Published:Updated:

ராமநாதபுரம் அதிர்ச்சி: குடும்பத் தகராறு - குழந்தைகளைக் குளத்தில் வீசிக் கொன்ற தாய்!

க்ரைம் - கொலை
க்ரைம் - கொலை

குடும்பத் தகராறில் குழந்தைகளைக் குளத்தில் மூழ்கடித்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

திருவாடானை அருகே பெற்ற தாயே தனது இரு குழந்தைகளை தாமரைக்குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக்கூலித் தொழிலாளி கணேசன். இவருடைய மனைவி சோனியாகாந்தி (27). இவர்களுக்கு நியா சந்தோஷிகா என்ற 3 வயது பெண் குழந்தையும், சாய் கிருஷ்த்திகேஷ் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனர். கணேசன் தம்பதியர், பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்துவருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நாச்சியந்தேல் கிராமத்தில், தனது வீட்டின் எதிரேயிருக்கும் தாமரைக்குளத்தில் குழந்தைகளை தாய் சோனியா முழ்கடித்துக் கொலை செய்தார் என்று கூறப்படுகிறது.

சோனியாகாந்தி
சோனியாகாந்தி

கணேசனின் பெற்றோர், `குழந்தைகள் எங்கே?’ என்று சோனியாவிடம் நேற்று கேட்டிருக்கிறார்கள். வீட்டுக்குள் படுத்திருப்பதாக சோனியா அவர்களிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குழந்தைகளுக்கு பதில் தலையணையை குழந்தைகள்போலப் படுக்கவைத்து போர்வையால் மூடியிருப்பதைக் கண்டனர். மேலும், சோனியாவின் ஆடைகள் நீரில் நனைந்து ஈரமாக இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் எதிரிலுள்ள தாமரைக்குளத்தில் தேடியபோது குழந்தைகள் அதில் சடலமாகக் கிடந்திருக்கிறார்கள்.

25 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு; மாஜிஸ்திரேட் முன்னிலையில் கொலை செய்த பா.ஜ.க பிரமுகர்! - நடந்தது என்ன?

இதையடுத்து, திருவாடானை போலீஸாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக நாச்சியேந்தல் கிராமத்துக்கு வந்த போலீஸார், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தாமரைக்குளத்தில் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தாய் சோனியா காந்தியைக் கைது செய்த போலீஸார், குழந்தைகள் இறப்புக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

குடும்பத் தகராறில் குழந்தைகளைக் குளத்தில் மூழ்கடித்திருக்கிறார்.
போலீஸ்

இது தொடர்பாக திருவாடானை போலீஸார் நடத்திய விசாரணையில், சோனியா காந்தி தனது கணவர் கணேசனிடம் தனிக்குடித்தனம் செல்ல வலியுறுத்திவந்த நிலையில், கணேசன் அதை ஏற்கவில்லையாம். அதனால், ஆத்திரத்தில் தான் பெற்ற குழந்தைகள் என்றுகூடப் பாராமல் இரு குழந்தைகளையும் குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், கடந்த சில நாள்களாக சோனியா காந்தி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் திருவாடானை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு