Published:Updated:

`அந்தப் பெண்ணுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை'-பாலியல் கொடுமையால் விபரீத முடிவெடுத்த புதுவைப் பெண்

பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் ஒருவர் விபரீத முடிவெடுத்தது புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதிரி படம்
மாதிரி படம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளம்பெண் ஒருவர், கடந்த 3 வருடங்களாக மகாத்மா காந்தி வீதி மற்றும் புஸ்ஸி வீதி சந்திப்பில் இருக்கும் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த ஸ்டூடியோவை வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்த மதுர (40) என்பவர் நடத்தி வந்திருக்கிறார்.

ஸ்டூடியோ உரிமையாளர் மதுர
ஸ்டூடியோ உரிமையாளர் மதுர

இவர், அந்தப் பெண்ணுக்கு வாங்கிக் கொடுக்கும் பிரியாணி, தேநீர் போன்றவற்றில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதுகுறித்து, தன் தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார். இதுதொடர்பாக, மதுரயிடம் பெண்ணின் தந்தை கேட்டிருக்கிறார். ஒருகட்டத்தில், அப்பெண்ணைத் திருமணம் செய்ய சம்மதித்திருக்கிறார் மதுர.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருப்பதும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்ததால் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அந்தப் பெண். இதனால், கடும் மனஉளைச்சலில் இருந்தவர், வீட்டில் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்திருக்கிறார். உறவினர்களின் சமாதானத்தையும் ஏற்காமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தில் மேற்கண்ட தகவல்களைக் கூறியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நான் இன்னொருவரின் கணவரைத் திருமணம் செய்து அந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை.
தற்கொலை செய்து கொண்ட பெண்

போலீஸிடம் அந்தப் பெண், `அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மீது நான் புகார் அளித்தால் அவரது குடும்பம் நாசமாகிவிடும் என்பதால் புகார் தரவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நான் இன்னொருவரின் கணவரைத் திருமணம் செய்து அந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்ய விரும்பவில்லை. அதனால்தான் தற்கொலை முடிவை எடுத்தேன்' எனக் கூறியிருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைப் பிரிவின்கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த ஸ்டூடியோ உரிமையாளர் மதுரயைக் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்தப் பெண் உயிரிழந்திருப்பது அவரது உறவினர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.