Published:Updated:

`டிவிஎஸ் 50; சின்ன மூட்டைகள்தான் இலக்கு!' - புதுச்சேரியில் வெங்காயம் திருடியவருக்கு நேர்ந்த கதி

மார்க்கெட்டில் வெங்காயம் திருடியவரை வியாபாரிகள் கட்டிவைத்து உதைத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெங்காயம்
வெங்காயம்

நாடாளுமன்றத்தில் விவாதத்தைக் கிளப்பும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது வெங்காயத்தின் விலை. வரலாறுகாணாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கும் இந்த விலையேற்றம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில், நேரு வீதி, காந்தி வீதி மற்றும் ரங்கப்பிள்ளை வீதிகளுக்கு இடையில் இருக்கிறது, பெரிய மார்க்கெட்.

பெரிய மார்க்கெட்
பெரிய மார்க்கெட்

மளிகைப்பொருள்கள் தொடங்கி காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் மொத்தமாகவும் சில்லரை விலையிலும் கிடைக்கும். புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சில்லரை வியாபாரிகள், இங்குதான் மொத்தமாகப் பொருள்களை வாங்கிச்செல்வார்கள்.

`350 கிலோ வெங்காயம் மிஸ்ஸிங், கண்டுபிடிச்சுக் கொடுங்க..!' -போலீஸைப் பதறவைத்த பெரம்பலூர் விவசாயி

அதேபோல, வெளிமாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு காய்கறிகளைக் கொண்டுவரும் லாரிகள், முதல்நாள் இரவில் இருந்தே மார்க்கெட்டில் இறங்கத் தொடங்கும். அதனால், நள்ளிரவு முதலே சில்லரை வியாபாரிகளின் வரவால், மார்க்கெட் பிஸியாகிவிடும். அதன்படி நேற்று நள்ளிரவு, லாரிகளில் இருந்து வெங்காய மூட்டைகள் சாலையில் இறக்கிவைக்கப்பட்டன. மொத்த வியாபாரிகள், அவற்றைக் கணக்கிட்டு, குடோனுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, டிவிஎஸ் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், ரூ.5,500 மதிப்புள்ள ஒரு வெங்காய மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

தூணில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் காளிதாஸ்
தூணில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் காளிதாஸ்

அவரது நடவடிக்கையால் சந்தேகமடைந்த மார்க்கெட் வியாபாரிகள், அவரைச் சுற்றிவளைத்து விசாரித்தனர். அப்போதுதான், அவர் பெயர் காளிதாஸ் என்பதும் வெங்காய மூட்டையைத் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

உடனே, அவரை அடித்துஉதைத்த வியாபாரிகள், அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டுவிட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அடிக்கடி இப்படி வெங்காய மூட்டைகளைத் திருடிச்சென்று விற்பது தெரியவந்தது.

அதேநேரம், சரியான வேலை கிடைக்காததால்தான் காளிதாஸ் திருட்டில் ஈடுபட்டுவிட்டார். அதனால், அவரை மன்னித்துவிடும்படி வியாபாரிகளிடமும் காவல்துறையினரிடமும் கோரிக்கை வைத்துள்ளனர் அவரின் உறவினர்கள்.

புதுச்சேரியில் சின்ன வெங்காயம் 1 கிலோ 150 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.