Published:Updated:

`எம்.எல்.ஏ-விடம் நிதி வாங்கித் தர்றேன்!' - ராஜபாளையம் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

10ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார் ( ஆர்.எம்.முத்துராஜ் )

ராஜபாளையம் அருகே சட்டமன்ற உறுப்பினரிடம் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி 10-ம் வகுப்பு மாணவியைப் பள்ளியிலிருந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நண்பரைச் சந்திக்கச் சென்ற சிறுமி 5 பேரால் பாலியல் வன்கொடுமை!- பொள்ளாச்சியில் அடுத்த அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர் செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். அரசுப் பள்ளிக்குச் சென்ற இவர் அங்கே 10-ம் வகுப்பு படிக்கும் தன் உறவினர் மகளுக்கு சட்டமன்ற உறுப்பினரிடம் கல்வி உதவித்தொகை பெறுவதற்காகப் புகைப்படம் எடுக்க வேண்டும். எனவே, அந்த மாணவியை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆனால், பெற்றோர் இல்லாமல் யாரையும் அனுப்ப முடியாது எனத் தலைமையாசிரியர் கூறியதால் அதே பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியரிடம் சுரேஷ்குமார் இதைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். எனவே, இதை உண்மை என்று நம்பிய அந்த ஆசிரியரும் அங்கே வந்து என்னுடைய உறவினரான சுரேஷ்குமார் அந்தப் பெண்ணுக்கும் உறவினர்தான் என எடுத்துக் கூறியுள்ளார். எனவே, தலைமையாசிரியரும் அந்த மாணவியை இளைஞரோடு அனுப்பி வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார்
ஆர்.எம்.முத்துராஜ்

பள்ளியிலிருந்து அழைத்துச் சென்ற சுரேஷ்குமார் புகைப்படம் எடுக்கச் செல்லாமல், அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு அந்த மாணவியை அழைத்து சென்று அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அதைத் தன்னுடைய மொபைலிலும் புகைப்படம் எடுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டார். நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மாணவி கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞரை கைது செய்தனர்.