Published:Updated:

`அது எங்க லிமிட் இல்ல; போலீஸார் அலைக்கழித்தனர்!’- பிரியங்காவின் தந்தை கண்ணீர்

பிரியங்கா என்னை அழைத்துப் பேசும்போது, எனது பைக் பஞ்சர். இங்கே சிலர் எனக்கு உதவி செய்வதாக கூறி பைக்கை பிடித்துக்கொண்டு வந்தார்கள். ஆனால், அருகில் உள்ள சர்வீஸ் ஷாப் மூடப்பட்டுள்ளது.

பிரியங்கா ரெட்டி எரித்துக் கொலை
பிரியங்கா ரெட்டி எரித்துக் கொலை

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் கொடூரமாக எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. அவருக்கு நீதி வேண்டி கண்டனக் குரல்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

தன் பணியை முடித்து, வீட்டுக்கு வரும்போது கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகனம் பஞ்சராகிவிட்டது. அதை, தன் தங்கைக்கு போன் செய்து கூறியுள்ளார். அவர், பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விடு' என்று கூறியுள்ளார். ஆனால், சிறிதுநேரம் கழித்து மீண்டும் பிரியங்காவைத் தொடர்பு கொண்டபோது, அவருடைய போன் `ஸ்விட்ச் ஆஃப்' ஆகியுள்ளது தெரியவந்திருக்கிறது. இதனால் பதறிப்போன பிரியங்காவின் குடும்பத்தினர், அந்த இடத்துக்குச் சென்று பார்த்துள்ளனர்.

எரிக்கப்பட்ட 
பிரியங்கா ரெட்டி
எரிக்கப்பட்ட பிரியங்கா ரெட்டி

அங்கு பிரியங்கா இல்லை என்றதும், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கச் சென்றுள்ளனர். இது குறித்துப் பேசிய பிரியங்காவின் தந்தை, ``என் மகள் காணவில்லை என்று புகார் தெரிவிக்க ஒரு சுங்கச்சாவடி அருகே இருக்கும் காவல் நிலையத்துக்குச் சென்றோம். அங்குள்ள காவலர்கள் எங்களுடைய புகாரை வாங்கவில்லை.

இந்தப் புகார் இந்தக் காவல் நிலைய எல்லைக்குள் வராது என்று திருப்பி வேறு ஒரு காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். அதை தீர்மானிக்க அவர்கள் அரை மணி நேரம் எடுத்துக்கொண்டனர். அதன் பின்னரே நாங்கள் வேறு ஒரு காவல் நிலையத்துக்குச் சென்றோம். அந்தக் காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் தேடுவதற்கு எங்களுடன் வந்தனர்" என்று கூறியுள்ளார்.

`எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள் #JusticeForPriyanka

இதைத்தொடர்ந்து அவரது தங்கை பேசுகையில் ``பிரியங்கா என்னை அழைத்துப் பேசும்போது, எனது பைக் பஞ்சர். இங்கே சிலர் எனக்கு உதவி செய்வதாகக் கூறி பைக்கைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள். ஆனால், அருகில் உள்ள சர்வீஸ் ஷாப் மூடப்பட்டுள்ளது. நான் போகிறேன் என்று கூறியும் அவர்கள் என் பின்னாடியே வருகிறார்கள். எனக்கு பயமா இருக்கிறது என்று கூறியுள்ளார். பயப்படாதே என்று கூறிவிட்டு மீண்டும் அழைத்தபோது அவருடைய போன் சுவிட் ஆஃப் ஆகியுள்ளது" என்று தங்கை கூறியுள்ளார்.

Representational Image
Representational Image

பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முகமது ஆரிப் மற்றும் ஜொலு சிவா, ஜொலு நவீன்சின்குண்டா சென்னிகேசவலு என்ற லாரி ஒட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் நான்கு பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்களை கஷ்டடியில் வைத்து விசாரித்துள்ளனர். அதில் ``இந்த நான்கு பேரும் பிரியங்காவின் பைக் பஞ்சர் ஆனதும் உதவுவதுபோல் முன்வந்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.