Published:Updated:

கொலையில் முடிந்த பெண் விரோதம், பணமோசடி! - திருச்சி இளைஞருக்கு நேர்ந்த துயரம்

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டிய ரஜினி ரசிகர், கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட பார்த்தசாரதி
கொல்லப்பட்ட பார்த்தசாரதி

திருச்சி மாவட்டம் லால்குடி சின்னச்செட்டி பகுதியைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணி. இவரது மகன் பார்த்தசாரதி, கூலி வேலை பார்த்து வந்தார். ரஜினி ரசிகரான இவர், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் பணம் வசூல்செய்து, அந்தப் பகுதியில் பெரிய விநாயகர் சிலையை வைத்தனர். விழாக்குழுவில் பார்த்தசாரதி, கார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

விநாயகர் சிலை
விநாயகர் சிலை

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முடித்துவிட்டு, நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது பார்த்தசாரதி, விநாயகர் சிலை அமைப்பதற்காக வசூல் செய்த பணத்தை தினேஷ் குமார் ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார். முன்னரே, தினேஷுக்கும் பார்த்தசாரதிக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன்பகை இருந்து வந்த நிலையில், பிள்ளையார் சிலை வாங்கியதில் பண மோசடி செய்ததாகக் கூறியதைக் கேட்ட தினேஷ் ஆத்திரமடைந்தார்.

அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதைப் பார்த்த கூட்டாளிகளும் விழாக் குழுவினரும் அவர்களை விலக்கி சமரசம்செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் மீண்டும் தினேஷும் பார்த்தசாரதியும் தகராறில் ஈடுபட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது திடீரென இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் கழுத்தில் குத்தினார் தினேஷ். இதைக் கண்ட பார்த்தசாரதியின்இதனா நண்பர் கார்த்திகேயன் தடுக்க முயன்றார்.

கொல்லப்பட்ட பார்த்தசாரதி
கொல்லப்பட்ட பார்த்தசாரதி

இதனால், அவரது இடது கையில் கத்திகுத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்தவெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்தனர். அதிக அளவில் ரத்தம் வெளியேறி, பார்த்தசாரதி உயிருக்குப் போராடினார். அக்கம்பக்கத்தினர், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச்சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார். கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லால்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார், தினேஷ்குமாரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறார். கத்திக்குத்து நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் சம்பவம் தொடரக்கூடாது என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ்குமார்
தினேஷ்குமார்

போலீஸாரிடம் தினேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், “ எனக்கும் அவனுக்கும் ஏற்கெனவே ஆகாது. இந்தநிலையில் விநாயகர் சிலை வாங்கியதில் நான் பணத்தை மோசடி செய்துவிட்டதாகக் கூறினான். அதனால் கத்தியால் குத்தினேன்” எனக் கூறியிருக்கிறார்.

விநாயகர்சதுர்த்தி கொண்டாடியதில், இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது, திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.