Published:Updated:

புதுக்கோட்டை: ``சாதிய தீண்டாமை தொடர்பாக 25 புகார்கள் பதிவாகியிருக்கின்றன!" - மாவட்ட ஆட்சியர் தகவல்

ஆய்வுக்கூட்டம்

``புதுக்கோட்டை மாவட்டத்தில், நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தோம். அதில், இதுவரையிலும் 25 புகார்கள் வந்திருக்கின்றன." - கவிதா ராமு

புதுக்கோட்டை: ``சாதிய தீண்டாமை தொடர்பாக 25 புகார்கள் பதிவாகியிருக்கின்றன!" - மாவட்ட ஆட்சியர் தகவல்

``புதுக்கோட்டை மாவட்டத்தில், நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தோம். அதில், இதுவரையிலும் 25 புகார்கள் வந்திருக்கின்றன." - கவிதா ராமு

Published:Updated:
ஆய்வுக்கூட்டம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அலுவலர்கள் கலந்துகொண்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் கலந்துகொண்டு தலைமை வகித்தார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``புதுக்கோட்டை, இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட  நிலையில், அந்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். இதில் அந்த அசுத்தம் மனிதனுடையதா? விலங்கினதுடையதா? என்பது குறித்து ஆய்வக பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய முடியும். குற்றவாளிகள் யார் என்பதை தற்போது உடனே உறுதிபடுத்த முடியாது. ஆய்வகத்தில் இருந்து பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். அப்போதுதான் வழக்கு நீதிமன்றத்தில் நிற்கும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தனித்தனி மயானங்கள் இருப்பது முற்றிலுமாக மூடப்பட்டு ஒரே மயானமாக அதுவும் சமுதாய மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை. சில தனியார் கோயில்களில்தான் இந்த பிரச்னை இருக்கிறது. அதனையும் கண்காணித்து அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டம்
கூட்டம்

இந்தச் சம்பவத்தின் விசாரணை தொடர்பாக ஆய்வு நடத்தியிருக்கிறோம். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் என போலியாக சான்றிதழ் பெற்றது தொடர்பாக 3,070 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதில் பல வழக்குகள் 20 வருடங்களுக்கு முன்பு உள்ளதாகும். இந்தச் சான்றிதழ் முதலில் உண்மையா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 2 மாதங்களில் கிட்டத்தட்ட 800 வழக்குகளில் முடிவெடித்திருக்கிறோம். மீதமுள்ளவை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக அமல்படுத்தவில்லை என்று கூற முடியாது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக அமல்படுத்தினால்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்காகத்தான் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் கண்காணிப்பு குழு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமை தொடர்பாக, அந்த ஊரில் புகார் வந்தது. உடனே நடவடிக்கை எடுத்தோம். வரும் காலங்களில் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ``புதுக்கோட்டை மாவட்டத்தில், நடைபெறும் சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தோம். அதில், இதுவரையிலும் 25 புகார்கள் வந்திருக்கின்றன. இதுவரையிலும், தற்போது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனாலும், தொடர்ந்து, இந்த புகார்கள் மீது தனிக் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.