Published:Updated:

`அடுத்தடுத்து திருமணம்; டிஎன்ஏ பரிசோதனை!' -அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமநாதபுரம் இளம்பெண்

ராமநாதபுரம்
ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் தேவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் தனது மனைவி தேவியை விவாகரத்து செய்துள்ளார் பால்ராஜ்.

ராமநாதபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரே பெண் அடுத்தடுத்து நான்கு நபர்களுடன் குடும்பம் நடத்திய நிலையில், அப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பத்தினால் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர், தனது 8 மாதக் குழந்தையை விற்பனை செய்வதாகக் குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கிராமத்துக்குச் சென்ற அதிகாரிகள் அப்பெண்ணை குழந்தையுடன் விசாரணைக்காக தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

அங்கு நடந்த விசாரணையில் தேவி குழந்தையை விற்க முயற்சி செய்யவில்லை எனத் தெரியவந்தது. அதேநேரத்தில் விற்க முயற்சி செய்வதாகக் கூறப்பட்ட குழந்தைக்கு தந்தை யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குக் காரணம், அந்தக் குழந்தையின் தாயான தேவி அடுத்தடுத்து 4 ஆண்களுடன் குடும்பம் நடத்தியதுதான்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாயான தேவிக்கும் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இடையே 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் தேவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் தனது மனைவி தேவியை விவாகரத்து செய்துள்ளார் பால்ராஜ். இதனால் வினோத்துடன் தேவி சேர்ந்து வாழ்ந்த நிலையில் வெளிநாடு சென்ற வினோத் அங்கேயே உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

இதன் பின்னர் உத்திரகோசமங்கையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் தேவி வாழ்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தேவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே இறந்துபோன வினோத்தின் நினைவாக அக்குழந்தையை அவரது சகோதரி வளர்த்து வந்துள்ளார். இதனிடையே வேல்முருகனை விட்டுப் பிரிந்த தேவி, தற்போது மாற்றுத்திறனாளி ஒருவருடன் வாழ்க்கை நடத்திவருகிறார்.

Vikatan

மேலும் 8 மாதக் கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தேவி, தனது குழந்தையை விற்றுவிட்டதாக வேல்முருகன் புகார் செய்துள்ளார். மேலும் தனக்குப் பிறந்த அந்தக் குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சொந்தம் கொண்டாடியுள்ளார்.

இதனால் குழப்பமடைந்த அதிகாரிகள் தேவியுடன் குடும்பம் நடத்திய நால்வரில் யாருக்குக் குழந்தை பிறந்தது என்பதைக் கண்டறிய நீதிமன்றத்தை நாடவும் அதுவரை வாரம் ஒருமுறை தேவி தனது குழந்தையுடன் ராமநாதபுரம் குழந்தைகள் நல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். வடிவேலு நடித்த `மருதமலை' படத்தில் வரும் நகைச்சுவை காட்சியே தற்போது ராமநாதபுரத்தில் உண்மைச் சம்பவமாக நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு