Published:Updated:

`1 கிலோ தங்கம் கொள்ளை; தனியார் லாட்ஜில் விசாரணை'- திருச்சியில் மர்மமாக மரணமடைந்த கைதி!

விசாரணைக் கைதி ஒருவரின் மரணத்துக்குக் காரணமான திருச்சி போலீஸார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகன்
முருகன்

திருச்சி, அண்ணா நகர் ஈபி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் ஏராளமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி, திருச்சி கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சமயபுரம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு, போலீஸார் முருகன் மற்றும் அவரது மகன் வீரபாண்டி, மருமகன் சுப்பிரமணியன் மற்றும் உறவினர் பாலு உள்ளிட்ட நான்கு பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர்களை, அப்பகுதியிலுள்ள மாருதி எனும் தங்கும் விடுதியில் தங்க வைத்து விசாரணை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீஸார் விசாரணையில் மயங்கி விழுந்த முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முருகனின் உறவினர்கள்
முருகனின் உறவினர்கள்

அதையடுத்து, அவரது உடல் திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த முருகனின் உறவினர்கள், போலீஸார் தாக்குதலாலேயே முருகனை இறந்ததாகக் குற்றம்சாட்டி திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அவர்கள், ``முருகனின் மரணத்துக்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

முருகனின் மகன் வீரபாண்டி, ``பாய், சேர் வியாபாரம் செய்துவருகிறோம். இந்நிலையில், சமயபுரம் போலீஸார், திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக எங்களை அழைத்துச் சென்றார்கள். தொடர்ந்து எங்களை லாட்ஜுக்கு கொண்டு சென்று, எங்களின் கைகால்களைக் கட்டிவைத்து, பெரிய இரும்புக் குழாய், மூங்கில் தடிகளால் அடித்தும், மிளகாய்ப் பொடி தூவியும் சித்ரவதை செய்தனர். வலியால் அலறித் துடித்தோம். ஆனாலும் அவர்கள் மனமிறங்கவில்லை.

2 கிலோ நகை 70 லட்சம் பணம் கொடுங்கள் விட்டுவிடுகிறோம் என்றார்கள். எங்களிடம் எதுவும் இல்லை என்றோம். தொடர்ந்து இரவு பகலாக அடித்தனர். அவர்கள் அடித்ததில், எனது தந்தை இறந்து விட்டார். அவரைத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அதன்பிறகு நடந்தது என்னவென தெரியல” என்றபடி உடலிலிருந்த காயங்களைக் காண்பித்தார்.

இதற்கிடையில், போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்ற டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். தொடர்ந்து திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி ஜியா உல் ஹக் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

இறந்துபோன முருகன்
இறந்துபோன முருகன்

``கடந்த 25 ம்தேதி திருச்சியிலிருந்து திருவண்ணாமலைக்கு நிதின் முரளி என்பவர் ஒரு கிலோ தங்க நகையுடன் பேருந்தில் சென்றார் என்றும், அப்போது சமயபுரம் 4 ரோடு சாலை பேருந்து நிலையத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அந்தப் பேருந்தில் ஏறியது.

அதில் ஒருவர், நிதி முரளி அருகே அமர்ந்ததாகவும், தொடர்ந்து அவர்கள் நிதி முரளியின் கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த ஒரு கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அடையாளம் கண்டதுடன், இதுகுறித்து முருகன் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் திடீரென முருகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு இறந்து போனதாகவும்" விசாரணைக்குப் பிறகு போலீஸார் கூறினர்.

ஆனால், முருகன் குடும்பத்தாரோ, “விசாரணை என்கிற பெயரில் நான்கு பேரையும் அழைத்துச் சென்ற போலீஸார் இரும்புக் கம்பியால் தாக்கினார்கள். அதில் முருகன் அடி தாங்காமல் இறந்துவிட்டார்" என்று குற்றம்சாட்டியதுடன், ``வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், எதற்காகத் தனியார் லாட்ஜில் தங்க வைத்தனர். முருகன் இறந்தது குறித்து முறையாக உறவினர்களுக்குத் தகவல் அளிக்காதது ஏன்?. முருகனைத் தாக்கி கொலை செய்த எஸ்.ஐ உள்ளிட்ட 8 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.

மலையில் விழுந்த நீர் இடி, பிரளயமான அருவிகள்... சிதைந்த பச்சமலை கிராமங்கள்..!

தொடர்ந்து திருச்சி டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் எஸ்பி ஜியா உல்ஹக், மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சோமசுந்தரம், திருச்சி ஆர்.டி.ஓ அன்பழகன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, பிரேதப் பரிசோதனை நடந்தது.

இறந்த முருகனைத் தவிர மற்ற மூவர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர். மேலும், முருகனைத் தனியார் தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்திய ராம்ஜி நகர் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், சமயபுரம் முதல் நிலை காவலர் நல்லேந்திரன், தலைமைக் காவலர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முருகனின் உறவினர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகளில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியானதால், நேற்று நள்ளிரவு முழுவதும் திருச்சி அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாகக் காட்சியளித்தது.