Published:Updated:

பெண்களிடம் பணம், நகை பறிப்பு; பாலியல் மிரட்டல் கும்பல் கைது!-பரமக்குடியில் ஒரு`பொள்ளாச்சி' அதிர்ச்சி

Representational Image
Representational Image

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைப் போன்று பரமக்குடி பகுதியிலும் நடந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் தனியாக பயணிக்கும் இளம்பெண்கள் மற்றும் தனிமையில் வசிக்கும் பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதுடன், அதைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு பணம் மற்றும் நகைகளைப் பறித்து வந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

Representational Image
Representational Image

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர், பரமக்குடி சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இளம் பெண்கள் மற்றும் கணவனைப் பிரிந்து தனிமையில் வாழும் பெண்கள் மற்றும் தவறான செயல்களில் ஈடுபடும் பெண்களை தங்கள் வலையில் சிக்க வைத்தும் மிரட்டியும் கூட்டுப் பாலியல் செயலில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில், பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை சிலர் காரில் கடத்திச் சென்று ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதுடன் தனது நகைகளைப் பறித்துக் கொண்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செல்போன் எண்ணில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் அந்தக் கும்பலைச் சேந்தவர்களைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் பரமக்குடி பொன்னையாபுரம் முகம்மது சீதக்காதி, பொட்டிதட்டி காலனி இளஞ்செழியன், முத்துவயல் சேதுபாண்டி, முத்துசெல்லபுரம் தனசேகரன், அரவிந்தசாமி, காளிதாஸ் ஆகிய 6 பேர் கும்பல் சிக்கியது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.

போலீஸார் கைது செய்த பாலியல் மிரட்டல் கும்பல்
போலீஸார் கைது செய்த பாலியல் மிரட்டல் கும்பல்

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தனியாக இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இளம் பெண்கள், கணவரைப் பிரிந்து தனிமையில் வாழும் பெண்கள் மற்றும் தவறான தொடர்புகளில் ஈடுபட்டு வரும் பெண்கள்தான் இவர்கள் குறி. அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களை தங்களின் வலையில் சிக்க வைத்து பாலியல் செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்தக் கும்பல். மேலும், கணவனை விட்டு தவறான உறவில் ஈடுபடும் பெண்களைக் கண்டறிந்து அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வது மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் உள்ளவரையும் வரவழைத்து அவர்கள் இருவரையும் தனிமையில் உல்லாசமாக இருக்க வைத்து அதை வீடியோ எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி சம்பந்தப்பட்ட பெண்களிடமிருந்து நகை, தங்கச் செயின் மோதிரம் மற்றும் பணம் உள்ளிட்ட பொருள்களை தொடர்ந்து பறித்து வந்துள்ளது தெரியவந்தது.

இந்த 6 பேரும் சொகுசு கார் ஒன்றில் உல்லாசமாக ராமநாதபுரம் பகுதியைச் சுற்றியுள்ள போகலூர், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனங்களில் சென்று சட்டவிரோதமாக முயல், மயில் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களைப் பயன்படுத்திய நிலையில் போதை தலைக்கேறியதும் அவர்களிடம் சிக்கியுள்ள பெண்களை போன் செய்து வரவழைத்து 6 பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்கள் மற்றும்பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
கைதானவர்கள் மற்றும்பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

இதையடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுவந்த 6 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்கள் பயன்படுத்திய சொகுசுக் கார் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்தக் கும்பலிடம் அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களும் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைப் போன்று பரமக்குடி பகுதியிலும் நடந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு