Published:Updated:

பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி... சாக்கு மூட்டைக்குள் அடைத்து...

உறையவைக்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

பிரீமியம் ஸ்டோரி
நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாத மனித மிருகங்களால் நாளுக்கு நாள் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகிவருகிறது. குறிப்பாக, சின்னஞ்சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் சுற்றிலும் அதிகரித்துவருகின்றன. வறுமையின் கொடுமையால் பெற்றோரே கொத்தடிமைகளாக அனுப்பிவிட்ட ஐந்து சிறுமிகள், பலரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கி றார்கள். இரண்டு வருட சித்ரவதையிலிருந்து அந்தச் சிறுமிகள் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம், புதுச்சேரியையே பதறவைத்திருக்கிறது.

‘புதுச்சேரியின் கிராமப்புறப் பகுதியான கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவன், தனது வாத்துப் பண்ணையில் சிறுமிகளைக் கொத்தடிமை களாக வைத்திருக்கிறான்’ என்று புதுச்சேரி குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவுக்கு சில தினங்களுக்கு முன்னர் ரகசியத் தகவல் சென்றிருக்கிறது. அதன் அடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்தியவர்கள், அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை அங்கிருந்து மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கன்னியப்பனின் வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த மேலும் மூன்று சிறுமிகளை மறுநாள் மீட்டிருக்கின்றனர்.

பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி... சாக்கு மூட்டைக்குள் அடைத்து...

காப்பகங்களில் தங்கவைக்கப்பட்ட அந்தச் சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுத்து, அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்பியதும் விசாரித்திருக்கிறார்கள். நடந்த உண்மைகளை அந்தச் சிறுமிகள் சொல்லச் சொல்ல, ‘இப்படியெல்லாம் கொடுமைகள் நடக்குமா... இந்தப் பிஞ்சுகளிடம் இப்படி நடந்துகொண்டவர்கள் உண்மையில் மனிதர்கள்தானா?’ என்று அதிர்ச்சியில் உறைந்தேபோயிருக்கிறார்கள். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அனுப்ப... அவர்கள் விரைந்து வந்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கு 3,000 ரூபாய்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், பிழைப்புக்காகக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, புதுச்சேரியின் கிராமப்புறப் பகுதியான கோர்க்காட்டில் குடிசை அமைத்து வசித்துவருகிறார்கள். வருடத்தின் பெரும்பாலான நாள்கள் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கிவிடும் இவர்கள், குழந்தைகளைக் கூடுதல் சுமையாகவே நினைக்கிறார்கள். புதுச்சேரிப் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், இந்த மக்களின் வறுமை நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, “உங்க பிள்ளைங்க சாப்பாடு, டிரெஸ், தங்குற வசதிக்கு நான் பொறுப்பு... நல்லா பார்த்துக்கிறேன். என் பண்ணையில வேலை செய்யட்டும்” என்று நைச்சியமாகப் பேசி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாத்து மேய்க்கும் வேலைக்காகச் சிறுமிகளை அழைத்து வந்திருக்கிறான். ஒரு குழந்தைக்கு 3,000 ரூபாய் என்று பேசி, 500 ரூபாய் மட்டும் முதலில் தருவதாகவும், மீதித் தொகையைத் தவணை முறையில் தருவதாகவும் கூறியிருக்கிறான். அதனடிப்படையில், ஐந்து சிறுமிகளை அவருடன் அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

சிறுமிகளில் இருவர், தாய்-தந்தையை இழந்து வளர்ப்புத் தந்தையின் பராமரிப்பில் இருந்தவர்கள். தந்தை பிரிந்து சென்றுவிட, தாயின் பராமரிப்பில் இருந்தவர்கள் மூவர். மீதித் தொகையைக் கேட்டுவரும் பெற்றோர்களுக்கு அவ்வப்போது 50 ரூபாய், 100 ரூபாய் என்று கொடுத்துவந்த கன்னியப்பன், அந்தச் சிறுமிகளை திண்டிவனம், விழுப்புரம், திருச்சிற்றம்பலம் எனப் பல பகுதிகளுக்கு வாத்து கிடை போடுவதற்கு அனுப்பிவந்திருக்கிறான். பெண் குழந்தைகள் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காக, ஆண்களுக்கான உடையைக் கொடுத்து, பையன்கள் போலவே முடியையும் வெட்டிவிட்டிருக்கிறான்.

கன்னியப்பன்
கன்னியப்பன்

13 வயது சிறுமி... 3 மாத கர்ப்பம்!

அடுத்தடுத்த அதிர்ச்சிச் செய்திகள் நம் காதுகளுக்கு வரவே, விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவரைச் சந்தித்துப் பேசினோம். அவர் சொன்ன தகவல்கள் நம் நெஞ்சைப் பிளந்தன.

‘‘அந்தச் சிறுமிகளில் இருவருக்கு 6 வயது, மற்றவர்களுக்கு 8 முதல் 13 வயதுக்குள் இருக்கும். சிறுமிகள் அனைவரையுமே கன்னியப்பன், அவனின் மகன்கள், உறவினர்கள், பண்ணையில் வேலை செய்யும் வயதானவர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கடந்த இரண்டு வருடங்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவந்திருக்கிறார்கள். வலி தாங்க முடியாமல் அழுது கதறிய சிறுமிகளுக்கு, வலுக்கட்டாயமாகப் புகையிலை, பீர் உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கொடுத்துச் சீரழித்திருக் கிறார்கள்.

இரவில் ஒரு சிறுமியை தனியே அழைத்துச் செல்லும்போது, மற்ற சிறுமிகள் பார்க்கக் கூடாது என்று, ‘கொசு கடிக்கும்... சாக்குப்பைகளுக்குள் சென்று படுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி விடுவார்களாம். சாக்குப்பைகளுக்குள் செல்லும் சிறுமிகளை அப்படியே மூட்டையாகக் கட்டி வைத்து, மறுநாள் காலையில்தான் அவிழ்த்துவிடும் கொடுமையும் நடந்திருக்கிறது. சிறுமிகள் முரண்டுபிடிக்கும் சமயங்களில், அவர்களின் கை கால்களைக் கட்டிவைத்துப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடியைத் தூவி சித்ரவதையும் செய்திருக்கிறார்கள். பாட்டில்களில் சிறுநீர் கழித்து அதைக் குடிக்கவும் வைத்திருக்கிறார்கள். சிறுமிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், 13 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். இதையெல்லாம்விட கொடுமையாக, இரு சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையான ஆறுமுகம், இதற்கு முன்னரே அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்திருக் கிறான்’’ என்று சொன்னவரின் முகத்தில் இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இரண்டாவதாக மீட்கப்பட்ட மூன்று சிறுமிகளின் தாயான சாந்தி, நவம்பர் 1-ம் தேதி நல்லாவாடு கடற்கரையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கில் பூபாலன் என்பவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். “நானும் சாந்தியும் கணவன் மனைவிபோல் வாழ்ந்துவந்தோம். அவளுக்கு இன்னொருவரோடு தொடர்பு ஏற்பட்டதால், அவளைக் கொன்றேன்” என்று பூபாலன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். இருப்பினும், ‘‘இந்தக் கொலையின் பின்னணியில் கன்னியப்பன் இருக்கிறானா என்று விசாரணை செய்ய வேண்டும்’’ என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

பிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி... சாக்கு மூட்டைக்குள் அடைத்து...

“எல்லாம் பச்சைப்புள்ளைக... பாவம்!”

கோர்க்காடு பகுதிக்குச் சென்றோம். ஊருக்கு வெளியே, ஆளரவமற்ற ஏரிக்கரையோரம் தென்னங்கீற்றுகள் மற்றும் பேனர்கள் மூலம் அமைக்கப்பட்ட நான்கைந்து குடிசைகளும், எலும்பும் தோலுமாக இரண்டு மாடுகளும் நின்றிருந்தன. மின் இணைப்போ, வேறு எந்த வசதியுமோ இல்லாத அந்தக் குடிசைகளிலிருந்துதான் சிறுமிகளை அழைத்துச் சென்றிருக்கிறான் கன்னியப்பன். ஊருடன் எந்தவிதத்திலும் தொடர்பற்று இருக்கின்றன அந்தக் குடிசைகள். அங்கிருக்கும் ஒரு சில ஆட்களும்கூட பயந்துபோய் நம்மிடம் எதையும் பேசத் தயாராக இல்லை.

கன்னியப்பனின் வாத்துப் பண்ணை இருந்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்துக்குச் சென்றோம். சேறும் சகதியும் நிறைந்த ஒத்தையடிப் பாதையையும் வரப்புகளையும் கடந்து, ஒரு கி.மீ தூரம் சென்றால், விவசாய நிலங்களுக்கு மத்தியில் இருக்கின்றன வாத்துக் கிடைகள். எந்தக் குற்றம் நடந்தாலும், வெளியே தெரியாத அளவுக்கு இருக்கும் அந்த இடம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருந்திருக்கிறது. ஊர்மக்கள் நடமாட்டம் இல்லாத அந்தப் பகுதிக்கு, விவசாய வேலை பார்ப்பவர்கள் மட்டுமே வருகிறார்கள். அவர்களிடம் சிறுமிகள் குறித்து விசாரித்தோம். ‘‘கூப்பிட்டுப் பேசுவோம்... எதுவும் சொல்லாம ஓடிப்போயிடுங்க. எல்லாம் பச்சைப்புள்ளைக... பாவம்... இவ்வளவு கொடுமைய அனுபவிச்சிருக்குக’’ என்றார்கள் ஆற்றாமையுடன்.

குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம். ‘‘கர்ப்பமாக இருந்த ஒரு சிறுமிக்கு, உரிய அனுமதியைப் பெற்று கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 10 சிறுமிகள் அங்கு இருந்ததாகக் கூறுகிறார்கள். அது குறித்தும் விசாரணை செய்துவருகிறோம்’’ என்றார்.

பசுபதி , ராஜ்குமார் , சிவா
பசுபதி , ராஜ்குமார் , சிவா

புதுச்சேரி மேற்கு எஸ்.பி ரங்கநாதனிடம் பேசினோம். “கன்னியப்பன், அவனின் மகன்கள் ராஜ்குமார், சரத்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார், சிவா, மூர்த்தி ஆகியோரைக் கைதுசெய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் கன்னியப்பனின் மனைவி சுபா மற்றும் இரு குழந்தைகளின் வளர்ப்புத் தந்தையான ஆறுமுகம் உள்ளிட்டோரைத் தேடிவருகிறோம்’’ என்றார்.

சீனியர் எஸ்.பி பிரதிக்‌ஷா கோத்ரா, ‘‘கைது செய்யப்பட்டிருப்பவர்கள் தவிர மேலும் பலருக்கு இந்த வழக்கில் தொடர்பிருக்கிறது. அவர்களைப் பிடிப்பதற்கு பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி திவ்யா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

இப்படியொரு கொடூரச் சம்பவம் அரங்கேறிய பிறகும் துறைசார்ந்த அமைச்சர், செயலர், அதிகாரிகள் என யாரும் வாய் திறக்காததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக்கூட நேரில் சென்று பார்க்காமல் மௌனம் சாதிப்பதுதான் அநியாயம்.

உணவுக்கு, உடைக்கு, உறைவிடத்துக்கு, கல்விக்குத்தான் வாய்ப்பில்லை. அரை வயிற்றுக் கஞ்சியோடு, கந்தலோடு அவரவர் குடிசையில் கொஞ்சமாக வாழ்ந்துவிட்டுப் போகக்கூட பெண் குழந்தைகளுக்கு இங்கே பாதுகாப்பில்லை எனும் உண்மைதான் நம் நெஞ்சை அறுக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு