஸார் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் கணேஷ்குமார்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதன் பிறகு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

‘‘சிறைத்துறை அதிகாரிகளின் தலையீடுகளால் வழக்கை மூடிமறைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன. சிறைக்காவலர் கணேஷ்குமாரை வேலூரிலிருந்து வந்தவாசி கிளைச்சிறைக்கு அவசர அவசரமாகப் பணியிட மாற்றம் செய்திருக்கிறார்கள். விடுமுறையளித்து தலைமறைவாக இருக்கவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டிய பாதிக்கப்பட்ட பெண், ‘‘என்னைப் போன்றே பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களை வைத்துள்ளான். கணேஷ்குமாரை விடக்கூடாது’’ என்று கதறினார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ‘ஜூனியர் விகடன்’ டீம் களமிறங்கி இது தொடர்பாக விசாரித்தது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

இதுகுறித்து, 13.9.2020 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ இதழில், ‘‘என் லிஸ்ட்டுல நீ எத்தனையாவது பொண்ணுனே கணக்கு தெரியல! காமாந்தகக் காவலர் கணேஷ்குமார்’’ என்கிற தலைப்பில் ‘ஆக்‌ஷன் ஸ்டோரி’ வெளியானது. கணேஷ்குமாரின் காதல் லீலைகள், பாலியல் வன்கொடுமைகள், ரௌடிகளுடனான தொடர்பு குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு ஜூ.வி-யில் மூன்றுப் பக்க கட்டுரை வெளியானதால், சிறைத்துறையும் காவல்துறையும் அதிர்ந்தது.

கணேஷ்குமார்
கணேஷ்குமார்

இந்த சூழலில், கணேஷ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வந்தவாசி கிளைச்சிறையைச் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘ஜூ.வி கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதி செய்த உடனே எங்கள் உயர் அதிகாரிகள் கணேஷ்குமாரை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள்’’ என்றனர்.

வழக்கின் விசாரணை அதிகாரியான, வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புனிதா, ‘‘கணேஷ்குமாரை கைதுசெய்வதற்காக தீவிரமாக தேடிவருகிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் அவரை கைதுசெய்வோம்’’ என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு