Published:Updated:

`கையைப் பிடித்தே கொரோனாவைக் குணமாக்குவேன்!’ -ராணிப்பேட்டைக்கு அதிர்ச்சி கொடுத்த போலி மருத்துவர்

போலி மருத்துவர் மாதவன்
போலி மருத்துவர் மாதவன்

ராணிப்பேட்டையில், கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரப்படுத்திய போலி மருத்துவரை போலீஸார் கைதுசெய்தனர்.

காய்ச்சல் ‘சீசன்’ வந்துவிட்டால் போதும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் ‘புற்றீசல்’ போல் உருவாகிவிடுகிறார்கள். தனியார் மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாத ஏழை மக்களே இவர்களின் இலக்கு. தவிர, சுகாதாரத் துறை அதிகாரிகளின் கண்களில் படாமல் நடமாடும் மருத்துவர்களாகவும் ‘டிப்டாப்’ உடை அணிந்து கிராமங்களில் வலம் வருகிறார்கள். இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டியது, அவசியம்.

Representational Image
Representational Image

‘பிடிபடும் போலி மருத்துவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்’ என்று சுகாதாரத் துறை அதிகாரிகள், வாய் வார்த்தையாக மட்டுமே எச்சரித்துவருகிறார்கள். இதுவரை கடும் நடவடிக்கையை எடுத்தபாடில்லை. நகர்ப் பகுதியில் சுற்றித் திரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் கிராமங்களைக் குறி வைக்கிறார்கள் போலி மருத்துவர்கள். கிராமப்புற மக்களும் அறியாமையால் இவர்களிடம் செல்கிறார்கள்.

இந்த நிலையில், கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதாகப் போலி மருத்துவர்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் வலம் வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதற்குச் சான்றாக ராணிப்பேட்டையில் கொரோனாவுக்கான கைராசி மருத்துவர் என்று விளம்பரப்படுத்தி மக்களின் உயிரோடு விளையாடிய போலி மருத்துவர் சிக்கியிருக்கிறார்.

மாதவன் நடத்தி வந்த கிளினிக்
மாதவன் நடத்தி வந்த கிளினிக்

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் ‘சக்தி ஹெல்த் கேர்’ என்ற பெயரில் மாதவன் (33) என்பவர் கிளினிக் வைத்துள்ளார். இவர், வாலாஜாபேட்டையை அடுத்த கொளத்தேரிப் பகுதியைச் சேர்ந்தவர். ‘நான் கையைப் பிடித்துப் பார்த்தே காய்ச்சலைக் குணமாக்குவேன்’ என்று மருத்துவரின் மிடுக்குடன் கிளினிக் முன்பு விளம்பரப் பலகையையும் வைத்துள்ளார் மாதவன்.

சாதாரண சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த மக்களிடம், ‘உங்களுக்குக் கொரோனா அறிகுறி உள்ளது. இப்படியே விட்டால் உயிருக்கே ஆபத்து’ என்று பயமுறுத்தியுள்ளார். சிகிச்சை அளிப்பதுபோல் நடித்து ‘பாராசிட்டமால்’ மாத்திரைகளைக் கொடுத்து ரூ.400, ரூ.500 பணம் வாங்கியுள்ளார். இதுபற்றிப் பொதுமக்களிடமிருந்து ராணிப்பேட்டை போலீஸாருக்குப் புகார் சென்றது.

மருந்து மாத்திரை
மருந்து மாத்திரை

போலீஸார் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் அந்த கிளினிக்கிற்கு விரைந்து சென்றனர். மாதவனைப் பிடித்து விசாரித்தபோது, அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. ப்ளஸ் டூ படித்துள்ள மாதவன் சில மருத்துவக் குறிப்புகளை மனப்பாடம் செய்துகொண்டு மருத்துவராக வலம் வந்துள்ளதும் தெரியவந்தது. அவரைக் கைதுசெய்த போலீஸார், கிளினிக்கிற்கும் அதிரடியாக ‘சீல்’ வைத்துள்ளனர்.

மேலும், கிளினிக்கிலிருந்து அதிக அளவிலான பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்து மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த மருந்துகளை ‘அவர் எங்கு வாங்கினார்?’ என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். ‘‘மருத்துவர்களின் கல்வித் தகுதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் ஆகிய விவரங்களைப் பலகையில் எழுதி கிளினிக் அல்லது மருத்துவமனை முன்பு பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.

போலி மருத்துவர் மாதவன்
போலி மருத்துவர் மாதவன்

மாற்று மருத்துவமான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய தரப்பினரும் தங்கள் துறை சார்ந்த சிகிச்சைகளை மட்டுமே அளிக்க வேண்டும். அலோபதி சிகிச்சை அளிக்கக் கூடாது. அதே வேளையில், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு