Published:Updated:

பணியில் அலட்சியம்? - புதுவை சிபிசிஐடி எஸ்.பி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு

புதுச்சேரி காவல்துறை எஸ்.பி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு.

Grand Bazar Police Station
Grand Bazar Police Station ( A.Kuruzthanam )

புதுச்சேரி காவல்துறையில் சிபிசிஐடி பிரிவின் எஸ்.பி-யாக இருப்பவர் செல்வம். இவர் மீது நேற்று (28.9.2019) புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி பெரியகடை காவல்துறையினர் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் மீது நடத்தப்பட்ட விசாரணைகள், விசாரிக்கப்பட்டவர்களின் விபரங்கள், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விபரங்களை தேதி வாரியாகப் பதிவு செய்வதை கேஸ் ஹிஸ்டரி (வழக்கின் விவரங்கள்) என்று கூறப்படும்.

CBCID SP Selvam
CBCID SP Selvam

அதேபோல அந்த வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தி, வழக்கின் தன்மை, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த இறுதி வடிவத்தை (Charge Sheet) குற்றப்பத்திரிகையாக 90 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.

தற்போது சிபிசிஐடி எஸ்.பி-யாக இருக்கும் செல்வம் கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு பெரியக்கடை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர்.

FIR
FIR

அப்போது பதிவு செய்யப்பட்ட Cr.No.163/2017(24.08.2017), Cr.No.08/2018(18.01.2018), Cr.No.47/2018(24.03.2018) இந்த மூன்று வழக்கின் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததுடன், குற்ற விவரங்கள் (Case History) மற்றும் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் எஸ்.பி செல்வம் மீது உடனே வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டார் காவல்துறை டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவத்சவா.

அதனடிப்படையில் ஊழியர் ஒருவர் தனக்கு இடப்பட்ட பணியை சரியாகச் செய்யாதது, தவறாக வழி நடத்தி மோசடி செய்திருப்பதாகக் கருதி அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 409-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார் பெரியக்கடை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எல்.வி.செந்தில்குமார். இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.பி செல்வம் நேற்று இரவு திடீரென நெஞ்சு வலிக்காக புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

DGP Balaji Srivastava
DGP Balaji Srivastava

இந்த விவகாரம் புதுச்சேரி காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், எஸ்.பி செல்வம் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.

வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அதன்மீது எடுக்கப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த இறுதி வடிவத்தை (Charge Sheet) குற்றப்பத்திரிகையாக 90 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே அதை முறையாகக் கடைப்பிடிக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்ததோடு அந்த வழக்கை கிடப்பில் போட்டுவிடுவதும், எதிர் தரப்பினருக்கு ஆதரவாக அந்தக் கோப்புகளையே காணாமல் போகச் செய்வதும் காவல் நிலையங்களில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. பல முக்கிய வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் வருடக் கணக்காகக் கிடப்பில் கிடப்பதற்கும், குற்றவாளிகள் தப்பித்து சுதந்திரமாக உலா வருவதற்கும் இவையும் ஒரு காரணம்.

Inspector Senthilkumar
Inspector Senthilkumar

என்ன சொல்கிறது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 409?

இந்த சட்டத்தில் ஒரு அரசு ஊழியர் அவரின் பணிக்கு மாறாக நடந்துகொள்வது. அவருக்கு ஒப்படைத்த பணியில் இருந்து விலகி தவறாக வழி நடத்துதல், மோசடி செய்தல் போன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைக்காவலுடன், அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஜாமீனில் உடனே விடுவிக்க முடியாது. உயர் நீதிமன்றத்தை அணுகி குற்ற மேல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் குற்றவியல் சட்டம் 482-ன் படி முன் ஜாமீன் கோர வேண்டும். அதன்பிறகு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். நேற்றும் இன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீதிமன்றத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக எஸ்.பி செல்வம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.