Published:Updated:

புதுச்சேரி: `நானும் உங்க பொண்ணுதான்பா!’ - 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

புதுச்சேரி சிறுமி
புதுச்சேரி சிறுமி

பெற்ற மகள்களையே கட்டி வைத்துத் தாக்கி கை, கால்களை உடைத்ததுடன், பிறப்புறுப்பில் சூடு வைத்து பாலியல் தாக்குதல் நடத்திய கொடூர தந்தையின் செயல் புதுச்சேரி மாநிலத்தையே அதிர வைத்திருக்கிறது.

அதிர்ந்துபோன மருத்துவர்கள்

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி சனிக்கிழமை கை, கால் மற்றும் தலையில் பலமாக அடிப்பட்டும் பிறப்புறுப்பில் சூடு வைக்கப்பட்ட நிலையிலும் 16 வயதுச் சிறுமி ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அவரின் தாயிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அதற்குச் சரியான பதிலளிக்காத சிறுமியின் தாய், முன்னுக்குப் பின் முரணாகவும் மழுப்பலாகவும் பதிலளித்திருக்கிறார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு தலைவர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தனர். உடனே, ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்ற அவர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணையை மேற்கொண்டார். வலியில் முனகியவாறு மெல்லிய குரலில் அந்தச் சிறுமி தனக்கு நடந்ததை சொல்ல ஆரம்பித்ததும் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினரும் மருத்துவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

Representational Image
Representational Image

இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுவினரிடம் விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவல்கள் இதுதான். ``பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 வயதிருக்கும்போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரின் தந்தை பிரிந்துசென்று, அதற்கடுத்த சில வருடங்களில் உயிரிழந்திருக்கிறார். அதன்பிறகு 40 வயதான சிறுமியின் தாய், தன்னைவிட வயது குறைந்த டைல்ஸ் போடும் தொழிலாளியான 32 வயதுடைய நபரை, இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார். இரண்டாவது கணவர் மூலம் சத்யாவுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

`நானும் உங்க பொண்ணுதான்பா!’

சத்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்ற சில நாள்களிலேயே, முதல் கணவருக்குப் பிறந்த சிறுமி பூப்பெய்திருக்கிறார். ஒருநாள் சத்யா வீட்டில் இல்லாத நேரத்தில் அந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியில் பேசியதுடன், தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். அப்போது ``அப்பா... வேணாம்பா... பயமா இருக்குதுப்பா விட்ருங்கப்பா... நானும் உங்க பொண்ணுதான்பா” என்று கதறியிருகிறார். அப்போது, ``இதெல்லாம் தப்பில்லை... சகஜம்தான். இதை யாருகிட்டேயும் சொல்லக் கூடாது. சொன்னால் உன்னையும், உன் அம்மாவையும் மூணு தங்கச்சிகளையும் கொலை செஞ்சிருவேன்” என்று மிரட்டி பாலியல் தாக்குதலை நடத்தியிருக்கிறார்.

புதுச்சேரி
புதுச்சேரி

அதில் பயந்துபோன சிறுமி, தன் தாயிடம் கூட கூறாமல் விட்டுவிட்டார். அதைச் சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த நபர், கடந்த 3 வருடங்களாக அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஒருநாள் வீட்டைவிட்டு வெளியேறி, தன் தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறார் அந்தச் சிறுமி. உடனே சிறிமியைக் காணவில்லை என்று பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுமியை வீட்டுக்கு அனுப்பியது காவல்துறை. அதன் பிறகும் அவரின் பாலியல் தாக்குதல் நிற்கவில்லை.

பிறப்புறுப்பில் சூடு

இந்நிலையில்தான் ஒருநாள் தனக்குப் பிறந்த பெண் குழந்தைகள் மீதே அந்த நபர் பாலியல் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதலில் 10 வயது குழந்தையின் தலையில் அடிபட்டிருக்கிறது. அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் மஞ்சள் தூளை மட்டும் தடவிவிட்டிருக்கிறார். அதைப் பார்த்து கொதித்துப்போன அந்தச் சிறுமி, ``என்னைத்தான் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துறீங்க. தங்கச்சிங்க சின்ன குழந்தைங்கதானே? அவுங்களையும் ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கேட்டிருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த அந்த நபர், இரும்புக் கம்பியால் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். அதில், சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், கை மற்றும் கால் முறிந்திருக்கிறது. அப்படியும் ஆத்திரம் அடங்காதவர், இரும்புக் கம்பியை அடுப்பில் காய்ச்சி வலியில் துடித்துக்கொண்டிருந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்திருக்கிறார். உச்சக்கட்ட வலியில் அலறித் துடித்த அந்தச் சிறுமி மயங்கி விழுந்திருக்கிறார். அதன்பிறகுதான் பயத்தில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் தாய்.

3-வது மாடி; 6 வயதுச் சிறுமி; புதருக்குள் சடலம்! - கதறிய தந்தை; சந்தேக வளையத்தில் சித்தி

அதையடுத்து அந்தத் தந்தை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி கோரிமேடு காவல்நிலையத்துக்கு பரிந்துரைத்தது குழந்தைகள் நல பாதுகாப்புக்குழு. அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோரிமேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் அவரைக் கைது செய்ததுடன், அவரை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு