Published:Updated:

`இப்படி நடக்காமப் பார்த்துக்கோங்க!'-அலுவலகத் தகராறால் போக்குவரத்துக்கழகப் பெண் ஊழியர் விபரீத முடிவு

இரா.மோகன்
உ.பாண்டி

கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் முன்னிலையில் சக ஊழியர்களான பானுமதி மற்றும் கமலா ஆகிய இருவரும் தன்னிடம் தகராறு செய்ததால் மனமுடைந்து இந்த முடிவை எடுக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு இந்த இரண்டு பணியாளர்களும்தான் பொறுப்பு.

ஷோபனா
ஷோபனா

உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த போக்குவரத்துக் கழகப் பெண் ஊழியர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷோபனாவின் உடலை மீட்கும் தீ அணைப்புப் படையினர்
ஷோபனாவின் உடலை மீட்கும் தீ அணைப்புப் படையினர்
உ.பாண்டி

ராமநாதபுரம் காட்டூரணி பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா (41). ராமநாதபுரத்தில் உள்ள நகர் பேருந்து பணிமனையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் நம்புராஜன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் ஷோபனா தனது 9 வயது மகள் மற்றும் வயதான மாமனார் ஆகியோருடன் ராமநாதபுரம் காட்டூரணி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஷோபனா இன்று காலை காட்டூரணி கரையில் உள்ள பொதுக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர், போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கேணிக்கரை காவல்நிலைய போலீஸார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து ஷோபனாவின் உடலை மீட்டனர்.

ஷோபனா
ஷோபனா

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையின் போது ஷோபனாவின் படுக்கையிலிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், ``கடந்த 7-ம் தேதி காலை எனது அலுவலகத்தில் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் முன்னிலையில் சக ஊழியர்களான பானுமதி மற்றும் கமலா ஆகிய இருவரும் தன்னிடம் தகராறு செய்ததால், மனமுடைந்து இந்த முடிவை எடுக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு இந்த இரண்டு பணியாளர்களும்தான் பொறுப்பு. அடிக்கடி இந்தப் பணியாளர்கள் தகராறு செய்து வருகின்றனர். இவர்கள் மீது நிர்வாகம் தக்க முடிவு எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையை மேனேஜரிடம் சொல்ல விரும்பவில்லை. தயவுசெய்து இது போன்ற பிரச்னைகள் இனி வரும் காலங்களில் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து காலையில் பெட்டி எடுக்க வந்த டிரைவர், கண்டக்டர்களிடம் விசாரணை செய்து கொள்ளவும்.

என்னுடைய பர்ஸில் ஏ.டி.எம் கார்டு உள்ளது. அதில் உள்ள பணத்தை சீட்டுக்கு எடுத்துக்கொடுக்கவும். தயவு செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும். நகைகள் அனைத்தும் பீரோவில் உள்ள டப்பாவில் உள்ளது. எனது மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். பக்கத்தில் உள்ள கிணற்றில் பிணம் உள்ளது எடுத்துக் கொள்ளவும். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறு நடைபெறாமல் உயர் அதிகாரிகள் பார்த்துக்கொள்ளவும்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

ஷோபனாவின் கடிதம்
ஷோபனாவின் கடிதம்

இதையடுத்து ஷோபனாவின் உடலைக் கைபற்றிய கேணிக்கரை போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ஷோபனா எழுதியுள்ள கடிதம் மற்றும் அதன் உண்மைத் தன்மை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சக பெண் ஊழியர்களின் செயலால் மனமுடைந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.