Published:Updated:

பேராசிரியையை ஆம்புலன்ஸில் கடத்திய அதிமுக நிர்வாகி... ஊதிப் பெரிதாக்கும் கோஷ்டி அரசியல்!

கல்லூரி பேராசிரியை ஒருவரை, அ.தி.மு.க நிர்வாகி ஆம்புலன்ஸில் கடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவ்யமாக நிற்கும் `வணக்கம் சோமு’
பவ்யமாக நிற்கும் `வணக்கம் சோமு’

கடந்த சில தினங்களாக திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடக்கும் ஆட்கடத்தல் சம்பவங்கள் சினிமாவை விஞ்சும் வகையில் திகில் கிளப்புகின்றன.

சில தினங்களுக்கு முன்பு திருச்சி, வையம்பட்டி பகுதியில் 19 வயது பெண் ஒருவரையும், அவரின் தந்தையையும் இந்து முன்னணி நிர்வாகி குழந்தைவேலுவும், அவரது ஆட்களும் வேனில் கடத்தியபோது, பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கினர்.

கடந்த வெள்ளிக்கிழமை, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்த அகில இந்திய இந்து மகா சபை இளைஞரணியின் மாநிலப் பொதுச் செயலாளர் இளையராஜா என்பவரை, சிவகார்த்திகேயன் நற்பணி மன்ற பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமாரும் அவரது அடியாட்களும் காரில் கடத்தியபோது, திருச்சி மாம்பலம் சாலையில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களால் ஏற்பட்ட பதற்றம் குறைவதற்குள், அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் ஒருதலைக்காதல் விவகாரத்தில் பேராசிரியை ஒருவரை ஆம்புலன்ஸில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருச்சி, சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள இந்திராகாந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் உமாதேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) . இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக திருச்சி மலைக்கோட்டை பகுதியில் தனது சகதோழியுடன் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார்.

`வணக்கம்' சோமு
`வணக்கம்' சோமு

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதி மட்டுமன்றி, திங்கள்கிழமை என்பதாலும் ஏரியா வழக்கத்தைவிடக் கூடுதல் பரபரப்போடு இருந்தது. அப்போதுதான் அங்கு நின்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸில் காத்திருந்த ஒரு கும்பல், சட்டென உமாதேவியை வாயைப் பொத்தி ஆம்புலன்ஸில் ஏற்றியது.

இதைப் பார்த்து அவரது தோழி பதறிக் கூச்சலிட்டார். இதனால் கோபமடைந்த அந்தக் கும்பல் அவரைக் கீழே தள்ளிவிட்டு சிட்டாய்ப் பறந்தது. கீழே விழுந்த உமாதேவியின் தோழி, பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். அடுத்து உமாதேவியின் தாய் நாகலட்சுமி திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார், உமாதேவியின் செல்போன் எண் சிக்னலை வைத்து ஆம்புலன்ஸைக் கண்காணித்தனர். அந்த வாகனம் திருச்சி மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்ததை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, திருச்சி மாவட்ட காவல் நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டன.

இந்த நிலையில், போலீஸார் தங்களை விரட்டுவதை உணர்ந்த அந்தக் கும்பல், துவரங்குறிச்சி பகுதியில் பேராசிரியர் உமாதேவியை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு தப்பிச்சென்றது.

முன்னாள் எம்.பியுடன் `வணக்கம் சோமு'
முன்னாள் எம்.பியுடன் `வணக்கம் சோமு'

ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பின்தொடர்ந்த கோட்டைக் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் போலீஸார் உமாதேவியை மீட்டு திருச்சி அழைத்துவந்தனர். கடத்தல் சம்பவம் குறித்து பேராசிரியை உமாதேவியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் புதிய தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும், அமராவதி கூட்டுறவு சங்க இயக்குநருமான, `வணக்கம்' சோமு, உமாதேவி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்ததுடன் அவரைக் காதலிப்பதாகத் தொந்தரவும் செய்துவந்துள்ளார். சோமுவுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. இந்நிலையில் சோமுவின் காதலை நிராகரித்திருக்கிறார் உமாதேவி.

ஆனாலும் வணக்கம் சோமு, அரசியல் பின்புலத்தைச் சொல்லி உமாதேவியை மிரட்டியதாகவும், தனக்குத் தந்தை இல்லாததால், முதலில் பிரச்னையை குடும்பத்தாரிடம் சொல்ல பயந்த உமாதேவி, மெல்ல தனது தாயிடம் இதைச் சொன்னாராம். அதனால் பிரச்னையிலிருந்து விடுபட அவரின் தாய் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார். இப்படியான சூழலில் உமாதேவியின் திருமண ஏற்பாடுகள் குறித்து தகவலறிந்த வணக்கம் சோமு, தன் ஆட்களுடன் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து போலீஸார், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட வணக்கம் சோமு மற்றும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

வணக்கம் சோமு திருச்சி மாநகர அரசியலில் மிகவும் பரபரப்பானவர். அமைதிப்படை சத்யராஜ் பாணியில் முகம், நெற்றில் பெரிய விபூதி பட்டை என பார்க்க பரமசாதுபோல் பவ்யம் காட்டுவார். ஆனால், அதிரடி அரசியலுக்குப் பெயர் பெற்றவர்.

மாவட்ட அரசியலில் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள அவ்வப்போது பிரமாண்டமான விளம்பரப் போஸ்டர்களால் அதகளப்படுத்துவார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக மாநிலம் மேகதாது பகுதிக்குச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தி, அதை அப்படியே பத்திரிகைகளுக்கு விளம்பரமாகக் கொடுத்தவர். திருச்சி மாநகர அ.தி.மு.க-வில் முக்கிய இடம் பிடித்துவிட`டஃப்' அரசியல் செய்பவர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட அரசியலில் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, ஆவின் சங்கத் தலைவர் கார்த்திகேயன் எனக் கோஷ்டி அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது.

`படம் பார்க்க வந்தோம்…. வழியில் கடத்தினோம்'- இது திருச்சி வில்லங்கம்!
Vikatan

வணக்கம் சோமு, திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அ.தி.மு.க எம்.பி ப.குமாரின் ஆதரவாளர். இதனால் எதிர்கோஷ்டியினர், சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததோடு இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து ஊதிப் பெரியதாக்கி வருகிறார்கள். போலீஸார் தலைமறைவாக உள்ள வணக்கம் சோமுவைத் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்பதால் போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடரும் கடத்தல் சம்பவம் திருச்சி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சிப் பிரமுகர் பேராசிரியரைக் கடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.