Published:Updated:

மாத்திரை போதை... இளைஞர்களே இலக்கு... புதுக்கோட்டை அதிர்ச்சி!

Drug
Drug

புதுக்கோட்டையில் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து, மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி வந்த கும்பலை கூண்டோடு கைதுசெய்தது அறந்தாங்கி காவல் துறை.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகப் புகார் எழுந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, அரசர்குளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிய வந்தது. `என் மகனை மீட்டு அவனுக்குப் போதை மருந்துகள் வழங்குபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த மாணவனின் தாய், நாகுடி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார்கொடுத்தார்.

Police arrest drug dealers
Police arrest drug dealers

இதையடுத்து, அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலா தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் அன்றாடச் செயல்பாடுகளைத் தனிப்படை போலீஸார் கவனித்துவந்தனர். அரசர்குளத்தில் போதைக்கு அடிமையானதாகக் கூறப்பட்ட அந்த மாணவனைப் பிடித்து விசாரித்தனர். அவனிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும், கையில் ஊசிகள் போட்டதற்கான தழும்புகளும் இருந்தன.

அவனிடம் போலீஸார் விசாரித்தனர். `புதுக்கோட்டையிலிருந்து கேன்சர் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிவந்து, அதை நீரில் கரைத்து, ஊசிபோட்டுக் கொள்வேன்’ என்று அவன் போலீஸாரிடம் தெரிவித்தான். அதிச்சியடைந்த போலீஸார், மாத்திரைகள் கிடைக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, அங்கு மாறுவேடத்தில் சென்று, தங்களுக்கும் போதை ஊசி மருந்துகள் தேவைப்படுவதாகக் கேட்டுள்ளனர்.

Drug dealers arrested by Police
Drug dealers arrested by Police

முதலில், தங்களிடம் மருந்துகள் ஏதும் இல்லை என்று விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், போலீஸார் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறியுள்ளனர். அதன்பிறகு வலி நிவாரணி மாத்திரைகளை போலீஸாரிடம் எடுத்துக் கொடுத்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீஸார் மாத்திரை விற்பனை செய்த ஜெகன் மற்றும் ரியாஸ் கான் ஆகியோரை கையும்களவுமாக பிடித்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், திருப்பூரிலிருந்து மாத்திரைகளை கெளதம் ராஜா என்பவர் தங்களுக்கு விநியோகித்து வருவதாகவும், இதற்குச் சிலர் உதவுவதாகவும் கூறியுள்ளனர்.

திருப்பூர் சென்று கௌதம் ராஜாவை போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து பானுமதி, வாசு, வினோஜன் என மொத்தம் 6 பேரை இதுதொடர்பாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விற்பனைக்காக வைத்திருந்த ரூ.3,50,000 மதிப்பிலான 2,100 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைதுசெய்த, அறந்தாங்கி டி.எஸ்.பி கோகிலாவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Police arrest drug dealers
Police arrest drug dealers

டி.எஸ்.பி கோகிலா கூறுகையில், ``அறந்தாங்கி பகுதியில் பள்ளி மாணவர்களும் போதைக்கு அடிமையாகி வருவது வேதனையளித்தது. இதுதொடர்பான புகார்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு வரவே, தனிப்படை அமைத்து மாணவர்களைக் கண்காணித்தோம். கஞ்சா மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம். போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை அவர்கள் உபயோகிப்பது, தொடர் விசாரணையில்தான் தெரியவந்தது.

`வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகித்தால், உடல் அரிப்பு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்' என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே, மாணவர்களை இதிலிருந்து மீட்பதற்காக விசாரணையை முடுக்கிவிட்டோம். மாணவர் கொடுத்த தகவலின் பேரில் முதலில் இருவரைப் பிடித்து விசாரித்தோம். திருப்பூர் அவினாசியைச் சேர்ந்த கௌதம் ராஜா என்பவர்தான் இதற்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார்.

DSP Gokila
DSP Gokila

மருந்துக்கடையில் வேலை பார்க்கும் கெளதம் ராஜா போலி பில்கள் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியுள்ளார். ஒரு மாத்திரையை ரூ.27-க்கு வாங்கி, அதை வெளியில் ரூ.100-க்கு விற்றுள்ளார். அந்த விலைக்கு மாத்திரையை வாங்கிய தரகர்கள், மாணவர்களிடம் ஒரு மாத்திரையை ரூ.150 வரையிலும் விற்றுள்ளனர். கடந்த 3 மாதங்களாக மட்டுமே விற்பனை செய்வதாகக் கூறியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய நபர்களைப் பிடித்துவிட்டோம். இதில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ என அனைவரும் ஒரு குழுவாகச் சேர்ந்து தீவிரமாகச் செயல்பட்டதால், கும்பலை விரைவாகப் பிடிக்க முடிந்தது. முக்கிய நபர்களைப் பிடித்துவிட்டாலும், இதுபற்றித் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

Vikatan
பின் செல்ல